வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/1

ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும். இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.