இந்திய தேசிய இலச்சினை

இந்திய தேசிய இலச்சினை சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இஃது இந்தியா, குடியரசான பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாகப் பிரித்தானிய இந்தியாவில் இசுடார் ஆப் இந்தியா (இந்தியாவின் விண்மீன்) இலச்சினை பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்திய தேசிய இலச்சினை
விபரங்கள்
பாவிப்போர்இந்தியா
உள்வாங்கப்பட்டது26 சனவரி 1950
குறிக்கோளுரைசத்தியமேவ ஜயதே
"வாய்மையே வெல்லும்"
அசோகரின் சிங்கத் தலைகளின் அசல்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் புறநகரப் பகுதியாக விளங்கும் சாரநாத்தில் உள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவ தளத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரை மலரும் வாழ்வையும் படைப்பூக்க அகவெழுச்சியையும் குறிக்கிறது. தூணின் மகுடமாகத் தர்மச் சக்கரம் விளங்குகின்றது.

1950-இல் மாதவ் சாஹ்னி வடிவமைத்த இலச்சினையில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியுமாறும் நான்காவது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டும் உள்ளது. அசோகச்சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது. வலது புறத்தில் எருதும் இடது புறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளன. வலது, இடது கோடிகளில் தர்மச்சக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன. பீடத்தின் கீழிருந்த தாமரை நீக்கப்பட்டது.[1]

பேரரசர் அசோகர் தமது முதல் மனைவி பட்டத்தரசி விதிசா தேவியின் விருப்பத்திற்கிணங்க, கௌதம புத்தர் முதன்முதலில் அறம் போதித்ததும் பௌத்தர்களின் முதல் சங்கம் நிறுவப்பட்டதுமான இடத்தில் அசோகத்தூணை நிறுவினார். இதன் அங்கமாகப் பீடத்தின் கீழே தேவநாகரி எழுத்துருவில்: சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும்) என்ற குறிக்கோளுரை பொறிக்கப்பட்டிருந்தது.[2] இஃது இந்து சமய புனித நூலான வேதத்தின் முடிவுரை அங்கமாக விளங்கிய முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[3]

இந்தத் தேசிய இலச்சினை சனவரி 26, 1950-இல் இந்தியா, குடியரசு ஆன நாளன்று செயற்பாட்டிற்கு வந்தது.[4]

இந்த இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் இடம்பெறுகிறது. மேலும் இது தேசியச் சின்னமாகப் பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியக் கடவுச்சீட்டுகளிலும் நுழைவாணைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.

இதன் பயன்பாட்டை இந்திய தேசிய இலச்சினை (முறையற்ற பயன்பாடு கட்டுப்பாடு) சட்டம், 2005 கட்டுப்படுத்துகிறது.

மேற்சான்றுகள் தொகு

இவற்றையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Emblem of India
என்பதின் ஊடகங்கள் உள்ளன.