அசோகர்

மௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசர், புத்த மதத்தின் புரவலர்


அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். (பிறப்பு: கிமு 304) மௌரியப் பேரரசில் இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.[1] கலிங்கத்துப் போரை வென்றபின், போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.[2][3][4][5][6] இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலா மற்றும் உஜ்ஜைனி இருந்தன.[7]

அசோகப் பேரரசர்
மௌரியப் பேரரசர்
Indian relief from Amaravati, Guntur. Preserved in Guimet Museum.jpg
அசோகப் பேரரசர்
ஆட்சிகிமு 269 - கிமு 232
முன்னிருந்தவர்பிந்துசாரர்
பின்வந்தவர்தசரத மௌரியர்
அரசிமகாராணி தேவி
மனைவிகள்
வாரிசு(கள்)மகிந்தன், சங்கமித்தை
முழுப்பெயர்
அசோக மவுரியன்
மரபுமௌரியர்
தந்தைபிந்துசாரர்
தாய்ராணி தர்மா
அடக்கம்தகனம் கிமு 232, இறப்பின் பின்னர் 24 மணித்தியாலத்திற்குள்.
வாரணாசியின் கங்கை ஆற்றில் இவரின் சாம்பல் கரைக்கப்பட்டிருக்கலாம்

அசோகர் கலிங்க நாட்டிற்கு (தற்கால ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.[8] கி. மு. 260 இல் அதை வென்றார்.[9] கலிங்கப் போரில் பலர் கொல்லப்பட்டதை கண்ட அசோகர் கி. மு. 263 இன் போது புத்த மதத்தை தழுவினார்[8]. அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.[10] அசோகர் அவர் எழுப்பிய தூண்கள் மற்றும் கல்வெட்டுகள், இலங்கை மற்றும் நடு ஆசியாவிற்கு புத்த பிக்குகளை அனுப்பிய காரணங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் அசோகர் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.[11]

அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன. அசோகரின் சிங்கத்தூபி நவீன இந்தியாவின் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. "அசோக மரத்துடன்" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல."[12]

சந்திரகுப்த மெளரியர்தொகு

மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மௌரியர் ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் ராஜகிரகம் மகத நாட்டின் தலைநகராக இருந்தது. பின்னர், பாடலிபுத்திரம் என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய பிகார் மாநிலத் தலைநகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.

சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசிக் காலத்தில் சமண மதத்தை தழுவி பெங்களூர் அருகே உள்ள சரவணபெலகுளாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.

பிந்துசாரர்தொகு

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால், சுஸ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்).

பிந்து சாரர் இருகடல்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை வென்றதாக திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாரநாதர் கூறுகிறார். தமிழகம் வரைக்கும் படை எடுத்து வந்ததாக சங்க கால புலவர் மாமூலனார் பாடலில் மௌரியர் படையெடுப்பை பற்றிய குறிப்புகள் இருப்பதால் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கருதலாம். இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.

பிந்துசாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு.[சான்று தேவை] திஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232)தொகு

 
அசோகர் காலத்திய மௌரியப் பேரரசு
 
இந்தியாவில் அசோகர் நிறுவிய சிங்கத்தூண்கள்

பிறப்பும் இளமைக் காலமும்தொகு

அசோகர், பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் செலுக்கஸ் நிக்கோடர் என்ற கிரேக்க மன்னரின் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிகக் குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் ( மகிந்த தேரர்), சங்கமித்தையும் ஆவர். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.

