வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/30
தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது. இந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது.
கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது. இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.