ஜெய்சங்கர் பிரசாத்

ஜெய்சங்கர் பிரசாத் (Jaishankar Prasad; ஜனவரி 30, 1889 - நவம்பர் 15, 1937) என்பவர் இந்தி மொழி இலக்கியத்திலும், நாடகங்களிலும் புகழ் பெற்றவர். உத்தரப் பிரதேசம் மாநிலம் காசி நகரில் 30-01-1889 ஆம் நாளில் பிறந்த இவர் ஏழாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். அதன் பிறகு வீட்டிலிருந்தபடியே சமற்கிருதம், உருது, பெர்சியன், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இது தவிர தத்துவம், மதம், வரலாறு, புதைபொருள் ஆய்வு குறித்த நூல்களையும் விரும்பிப் படித்து அதிலும் தன்னை வளப்படுத்திக் கொண்டார். இவர் மூன்று திருமணம் செய்து கொண்டார்.

ஜெய்சங்கர் பிரசாத்

இலக்கியப் பங்களிப்பு தொகு

“பாரத் தேந்து” எனும் இதழில் “கலாதர்” எனும் புனைப்பெயரில் இவரது முதல் கவிதை வெளியானது. “ஹான்ஸ்”, “ஜகரான்” எனும் இதழ்களில் இவர் நிறைய கவிதைகளை எழுதி வந்தார். அதன் பிறகு 1909 ஆம் ஆண்டில் “இந்து” எனும் மாத இதழைத் தொடங்கினார். இவரது இயற்பெயரான “ஜெய்சங்கர்” என்பதை விட இவர் இலக்கியத்திற்காக வைத்துக் கொண்ட “பிரசாத்” என்கிற புனைபெயர் மிகவும் புகழ் பெற்றதால் இரண்டு பெயரையும் இணைத்து வைத்துக் கொண்டார்.

“பிரேம் பாதிக்”, “கானன்குஸீம்”, “சித்ராதர்”, “ஜர்னா”, “அன்சு”, “லெகர்”, “காமாயினி” எனும் கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டார். இவர் பதின்மூன்று இலக்கியத்தரம் மிகுந்த நாடகங்கள், எட்டு வரலாறுகள், மூன்று புராணங்கள், உணர்வுப்பூர்வமான இரண்டு நாடகங்கள் போன்றவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். “கன்கல்”, “டிட்லி” என்னும் இரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டார். “ஐராவதி” எனும் நாவல் முடிவடையாமல் இடையில் நின்று போய் விட்டது. கவிதை மற்றும் உரைநடை கலந்த “ஊர்வசி மற்றும் பப்ருவாகன்” என்னும் நூலையும் எழுதி வெளியிட்டார். இது தவிர கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார்.

இவர் உயர்வான கருத்துக்களை உள்ளடக்கிய கவிதை, கட்டுரை, கதை, நாவல்கள், நாடகங்கள் என இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவரது “காமாயினி” எனும் காவியத்திற்கு மங்களப் பிரசாத் விருது வழங்கப்பட்டது.

வணிகர் தொகு

வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தையும், மூத்த சகோதரரும் திடீரென மரணமடைந்ததால் வணிகத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு இவருக்கு ஏற்பட்டது. இதனால் இலக்கியவாதியான இவர் பின்னர் வணிகராக மாறிவிட்டார்.

மறைவு தொகு

உத்தரப்பிரதேசத்தின் காசி நகரில் இவருடைய நாற்பத்தெட்டாம் வயதில் 15-11-1937 ஆம் நாளில் மரணமடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்சங்கர்_பிரசாத்&oldid=3784505" இலிருந்து மீள்விக்கப்பட்டது