முதன்மை பட்டியைத் திறக்கவும்

கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[1][2] பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.[3]

சித்தார்த்த கௌதம புத்தர்
Siddhārtha Gautama Buddha
Buddha in Sarnath Museum (Dhammajak Mutra).jpg
கிபி 4ம் நூற்றாண்டின் புத்தர் சிலை - அரசு அருங்காட்சியகம், சாரநாத்
பிறப்புகிமு 563 அல்லது 480[1][2]
லும்பினி, நேபாளம்
இறப்புகிமு 483 அல்லது 400(வயது 80)
குசிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அறியப்படுவதுபௌத்த சமயத்தை உருவாக்கியவராவார்
முன்னிருந்தவர்காசாபா புத்தர்
பின் வந்தவர்மைத்ரேயா புத்தர்
பெற்றோர்சுத்தோதனர்மாயா
வாழ்க்கைத்
துணை
யசோதரை
பிள்ளைகள்ராகுலன்

புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் வரலாறுதொகு

சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார்.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;

 1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
 2. ஒரு நோயாளி
 3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
 4. நாலாவதாக ஒரு முனிவன்

இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம்.

கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவருக்குக் கிடைத்தனர்.

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு நல்லறம் புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்தச் சமய நூல்களில் அழைக்கப்படும்.

பலநாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார்.

எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைக் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார்.

இந்நிலையே ததாகதர் நிலை என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார்.[4] புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர்.[5]

புத்தரின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவச் சிற்பங்கள்

பெயர் விளக்கம்தொகு

சித்தார்த்தர், மெய்ஞானம் பெற்றது "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கிய முனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். தன் ஆசையையும், அகந்தையையும் புத்தர் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர்.

குடும்பம்தொகு

கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும் பிறந்த கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழு நாளில் மாயாதேவி இறந்ததால், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி புத்தரை வளர்த்தார்.[6] சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார்.

புத்தரின் கூற்றுக்கள்தொகு

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார்.

புத்தரின் கொள்கைகள்தொகு

 
காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம புத்தரின் மகாபரிநிர்வாணத்தை விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், காலம் 2-3-ஆம் நூற்றாண்டு

கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்ர். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன் ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு,பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன.

துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்ததோடு அவர்களுக்கென பிக்குகளின் சங்கத்தையும் உருவாக்கினார். அரசர்களும் நில பிரபுக்களும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்கு விகாரைகள் மற்றும் குடைவரைகள் அமைத்துக்கொடுத்து நிலபுலங்களைத் தானம் தந்தனர். பௌதத சமய உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச சீலங்கள்

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது. கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு அசோகர், கனிஷ்கர் முதலானோர் பேருதவிப் புரிந்தனர்.

புத்தரின் சீடர்கள்தொகு

புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர், மகாகாசியபர், சுபூதி, பூரணர், காத்தியாயனர், அனுருத்தர், உபாலி, ராகுலன், ஆனந்தர் மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர்.

புத்தரும் பிற மதங்களும்தொகு

சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:சைனம்(சமணம்), ஆசீவகம், வைதீகம் (பிராமணம்) ஆகியவை.

மேலும்,இவரது கால கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம், ஆத்மா, அநாத்மா போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர் புத்தர் ஆவார்.

புத்தரின் மற்ற பெயர்கள்தொகு

ததாகதர்தொகு

சமசுகிருத மொழியில் கௌதம புத்தரை ததாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் பிறவிச்சுழற்சியை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.

பதந்தர்தொகு

மற்ற மதங்களில் புத்தர்தொகு

பாகவதத்தில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றுகிறது.[7]

இந்திய புத்தர் கோயில்கள்தொகு

இந்தியாவில் புத்தருக்கு பல கோயில்கள் இருப்பினும், புத்தர் ஞானம் அடைந்த, பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில், பன்னாட்டு பௌத்தர்களுக்கு தலைமைக் கோயிலாக திகழ்கிறது.

 

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 http://www.bbc.co.uk/tamil/global/2013/11/131126_buddha_newfind.shtml
 2. 2.0 2.1 http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131126_buddha_birthplace_video.shtml
 3. பக். 22, அத். 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399
 4. பக்கம் 35, அத்தியாயம் 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399
 5. பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு நூல் - மயிலை சீனி. வேங்கடசாமி
 6. கௌதம புத்தரின் வாழ்க்கை
 7. ஸ்ரீமத் பாகவதம்

துணை நூற்கள்தொகு

 • பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399
 • பௌத்தமும் தமிழும்,மயிலை சீனி.வேங்கடசாமி,2007, பாவை பப்ளிகேஷன்ஸ்,இராயப்பேட்டை, சென்னை-14 ISBN 81 7735 374 8

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதம_புத்தர்&oldid=2769115" இருந்து மீள்விக்கப்பட்டது