வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/18
பஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார். இந்நூல் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டிருந்த ஒரு இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியர் அறிந்திருந்த ஐந்திரம் இந்திரன் என்பவனால் செய்யப்பட்ட வடமொழி நூல். தொல்காப்பியர் நரம்பின் மறை பற்றிக் குறிப்பிடுகிறார். பண், திறம் என்பன இசையின் கூறுகள். ஒருவேளை இந்த ஐந்திரம் என்பதன் வடிவம் 'ஐந்திறம்' என இருந்திருக்குமாயின் அது இந்தப் பஞ்சமரபு நூலின் முந்துநூல் எனக் கருதலாம்.