அசோகரின் சொந்த கல்வெட்டுகள் அவரது இளமைக்கால வாழ்க்கையை பற்றி விளக்கவில்லை. அதைப்பற்றிய செய்திகளானவை அவரது இறப்பிற்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட உறுதிப்படுத்தப்படாத புனைவுகள் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.[13] உதாரணமாக அசோகவதனா என்னும் நூலில் அசோகர் தனது முற்பிறவியில் ஜெயா என்ற பெயர் உடையவனாக பிறந்ததாகவும் பாடலிபுத்திரத்தில் இருந்து சக்கரவர்த்தி அரசனாக ஆட்சி செய்வாய் என்று கௌதம புத்தர் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.[14] இந்த புனைவுகள் வெளிப்படையாக கற்பனைகள் என்று கருதப்படுகின்ற போதிலும் அசோகரின் காலத்தைப் பற்றிய நம்பத்தகுந்த வரலாற்று செய்திகளை உள்ளடக்கியுள்ளன.[13]

அசோகர் பிறந்த சரியான தேதி என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனெனில் அந்நேரத்தில் எழுதப்பட்ட இந்திய நூல்கள் அதைப் பற்றிய செய்தியை பதிவிடவில்லை. இவர் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது நமக்குத் தெரிகிறது. ஏனெனில் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்வேறு சமகால ஆட்சியாளர்களின் காலங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆன்டியோசுஸ் இரண்டாம் தியோஸ், தாலமி இரண்டாம் பிலடெல்பஸ், ஆன்டிகோனஸ் இரண்டாம் கோனடாஸ், சைரீனின் மகஸ், மற்றும் அலெக்சாண்டர் (எபிரஸின் இரண்டாம் அலெக்சாண்டர் அல்லது கோரிந்தின் அலெக்சாண்டர்).[15] வரலாற்று ஆதாரங்கள் அசோகர் கிமு. 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கிமு. 3 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (அண். கி. மு. 304) பிறந்ததாக நமக்கு காட்டுகின்றன,[16] இவர் கி. மு. 269-232 இல் ஆட்சிக்கு வந்தார்.[15]

பெயர்கள்தொகு

அசோகருக்கு அசோகவர்த்தனர், தேவனாமபிரியா, பிரியதர்ஷன் என்று பல பெயர்கள் உண்டு. அசோகர் என்றால் ’வலிகள் இல்லாத’ , ‘துன்பம் அற்ற’ என்பது பொருள். தேவனாம்பிரியர் என்றால் ’கடவுளை விரும்புபவன்’ என்பது பொருள். பிரியதர்ஷன் என்றால் அனைவரையும் விரும்புபவன் என்பது பொருள். தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார், அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது. எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது, மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்ஸ்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.

கலிங்கப் போரும் மதமாற்றமும்தொகு

 • கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒடிசா. கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்துசாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். இதுவே உலகப் புகழ்பெற்ற கலிங்கப் போர் ஆகும். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர். இக்கொடிய போர்க்களக்காட்சியைக் கண்டு அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தைத் தழுவி, சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.
 • இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார். ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
 • விவேகானந்தரின் கூற்றுப்படி, இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர், தனது சகோதரருடன் சண்டையிட்டார். அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிட்சுவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிட்சுவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிட்சுவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிட்சு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார். அவரது மனவலிமையைக் கண்டு கவரப்பட்டார் அசோகர். இவ்வாறுதான் புத்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் அசோகர்.[17]

ஆட்சி முறைதொகு

அசோகர் ஆட்சிப் பொறுப்பை கி.மு 273 இல் ஏற்றார். ஆனால் அவர் கி.மு 269 ஆண்டு (நான்கு ஆண்டுகள் கழித்து) பதவி ஏற்றார். இலங்கை நூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் அரியணை ஏற போட்டிகள் இருந்ததாகக் கூறுகின்றன. இதன் காரணமாக நான்கு ஆண்டுகள் இடைவேளை இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அசோகர் முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். சாலை ஓரம் மரங்களை வைத்தவர். மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தூண்களில் சட்ட திட்டங்களைச் செதுக்கி வைத்துள்ளார். இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார். அசோகர் தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார்.

