நடுவண் புலனாய்வுச் செயலகம்

நடுவண் புலனாய்வுச் செயலகம் அல்லது மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI) குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விடயங்களை ஆராயும் இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும்; மேலும் பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் உள்ளது; சுருக்கமாக சி.பி.ஐ என அறியப்படுகிறது. இவ்வமைப்பு சிறப்புக்காவல் நிறுவனத்திலிருந்து 1963இல் தோற்றுவிக்கப்பட்டது. இது மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் தற்போதைய இயக்குனராக, ரிஷி குமார் சுக்லா 2பிப்ரவரி,2019 முதல் பதவியில் உள்ளார்.

சிறப்புக்காவல் நிறுவனம்

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தின்போது ஊழல் மற்றும் கையூட்டு வழக்குகளை ஆராய்வதற்காக 1941ஆம் ஆண்டு சிறப்புக்காவல் நிறுவனம் (Special Police Establishment-SPE) பிரித்தானிய இந்திய அரசால் அமைக்கப்பட்டது. போர் முடிவடைந்த பின்னரும் கூட நடுவணரசு அதிகாரிகள் தொடர்பான ஊழல், கையூட்டு வழக்குகளை ஆராய அந்நிறுவனத்தின் பணி தேவைப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு 1946இல் கொணரப்பட்ட தில்லி சிறப்புக்காவல் நிறுவனச்சட்டம், சில மாற்றங்களுடன் அந்நிறுவனம் தொடர்ந்து செயலாற்ற வகைசெய்தது. இச்சட்டத்தின்படி, போர்த்துறையின் கீழ் இருந்த சிறப்புக்காவல் நிறுவனம் உள்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, அதன் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டது. நடுவண் ஆட்சிப் பகுதிகளிலும், தொடர்புடைய மாகாணங்களின் ஒப்புதலோடு மாகாணங்களிலும் அதன் பணிகள் செயலாக்கம் பெற்றன.

சி.பி.ஐ.யின் உருவாக்கம்

இந்திய விடுதலைக்குப்பின், 1960களில் கால மாற்றத்திற்கேற்ப சிறப்புக்காவல் நிறுவனத்தின் அமைப்பிலும், செயல்பாடுகளிலும் மாற்றம் தேவைப்பட்டது. 1946-ஆம் ஆண்டின் தில்லி சிறப்பு போலீஸ் படையின் கீழ், 1963-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த நிர்வாக ஆணையின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட புலனாய்வு அமைப்புதான் சிபிஐ. இதற்கு மத்திய அமைச்சரவையோ அல்லது குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்கவில்லை.[1]சி.பி.ஐ யின் முதல் இயக்குனராக திரு.டி.பி.கோஹ்லி பொறுப்பேற்றார் (ஏப்ரல்1,1963-மே31,1968). திரு.கோஹ்லி உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் காவல்துறைகளில் உயர்பதவிகளை வகித்தவர்; பின்னர் சிறப்புக்காவல் துறையின் தலைமைக் காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பெற்றார். அவரது தொலைநோக்குப் பார்வையால் இவ்வமைப்பு மிகச்சிறந்த புலனாய்வு முகமையாக வளர்ச்சியடையத் தொடங்கியது.

1987ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்புப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு(தனி) என்னும் இரண்டு சிறப்புப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. பொருளாதாரக் குற்றங்கள் தவிர்த்து பொதுவான குற்றங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் குற்றப்பிரிவு(தனி) உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சி.பி.ஐ நடுவண் பட்டியலில் இருப்பதால், குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களுக்கல்லாமல் நடுவணரசுக்கே அறிக்கை தாக்கல் செய்கிறது.

சி.பி.ஐ.யின் பிரிவுகள் /செயல்பாடுகள்

• ஊழல் தடுப்பு பிரிவு

• பொருளாதார குற்றங்கள் பிரிவு

• சிறப்பு குற்றப்பிரிவு

• வழக்கு விசாரணை இயக்குநரகம்

• நிர்வாக பிரிவு

• கொள்கை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு

• மத்திய தடய அறிவியல் ஆய்வகம்

முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள்கடத்தல், தீவிரவாதம் முதலான வழக்குகளில் நடுவண் புலனாய்வுச் செயலகம் புலனாய்கிறது. அண்மைக்காலமாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சில குறிப்பிடத்தக்க வழக்குகளைப் ஆராயுமாறு சி.பி.ஐ.க்குப் பரிந்துரைக்கின்றன. தேசியப் பொருளாதார நலனைக் காப்பதிலும் இவ்வமைப்பு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. சி.பி.ஐ இந்தியாவின் முதன்மைக்காவல் புலனாய்வு முகமையாகும்; பன்னாட்டுக்காவல்துறையின் சார்பாக இந்தியாவில் நடைபெறும் புலனாய்வுகளை ஒருங்கிணைக்கிறது. சி.பி.ஐ. குற்ற வழக்குகளை மூன்று பிரிவுகளில் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. அப்பிரிவுகளாவன: 1. ஊழல் எதிர்ப்புப் பிரிவு: அனைத்து நடுவணரசுத்துறைகள், நடுவண் நிதித்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்புடைய ஊழல் மற்றும் ஏய்ப்பு வழக்குகளைப் புலனாய்கிறது. 2. பொருளாதாரக் குற்றப்பிரிவு: வங்கி மற்றும் நிதி ஏய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அந்நியச்செலாவணிக் கையாடல்கள், பேரளவிலான போதைமருந்து மற்றும் பதுக்கல் தொடர்பான வழக்குகளைப் புலனாய்கிறது. 3. குற்றப்பிரிவு (தனி): மாபியா கும்பல்களால் நிகழ்த்தப்படும் பணயத்துக்கான ஆள்கடத்தல், குண்டுவெடிப்பு, தீவிரவாதச்செயல்கள் தொடர்புடைய வழக்குகளைப் புலனாய்கிறது.

