ரூமிலா தாப்பர்

உரொமிலா தாப்பர் (Romila Thapar) (பிறப்பு: 30 நவம்பர் 1931) இந்திய வரலாற்றாசிரியர் ஆவர். இவரது முதன்மையான ஆய்வுப் பரப்பு பண்டைய இந்திய வரலாறு ஆகும். இவர் பல இந்திய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அதோடு இந்திய வரலாறு எனும் மக்களுக்கான நூலையும் எழுதியுள்ளார். இவர் இப்போது புதுதில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவருக்கு இருமுறை பத்ம பூசண் விருது வழங்கப்பட்டாலும் அவற்றை இவர் ஏற்க மறுத்துவிட்டார்.

உரொமிலா தாப்பர் (Romila Thapar)
பிறப்பு30 நவம்பர் 1931 (1931-11-30) (அகவை 93)
இலக்னோ, பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பஞ்சாப் பல்கலைக்கழகம்
கீழை, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகம்
பணிவரலாற்றாசிரியர்ரெழுத்தாளர்
அறியப்படுவதுஇந்திய வரலாற்று நூல்கள் எழுதியதற்காக

இளமையும் கல்வியும்

தொகு

புகழ் பெற்ற பஞ்சாபிக் குடும்பத்தில் ரூமிலா தாப்பர் பிறந்தார். இவருடைய தந்தை படையில் பணியாற்றியதால் இந்தியாவின் பல பகுதிகளில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழை, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் 1958 இல் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர் ஏ. எல். பாஷம் தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் 1961 முதல் 1962 வரை குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் உயர்விரிவுரையாளராக இருந்தார். இதே பதவியில் 1963 முதல் 1970 வரை தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் இவர் புது தில்லி சவகர்லால் பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் பேராசியரியராகப் பணியாற்றினார். இவர் இங்கு இப்போது தகைமைப் பேராசிரியராக உள்ளார்.[2]

இவரது அரும்பெரும் பணி சார்ந்த நூல்களாக, அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும், பண்டைய இந்தியச் சமூக வரலாறு: சில விளக்கங்கள், தொடக்கநிலை இந்திய வரலாற்றில் அண்மைக் கண்ணோட்டங்கள் (பதிப்பாசிரியர்), இந்திய வரலாறு, தொகுதி ஒன்று, தொடக்கநிலை இந்தியா: தோற்றம் முதல் கி.பி 1300 வரை ஆகியவை விளங்குகின்றன.

இவரது வரலாற்றுப் பணிகள் சமூக விசைகளின் ஊடாட்டம் வழியாக இந்து சமயத் தோற்றப் படிமலர்ச்சி விளக்கப்படுகிறது.[3] இவரது அண்மை நூலாகிய சோமநாத் இந்த குசராத் கோயில் பற்றிய வரலாறெழுதியல்களின் படிமலர்ச்சியை ஆய்கிறது.[4]

இவரது முதல் நூலாகிய அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும் 1961 இல் வெளியிடப்பட்டது. இதில் இவர் அசோகரின் தருமம் பற்றிய கொள்கையைச் சமூக, அரசியல் சூழலில் வைத்து, பல்வேறு இனக்குழுக்களும் பண்பாடுகளும் நிலவும் பேரரசை ஒருங்கிணைக்க கருதிய பிரிவினைவாதமற்ற பொது அறமாக மதிப்பிடுகிறார். இவர் மவுரியப் பேரரசின் வீழ்ச்சி, அப்பேரரசின் ஆட்சி, உயர்மையப்பட்டதாலும் அத்தகைய பேரமைப்பைச் சிறப்பாக ஆளும்ஆட்சியாளர்கள் இன்மையாலும் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

தாப்பரின் இந்திய வரலாறு எனும் நூலின் முதல் தொகுதி மக்களுக்காக எழுதப்பட்டது. இந்நூலின் கருப்பொருள் தொடக்க கால்கத்தில் இருந்து ஐரோப்பியர் வருகை நிகழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு வரை அமைந்தது.

