கர்மா

(பழவினை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்மா(Karmā) அல்லது வினைப்பயன் என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது.[1]

இந்து மற்றும் சார்ந்த சமயங்களில் கர்மம் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்

என்கிறது யசூர் வேதத்தில் காணப்படும், பிரகதாரண்யக உபநிடதம் 4.4.5

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன். இந்த வினைப்பயன், சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்), பிராரப்த் கர்மம் (செயல்படுகின்ற வினைப்ப்யன்) மற்றும் ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்) என மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது.

சஞ்சித கர்மம் அல்லது சேமித்த வினைப்பயன்

தொகு

இது நல்வினை மற்றும் தீவினை அனைத்தின் தொகுதி. வரும் பிறவிகளில் செயல்படப் போவது இவ்வினைப்பயனே. இந்தப் பிறவியில் இவ்வினைப்பயன் செயல்படாத நிலையில் உள்ளது. இதிலிருந்து ஒரு பகுதிதான் பிராரப்த கர்மமாக ஒரு குறிப்பிட்ட பிறவியில் செயல்படுகிறது.[2]

பிராரப்த கர்மம் அல்லது செயல்படுகின்ற வினைப்பயன்

தொகு

ஒரு குறிப்பிட்ட பிறவியில், அந்தப் பிறவிக்கு ஏற்ற வினைப்பயன்கள் மட்டும் செயல்படுகின்றன். அவ்வாறு ஒரு பிறவியில் செயல்படத் தொடங்கியுள்ள வினைப்பயனே இது.[2]

ஆகாமிய கர்மம் அல்லது வர இருக்கின்ற வினைப்பயன்

தொகு

வினைப்பயனின் விளைவாக இப்பிறவி அமைந்தாலும், வினைப்பயன் அனுபவிக்கின்ற வேளையிலே புதிய வினைப்பயன்கள் சேர்கின்றன. இவ்வாறு ஒரு பிறவியில் சம்பாதிக்கின்ற வினைப்பயன் ஆகாமிய கர்மம் எனப்படுகிறது. இது செயலின் தன்மைக்கு ஏற்ப இந்தப் பிறவியில் பலன் தந்தாலும் தரலாம்: அல்லது, சஞ்சித கர்மத்துடன் சேர்க்கப்பவும் செய்யலாம்.[2]

கர்மங்களின் பலன்

தொகு

வேதாந்த தத்துவத்தின்படி தீவினைகள் செய்தவர்கள், மறுபிறவியில் கீழ் உலகங்களில் உழன்று மீண்டும் பூமியில் இழி பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம், பித்ரு லோகம் போன்ற மேலுலகங்களுக்குச் சென்று, நல்வினைப்பயன்கள் முடிந்தவுடன் மீண்டும் புவியில் உயர்பிறப்பாளர்களாகவும் பிறப்பர். தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும் பிறவிச்சுழற்சியில் இருந்து தப்பி, பிறப்பிலா பெருவாழ்வு அடைய இயலாது. பிறப்பிலா பெருநிலை என்பது, வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவினை மற்றும் நல்வினைப்பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம்,தியாகம், தவம் போன்ற நற்குணங்களுடன் குரு மற்றும் மெய்யியல் சாத்திரங்களின் துணையுடன் ஆத்மாவை அறிந்து மன அமைதி பெறுதலே மரணமிலாப் பெருவாழ்வு நிலையாகும்.

தமிழ் இலக்கியத்தில் ஊழ்வினை அல்லது வினைப்பயன்

தொகு

கர்மாவினை ஊழ் அல்லது ஊழ்வினை என்று தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ ஊழ்வினை என்ற சொல்லை கையாள்கிறார்.

அறிவியல் நோக்கு

தொகு

ஒன்றின் காரணமாக (வினை) இன்னொரு நேரடி நிகழ்வு (விளைவு) நிகழும் என்பதை வினை விளைவுக் கோட்பாடு குறிக்கின்றது. இது கர்ம கருத்துவுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. உயிருக்கு ஒரு வாழ்க்கையில் கணிக்கப்படும் கர்ம வினைகள் அடுத்த வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கின்றன போன்ற கூறுகளுக்கு அறிவியல் நோக்கில் எந்த ஆதாரமும் இல்லை.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "karma | Indian philosophy | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
  2. 2.0 2.1 2.2 http://www.hinduism.co.za/karma%26.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்மா&oldid=3913622" இலிருந்து மீள்விக்கப்பட்டது