பௌத்த சமயத்தை பரப்புதல்தொகு

 
பேரரசர் அசோகர் பிக்குகள் மூலம் பௌத்தத்தை பிறநாடுகளுக்கு பரப்புதல்

அசோகர் படிப்படியாகப் புத்த மதத்தை தழுவி கி.பி 263 இல் முற்றிலுமாக உபகுப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசகர் (சாதாரணசீடர்) ஆனார். இரண்டறை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டு புத்தகயாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பல்வேறு தேசங்களுக்குத் தூதுக்குழுக்களை அனுப்பினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகா மாத்திரர்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

அசோகர் பாடாலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். இச்சங்கத்திற்கு மொகாலிபுத்த தீசர் தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும், அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.

கிரநார் மலை கட்டளைதொகு

சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கிர்நார் மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

பவஹாரி பாபாவுக்கு இந்த மலையின் உச்சியில் தான் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் உபதேசிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.[18]

 
இந்தியாத் துணை கண்டத்தில் அசோகரின் தூண்கள் & அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் அமைந்த இடங்கள்

அசோகர் கல்வெட்டுக்கள்- வகைபாடுகள்தொகு

 
 
உதயகோலம்
 
நித்தூர்
 
Jatinga
 
Rajula Mandagiri

இந்தியா வரலாற்றில் தற்போதுள்ள மிகப் பழைமையான எழுதப்பட்ட ஆதாரம் அசோகரின் கல்வெட்டு ஆகும். இவை கரோஷ்தி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. 1837 ல் அசோகரது கல்வெட்டுகள் ஜேம்ஸ் பிரின்செஃப் என்பவரால் படித்து அறியப்பட்டது. அசோகரின் கல்வெட்டுக்களை சிறு பாறைக் கல்வெட்டுக்கள், சிறு தூண் கல்வெட்டுகள், பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் மற்றும் பெரிய தூண் கல்வெட்டுக்கள் என நான்காகப் பிரிப்பர்.

மவுரிய சாம்ராஜ்ய முடிவுதொகு

அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.[சான்று தேவை] இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கன் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிரகத்திர மௌரியன் என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார். இதனால் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

 • அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநாம்பிரியர் என்ற பட்டமும் அளித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர் தேவநம்பிய தீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.

மறைவுதொகு

அசோகர் முப்பத்து ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டு, கிமு 232 இல் பாடாலிபுத்திரத்தில் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மௌரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் புதல்வர் குணாளன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரத மௌரியர் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேயே மொரியப் பேரரசு வீழ்ந்தது.

விலங்குகள் நலம்தொகு

அசோகரின் கல்வெட்டுக்கள் உயிர்வாழும் எந்த உயிரினத்தையும் காயப்படுத்துவது நல்ல செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளன.[19] எனினும் பொதுவாக கால்நடைகள் கொல்லப்படுவதையோ அல்லது மாட்டுக்கறி உண்பதையோ அவர் தடை செய்யவில்லை.[20]

"பயனற்ற உண்ணத் தகாத அனைத்து நான்கு-கால் உயிரினங்களையும்", மற்றும் பல்வேறு பறவைகள், சில மீன் இனங்கள் மற்றும் காளை மாடுகள் ஆகிய குறிப்பிட்ட விலங்கினங்களையும் கொல்வதற்கு இவர் தடை விதித்தார். பெண் ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் தங்களது குட்டிகளை பேணும் பருவத்தில் இருக்கும்போது அவற்றை கொல்வதற்கு தடை விதித்தார். இளம் விலங்குகளும் ஆறுமாத வயது அடைந்த பின்னரே கொல்லப்படவேண்டும் என்று ஆணையிட்டார்.[21][22]

