வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/1

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது: தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர். இதில் ‘தேவர் குறள்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திரு நான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலைதான் தொடர்கிறது