போரோபுதூர்

போரோபுதூர் (Borobudur, or Barabudur): என்பது இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது. இவை, 2672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட கற்சுவர்களாலும், 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது[1]. உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள இருந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன.

போரோபுதூர்

வரலாறுதொகு

மத்திய ஜாவாவில் 8ம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த அரசு ஒன்று உருவானது. பின்னர் மாத்தாரம் அரசு எனப் பெயர்பெற்ற அதன் மன்னர்கள் சைலேந்திரர் (மலை அரசர்) என்னும் இந்தியப் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டனர். அவர்கள் கட்டிய கோயில்களுள் போரோபுதூர் மிகவும் புகழ் பெற்றது.இதை சமரதுங்கா என்பவர் 8ஆம் நூற்றாண்டில் கட்டினார். 9ம் நூற்றாண்டின் மத்தியில், சைலேந்திரர்களின் அரசு ஸ்ரீவிஜயா அரசைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வந்தது.[2] பிரமாண்டமான இக் கோயில் பராமரிக்கப்படாததால் 11ஆம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதைந்து போனது. 14 ஆம் நூற்றாண்டில், ஜாவாவின் பௌத்த, இந்து அரசுகளின் வீழ்ச்சியுற்று, ஜாவாவில் இசுலாம் தலையெடுத்ததோடு போரோபுதூர் கைவிடப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன[3] 100 வருடங்களுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கோயிலைத் தோண்டியெடுத்து புதுப்பித்தார்கள். 1814 ஆம் ஆண்டில் ஜாவாவின் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த தாமஸ் ராஃபில்ஸ் (Thomas Raffles) என்பவரால் இது மீண்டும் கண்டிபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பின்னர் இந்த நினைவுச் சின்னம் பல தடவைகள் புதுப்பிக்கப் பட்டது. இந்தோனீசிய அரசும், யுனெஸ்கோவும் இணைந்து செயற்படுத்திய பெரிய அளவிலான மீளமைப்புத் திட்டம் ஒன்று 1975 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை போரோபுதூர் கோயில் இந்தோனேஷியாவின் தேசியச் சின்னமாகவும் சரித்திர புகழ்பெற்ற தலமாகவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது[4].

அமைப்புதொகு

புத்த மதத்தைச் சார்ந்தவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் இந்தக் கோயில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 196,800 கற்கள் பயன்படுத்தி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் பத்து அடுக்குகள் கொண்டது. இந்த அடுக்குகள் பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் கோயிலின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. தொலைவில் இருந்து பார்த்தால் சிறிய குன்று போலவும், உயரத்தில் இருந்து பார்த்தால் தாமரை போலவும் காட்சியளிப்பது கோயிலின் சிறப்பம்சமாகும்.[5] இந் நினைவுச்சின்னம், புத்தருக்கான கோயிலாக விளங்குவதுடன், பௌத்த யாத்திரைக்குரிய இடமாகவும் உள்ளது. புனிதப்பயணம் செய்வோர், இதன் அடியில் தொடங்கி, இதைச் சுற்றியபடியே மூன்று தளங்களூடாக மேலேறுவர். இம் மூன்று தளங்களும், காமதாது, ரூபதாது, அரூபதாது எனப்படும் பௌத்த அண்டக் கோட்பாட்டில் கூறியுள்ளவாறு மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. இந்தப் பயணத்தின்போது, புனிதப்பயணிகள், 1,460 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுவர்கள், காப்புச் சுவர்கள் ஆகியவற்றுடன் அமைந்த படிக்கட்டுகள், நடைவழிகள் என்பவற்றினூடாகச் செல்கின்றனர்.

குறிப்புகள்தொகு

  1. Soekmono (1976), page 35-36.
  2. http://exhibitions.nlb.gov.sg/kaalachakra/g3.htm%7C[தொடர்பிழந்த இணைப்பு] கால சக்ரா
  3. Soekmono (1976), page 4.
  4. "Borobudur Temple Compounds". UNESCO World Heritage Centre. யுனெசுகோ. 2006-12-05 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://www.thinakaran.lk/vaaramanjari/2011/05/08/?fn=c1105082%7C[தொடர்பிழந்த இணைப்பு] தினகரன் வாரமஞ்சரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரோபுதூர்&oldid=3223148" இருந்து மீள்விக்கப்பட்டது