சி.பி.ஐ.யின் உள்ளமைப்பு

நடுவண் புலனாய்வுச் செயலகம் அதன் இயக்குநரால் தலைமை வகிக்கப்படுகிறது. அவர் தலைமைக் காவல் இயக்குநர் அல்லது மாநிலக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தரத்திலான இந்தியக்காவல்துறை (ஐ.பி.எஸ்) அதிகாரியாக இருப்பார். சி.வி.சி (CVC Act 2003) சட்டத்தின்படி சி.பி.ஐ. இயக்குநர் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் மற்ற பதவிகள்:

  • சிறப்பு இயக்குநர்
  • கூடுதல் இயக்குநர்
  • இணை இயக்குநர்
  • டெபுடி தலைமைக் காவல்துறை ஆய்வாளர்
  • உயர் காவல்துறைக் கண்காணிப்பாளர்
  • காவல்துறைக் கண்காணிப்பாளர்
  • கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்
  • டெபுடி காவல்துறைக் கண்காணிப்பாளர்
  • ஆய்வாளர்
  • துணை ஆய்வாளர்
  • உதவித் துணை ஆய்வாளர்
  • தலைமைக் காவலர்
  • உயர் காவலர்
  • காவலர்

அதிகார வரம்பு

நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அதிகாரவரம்பு delhi special police eshtablishment சட்டத்தின் மூலம் (DSPE 1946) வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் நடுவண் ஆட்சிப்பகுதிகளின் காவல்துறைக்கு இருப்பதை ஒத்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சிறப்புக்காவல் நிறுவனத்துக்கு(சி.பி.ஐ) வழங்குகிறது. தில்லியை தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, பொது ஒப்புதல் அளிப்பது அவசியம்.[2]

சி.பி.ஐ பாசறை

தில்லிக்குக் கிழக்கே 40 கி.மீ தொலைவில், உத்திரப்பிரதேச மாநிலம் காசிராபாத்தில் 26.5 ஏக்கர் பரப்பளவில் நடுவண் புலனாய்வுச் செயலகப் பாசறை (CBI Acadamy) அமைந்துள்ளது. பயிற்சிகள் தில்லி லோக்நாயக் பவனிலும், ஐதராபாத்திலும் வழங்கப்படுகின்றன. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு, பிரியதர்சினி மத்தூ கொலை வழக்கு, நிதாரி கொலைகள், தாவூத் இப்ராகிம் வழக்கு, சோதரி அபயா கொலை வழக்கு முதலானவை சி.பி.ஐ. புலனாய்ந்த வழக்குகளில் முதன்மையானவை. ஜோகிந்தர் சிங், பி.ஆர்.சர்மா முறையே இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் இருந்த காலத்தில் சி.பி.ஐ.யில் நடைபெற்ற ஊழல்களை தகவலறியும் உரிமைச்சட்டம் வெளிக்கொணர்ந்தது.

சர்ச்சைகள்

சிபிஐயின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளை மிரட்டப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகளால் எழுப்பப்படுகின்றன. இதன் காரணமாக 2018 நவம்பர் மாதத்தில் சிபிஐயின் அதிகாரத்தினை தங்களின் மாநில எல்லைகளுக்குள் இருந்து நீக்கி ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் உத்தரவிட்டன. இதனால் மாநில அரசின் அனுமதியின்றி இந்த மாநிலங்களில் எவர்மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்ய இயாலது. ஏற்கனவே இதற்கு முன்பு சிக்கிம், சத்தீஸ்கர், நாகலாந்து, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை திரும்பப் பெற்ற வரலாறு உண்டு. 1998ஆம் ஆண்டு ஜனதா தளம் ஆட்சியின் போது ஜே. எச். பாட்டேல் கர்நாடகத்தின் பொது ஒப்புதலை வாபஸ் பெற்றனர். இது கர்நாடகத்தில் எட்டு ஆண்டுகள் நீடித்தது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "மாட்டார்கள், மாட்டவே மாட்டார்கள்!". dinamani. 15 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013.
  2. என்.மகேஷ்குமார் (17 நவம்பர் 2018). "ஆந்திர மாநிலத்தில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு". செய்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2018.
  3. தீப்திமன் திவாரி (18 நவம்பர் 2018). "சிபிஐக்கு மாநில அரசுகள் தடை விதித்தால் என்ன நடக்கும்?". செய்திக்கட்டுரை. tamil.indianexpress. பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2018.

உசாத்துணைகள்