மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது
இராமாயணம்.
வியாச முனிவர் சொல்ல
விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது
சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது.
இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.