பண்டைய இந்தியச் சமூக வரலாறு எனும் தாப்பரின் நூல் தொடக்க காலகட்டத்தில் இருந்து கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையிலான இந்து, புத்த சமயங்களின் ஒப்பீட்டு ஆய்வாகும். இது புத்த மதம் சாதியமைப்பை எதிர்த்து பல சாதிகளின் இணக்கமான உறவுக்கு பாடுபட்டது என்பதை விவரிக்கிறது. குலக் கால்வழியில் இருந்து அரசு உருவாக்கம் வரை எனும் இவரது நூல் கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகளில் நடுவண் கங்கைப் பள்ளத்தாக்கில் அரசு உருவாக்க நிகழ்வைப் பகுத்தாய்கிறது. இம்மாற்றத்தில் இரும்பும் ஏர்க்கலப்பையும் உந்திய வேளாண் புரட்சியின் பாத்திரத்தை படிப்படியாக விளக்குகிறார். இதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட தொடர்ந்து இடம் மாறும் கால்வழி சார்ந்த முல்லைநிலச் சமூகம் ஒர்ரிட்த்தில் நிலைத்து வாழும் உழவர்ச் சமூகமாக, அதாவது உடைமைகளும் செல்வத் திரட்சியும் நகர்மயமாக்கமும் விளைந்த சமூகமாக மாறியதைக் காட்டுகிறார்.[5]


இவர் ஆசிய ஐரோப்பா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்தார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்தார். ஆரியர்களின் முதல் வருகையில் இருந்து முசுலிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர். இவர் ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து. அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகின்றார்.

தகைமைகள்

தொகு
  • ஆக்சுபோர்டில் லேடி மார்கரட் ஆல் என்பதில் மதிப்புமிகு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
  • கார்னெல் பல்கலைக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக் கழகம், பாரீசு நகரில் உள்ள காலேஜ் தி பிரான்சு ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.
  • 1983இல் இந்திய வரலாற்றுப் பேராயம் என்னும் அமைப்பில் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1999இல் பிரிட்டிசு கல்விக்கழகத்தில் தொடர்பாளர் என்னும் பதவியிலும் இருந்தார்.
  • 2004ஆம் ஆண்டில் அமெரிக்க நூலகப் பேராயத்தில் லூச் கட்டில் பதவியை இவருக்கு அளித்தனர்.
  • 2008 ஆம் ஆண்டில் மனிதவியல் ஆய்வுக்காக பீட்டர் பிரவுன் என்பவரும் தாப்பரும் சேர்ந்து லூச் பரிசைப் பெற்றனர்.
  • சிக்காக்கோ பல்கலைக் கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம் எடின்பர்கு பல்கலைக் கழகம் கல்கத்தா பல்கலைக் கழகம் ஐதராபாது பல்கலைக் கழகம் ஆகியவை இவருக்குத் தகைமை முனைவர் பட்டங்கள் அளித்து பாராட்டின.

அரசு விருதுகள்

தொகு

1992இல் இந்திய ஆரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தமக்கு வேண்டாமென புறக்கணித்தார். குடியரசுத் தலைவரிடம், இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாராக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசு விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.

 
2016 ஜூன் 23 இல் உரொமிலா தாப்பர்

கொள்கையில் உறுதி

தொகு

கல்வி நிலையங்கள் வழங்கும் விருதுகளையும் மதிப்புகளையும் மட்டுமே ஏற்றுக் கொள்வது என்னும் கொள்கையை வரையறுத்துக் கொண்டார். ஆதலால் 1992 ஆம் ஆண்டிலும் 2005 ஆம் ஆண்டிலும் இந்திய அரசு ரொமிளா தாப்பருக்கு பத்ம பூசண் விருது வழங்க முன்வந்தபோது அவ்விருதை ஏற்க மறுத்தார். 2002 இல் பள்ளிகளில் வரலாற்றுப் பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போது இந்துத்துவக் கொள்கையைக் கல்வி நிலையங்களில் அரசு திணிக்கப் பார்க்கிறது என்று தாப்பர் கண்டித்தார்.

நூல்தொகை

தொகு
நூல்கள்
பதிப்பாசிரியர்
தேர்ந்தெடுத்த ஆய்வுகள் கட்டுரைகள், இயல்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Romila Thapar". Penguin India. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
  2. 2.0 2.1 "Romila Thapar, Professor Emerita" (PDF). JNU. Archived from the original (PDF) on 16 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2014.
  3. "Cultural Pasts: Essays in Early Indian History By Romila Thapar - History - Archaeology-Ancient-India". Oup.co.in. 2003-02-03. Archived from the original on 2012-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.
  4. Perspectives of a history பரணிடப்பட்டது 2006-06-26 at the வந்தவழி இயந்திரம் – a review of Somanatha: The Many Voices of a History
  5. E. Sreedharan (2004). A Textbook of Historiography, 500 B.C. to A.D. 2000. Orient Longman. pp. 479–480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2657-6.
  6. "Exile and the Kingdom: Some Thoughts on the Rāmāyana". Worldcat. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  7. "Dissent in the Early Indian Tradition". Google Books. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  8. "Communalism and the Writing of Indian History". Google Books. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Romila Thapar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூமிலா_தாப்பர்&oldid=3752882" இலிருந்து மீள்விக்கப்பட்டது