வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/4
பெத்தானியா என்பது புதிய ஏற்பாட்டில் மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமாகக் குறிப்பிடப்படும் இடம் ஆகும். இயேசு எருசலேம் நகருக்குள் அரசர் போல நுழைந்த பிறகு இந்த ஊரில் தங்கியிருந்தார் என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இவ்வூரிலிருந்து விண்ணகம் சென்றார் என்றும் புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள் உள்ளன.
பாலஸ்தீன நாட்டில், மேற்குக் கரை என்னும் பகுதியில் உள்ள "அல்-எய்சரியா" என்னும் இன்றைய ஊரே முற்காலத்தில் பெத்தானியா என்று அழைக்கப்பட்ட இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. "அல்-எய்சரியா" என்பதற்கு "இலாசரின் இடம்" என்பது பொருள். இந்த இடத்தில் இலாசரின் கல்லறை உள்ளதாக நம்பப்படுகிறது. பெத்தானியா எருசலேமிலிருந்து கிழக்காக ஒன்றரை மைல் (2 கி.மீ) தொலையில், ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. அங்கு அடையாளம் காட்டப்படுகின்ற மிகப் பழைய வீடு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. அதுவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மரியா, மார்த்தா, இலாசர் என்போரின் வீடு என்று கூறப்படுகிறது. இங்கே பெருந்திரளான மக்கள் திருப்பயணிகளாகச் செல்கின்றனர்.
இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது בית עניא, (Beth anya = பெத் ஆனியா) என்று வரும். இதற்கு "துன்பத்தின் வீடு" என்பது பொருள். கி.பி. நான்காம் நூற்றாண்டில் புனித ஜெரோம் என்பவர் இந்த விளக்கம் தந்தார். இதை "ஏழையர் வீடு" அல்லது "ஏழைகளுக்கு உதவும் வீடு" எனவும் பொருள்படுவதாகக் கருதலாம். இந்த விளக்கத்தின்படி, பெத்தானியாவில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஓர் இல்லம் இருந்திருக்கலாம். "ஏழை" என்னும் சொல் வறியவர்களை மட்டுமன்றி, நோயுற்றோர், எருசலேமுக்கு வந்த திருப்பயணிகள் போன்றோரையும் குறித்திருக்கலாம்.