படிக்கட்டு
படிக்கட்டு வெவ்வேறு மட்டங்களில் உள்ள தளங்களைப் போக்குவரத்துக்காக இணைப்பதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். மாடிப்படி என்றும் இது அழைக்கப்படுவதுண்டு உண்மையில் இது, கடக்க வேண்டிய நிலைக்குத்துத் தூரத்தைச் சிறு சிறு தூரங்களாக ஏறிக் கடப்பதற்காகச் செய்யப்படும் ஒழுங்கு ஆகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட ஒரு பிரிவு நிலைக்குத்துத் தூரத்தை ஏற உருவாக்கிய அமைப்புப் படி எனப்படுகின்றது. எனவே படிக்கட்டு என்பது பல படிகள் கொண்ட ஒரு தொகுதி ஆகும்.[1][2][3]
படிக்கட்டு வகைகள்
தொகுபடிக்கட்டை அமைப்பதற்கான இடவசதி, அழகியல் நோக்கம், மற்றும் பலவற்றைக் கருத்தில் கொண்டு, படிக்கட்டுகள் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்படுவதுண்டு. நேர்ப் படிக்கட்டு (stright staircase), இடையில் திசைமாறும் படிக்கட்டுகள், வளைவான படிக்கட்டுகள் (curved staircase), சுருளிப் படிக்கட்டு (spiral staircase) எனப் படிக்கட்டுகள் பலவகையாக உள்ளன.
படிக்கட்டுக் கூறுகள்
தொகுபடிக்கட்டு பல கூறுகளால் அமைந்தது. இவற்றிற் சில கூறுகள் படிக்கட்டுகள் அமைக்கப் பயன்படும் கட்டிடப் பொருள்கள் அல்லது அவற்றின் வடிவமைப்பைப் பொறுத்து இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமல் இருக்கலாம். ஆனாலும் பல கூறுகள் எல்லா வகையான படிக்கட்டுகளுக்கும் பொதுவாக அமைகின்றன. படிக்கட்டுகளின் கூறுகள் மற்றும் துணைக்கூறுகள் சில பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன.
படி
தொகுஒரு படியில் ஒரு கிடைத்தள மேற்பரப்பும், ஒரு நிலைக்குத்து அல்லது ஏறத்தாழ நிலைக்குத்தான மேற்பரப்பும் காணப்படும். இவை முறையே மிதி (tread) என்றும், ஏற்றி (riser) என்றும் அழைக்கப்படுகின்றன. படிகளில் ஏறும்போது கால் வைத்து ஏறும் இடமே மிதி. இரண்டு மிதிகளுக்கு இடைப்பட்ட நிலைக்குத்துப் பகுதியே ஏற்றி. சில படிக்கட்டுகளில் இந்த ஏற்றிப் பகுதி மூடியிருக்கும். இவ்வாறிருக்கும் படிக்கட்டு மூடிய ஏற்றிப் படிக்கட்டு எனப்படும். சில படிக்கட்டுகளில், மிதிகள் தனித்தனியான பலகைகளாகக் காணப்பட, ஏற்றிப் பகுதி திறந்திருக்கும். இத்தகைய படிக்கட்டுகள் திறந்த ஏற்றிப் படிக்கட்டுகள் எனப்படுகின்றன.
ஒரு படிக்கட்டில் இடம்பெறும் எல்லா மிதிகளும், அதேபோல எல்லா ஏற்றிகளும் சமனானவையாக இருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாகும். இது ஒரு குறிப்பிட்ட இசைவொழுங்கில் (rhythm) காலெடுத்து வைத்து நடப்பதை உறுதிப்படுத்தும், இல்லாவிடில் தடுக்கி விழ நேரிடும். ஏற்றி பொதுவாக 150 மில்லிமீட்டருக்கும் 200 மில்லிமீட்டருக்கும் இடைப்பட்ட அளவுடையதாக இருப்பது வழக்கம். ஏற்றியின் அளவின் அடிப்படையில் மிதியின் அளவைத் தீர்மானிப்பதற்கு சில சூத்திரங்கள் (formulas) பயன்படுத்தப்படுகின்றன. இவை ஏறும்போது வசதியாக இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இவை தவிரச் சில சமயங்களில், மிதி, ஏறுபடிக்கு வெளியே சிறிது நீண்டிருப்பதைக் காணமுடியும். இக்கூறு படிநுனி (nosing) எனப்படும். எல்லாப்படிகளிலும் படிநுனி இருப்பதில்லை.
ஏற்றம்
தொகுதொடர்ச்சியாக அமைந்திருக்கும் படிகளின் ஒரு தொகுதி ஏற்றம் (flight) எனப்படுகின்றது. கட்டிடங்களில் பொதுவான தளங்களுக்கிடையே அமையும் படிக்கட்டுகளில், படிகள் தொடர்ச்சியாக அமைவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்றங்களாக வடிவமைக்கப்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
- ஒரு ஏற்றத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான (பொதுவாக 14) படிகளுக்குமேல் அமைவதைக் கட்டிட ஒழுங்குவிதிகள் அனுமதிப்பது இல்லை. இதனால் குறிப்பிட்ட ஆகக் குறைந்த எண்ணிக்கையான படிகளுக்குமேல் அமைக்கும் தேவை ஏற்படும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்றங்கள் அமைக்கவேண்டி ஏற்படுகின்றது.
- படிக்கட்டுகளில் திசைமாற்றம் ஏற்படும்போதும் படிகள் தொடர்ச்சியாக ஒரே ஏற்றமாக அமைவது விரும்பப்படுவதில்லை. திசைமாறும் இடத்தில் புதிய ஏற்றம் உருவாக்கப்படுகின்றது.
இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்றங்கள் அமையும்போது இரண்டு ஏற்றங்களுக்கு இடையே ஒரு அகன்ற படி போன்றதொரு பகுதி அமைகின்றது இது படிமேடை (landing) எனப்படும்.
தடுப்பு
தொகுபடிக்கட்டில் ஏறும்போது விழுந்துவிடாமல் இருப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் தடுப்புக்கள் அமைப்பது வழக்கம். பொதுவாக இது ஏறத்தாழ ஒரு மீட்டர் வரை உயரமான தடுப்புச் சுவராகவோ (parapet), கந்தணியாகவோ (balustrade) கம்பித் தடுப்புகளாகவோ (railing) அல்லது வேறுவகை அமைப்புக்களாகவோ இருக்கலாம். இவற்றின் மேற்பகுதி பொதுவாகக் கைப்பிடிச் சட்டமாக அமைந்திருப்பது வழக்கம். தடுப்புகள் காங்கிறீற்று, மரம், இரும்பு, அலுமினியம், கண்ணாடி போன்ற பல்வேறு வகையான கட்டிடப்பொருட்களினால் அமைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "U.S. Access Board Guide to ADA Standards Chapter 4: Ramps and Curb Ramps". United States Access Board.
- ↑ "History of Stairs, Ancient Stairs". www.elevestairs.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
- ↑ www.stannah.com https://www.stannah.com/en-us. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
{{cite web}}
: Missing or empty|title=
(help)