பொழுதுபோக்கிற்காக அரச குடும்பத்தினர் விலங்குகளை வேட்டையாடுவதையும் அசோகர் தடைசெய்தார். அரண்மனையில் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை மட்டும் அனுமதித்தார்.[23] வேட்டையாடுவதை தடை செய்த அவர் பல விலங்குகள் நல மருத்துவ மனைகளை நிறுவினார். பல்வேறு விடுமுறை நாள்களில் புலால் உண்ணுவதை நீக்கினார். இதன் காரணமாக அசோகர் தலைமையிலான மவுரிய பேரரசானது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: "உலக வரலாற்றிலேயே ஒரு அரசாங்கம் அதன் விலங்குகளையும் குடிமக்களாக, அரசின் பாதுகாப்புக்கு உரியவையாக மனிதர்களைப் போலவே நடத்திய தருணங்களில் ஒன்று".[24]

படக்காட்சிகள்தொகு

திரைப்படம்தொகு

 • அசோக்குமார் என்ற திரைப்படத்தில், அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு. குணாளன், ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு. இதில் குணாளன் அழகு மிகுந்தவர். எனவே அவர் மீது அசோகரின் மனைவியருள் ஒருவரான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார். ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பத்திற்கு இணங்கவில்லை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்; கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார் என்றும் சித்தரிக்கப்படுகிறது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Thapur (1973), p. 51.
 2. Ashoka
 3. THE EDICTS OF KING ASHOKA
 4. Ashoka, the Great Emperor – Know the Real History and Facts
 5. Ashoka
 6. INTERESTING FACTS AND INFORMATION ABOUT SAMRAT ASHOKA,THE GREAT EMPERORS OF INDIA
 7. Ashoka
 8. 8.0 8.1 Bentley 1993, பக். 44.
 9. Kalinga had been conquered by the preceding Nanda Dynasty but subsequently broke free until it was reconquered by Ashoka c. 260 BCE. (Raychaudhuri, H. C.; Mukherjee, B. N. 1996. Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty. Oxford University Press, pp. 204-9, pp. 270-71)
 10. Bentley 1993, பக். 45.
 11. Bentley 1993, பக். 46.
 12. Nayanjot Lahiri (5 August 2015). Ashoka in Ancient India. Harvard University Press. பக். 20–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-91525-1. https://books.google.com/books?id=JaVRCgAAQBAJ&pg=PT20. 
 13. 13.0 13.1 Lahiri 2015, பக். 27.
 14. Singh 2008, பக். 332.
 15. 15.0 15.1 Lahiri 2015, பக். 25.
 16. Lahiri 2015, பக். 24.
 17. எழுந்திரு! விழித்திரு! சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 7; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; 239
 18. எழுந்திரு! விழித்திரு! சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 7; பவஹாரி பாபா; பக்கம் 201
 19. Fitzgerald 2004, பக். 120.
 20. Simoons, Frederick J. (1994). Eat Not This Flesh: Food Avoidances from Prehistory to the Present (2nd ). Madison: University of Wisconsin Press. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-299-14254-4. https://books.google.com/books?id=JwGZTQunH00C&pg=PA108. 
 21. "The Edicts of King Asoka". Dhammika, Ven. S. ஆல் மொழிபெயர்க்கப்பட்டது. Buddhist Publication Society. 1994. 10 May 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
 22. D.R. Bhandarkar, R. G. Bhandarkar (2000). Asoka. Asian Educational Services. பக். 314–315. https://books.google.com/books?id=hhlfSZLDjRsC&pg=PA314. 
 23. Gerald Irving A. Dare Draper; Michael A. Meyer; H. McCoubrey (1998). Reflections on Law and Armed Conflicts: The Selected Works on the Laws of War by the Late Professor Colonel G.I.A.D. Draper, Obe. Martinus Nijhoff Publishers. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-411-0557-8. https://books.google.com/books?id=ETjo7FKSsVkC&pg=PA44. பார்த்த நாள்: 30 October 2012. 
 24. Norm Phelps (2007). The Longest Struggle: Animal Advocacy from Pythagoras to Peta. Lantern Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1590561066. https://archive.org/details/longeststrugglea00phel. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அசோகர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகர்&oldid=3457237" இருந்து மீள்விக்கப்பட்டது