பிந்துசாரர்
பிந்துசாரர் (Bindusara) என்பவர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.மு 297 முதல் கி.மு 273 வரையிலான கி.மு மூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில் இவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும் மாமன்னர் அசோகரின் தந்தையுமாவார் [1].இவர் தனது ஆட்சிக்காலத்தின் மௌரியப் பேரரசை விரிவுபடுத்தினார் என்றாலும் தந்தை சந்திரகுப்த மௌரியர் மற்றும் மகன் அசோகர் போல இவருடைய வாழ்க்கை ஆவணப்படுத்தப்படவில்லை. அவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை அவரது மரணத்திற்குப் பின் பல நூறு ஆண்டுகளாக எழுதப்பட்ட பழம்பெரும் புராணக்கதைகளில் இருந்து பெறப்பட்டவையாகும்.
பிந்துசாரா தனது தந்தை உருவாக்கிய பேரரசை ஒருங்கிணைத்தார். பிந்துசாரர் தனது நிர்வாகத்தை தென்னிந்தியாவில் பெற்ற பிராந்திய வெற்றிகளால் மேலும் விரிவுபடுத்தினார் என்று 16 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்த நூலாசிரியர் தாரானாதர் பாராட்டியுள்ளார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றின் வரலாற்று நம்பகத்தன்மையை சந்தேகிக்கின்றனர்.
பிந்துசாரர் | |
---|---|
அமித்ரகதா | |
![]() கிமு 269 இல் மௌரியப் பேரரசு | |
இரண்டாம் மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி.மு 297 - 273 |
முடிசூட்டுதல் | கி.மு 297 |
முன்னையவர் | சந்திரகுப்த மௌரியர் |
பின்னையவர் | அசோகர் |
இறப்பு | கி.மு 273 |
துணைவர் | சுசிமாவின் தாய் அசோகரின் தாய் சுபத்திராங்கி |
குடும்பம்உறுப்பினர் | சுசிமா, அசோகர், விதாசோகன் |
அரசமரபு | மௌரியர் |
தந்தை | சந்திரகுப்த மௌரியர் |
தாய் | துர்தாரா (சமண இலக்கியத்தின் படி) |
பின்னணிதொகு
பண்டைய மற்றும் இடைக்கால ஆதார மூலங்கள் பிந்துசாரரின் வாழ்க்கை விவரங்களை தெளிவாக விவரிக்கவில்லை. ஆனால் சந்திரகுப்தரை மையமாகக் கொண்ட சமண சமயத்தினரின் புராணக்கதைகளும், அசோகரை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தினரின் புராணக்கதைகளும் பிந்துசாரர் பற்றிய தகவல்களை அளிக்கின்றன. ஏமச்சந்திரரின் பரிச்சிசுட்ட பர்வன் போன்ற சமண மதத்தினரின் புராணக் கதைகள் பிந்துசாரர் இறந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட கதைகளாகும் [2]. அசோகரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிக்கூறும் பல பௌத்த புராணங்களும் அசோகரின் மரணத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வாழ்ந்த பௌத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவையாகும். இந்த எழுத்தாளர்கள் சிறிய வரலாற்று மதிப்பை மட்டுமே கொண்டிருந்தனர் [3].
பிந்துசாரரின் ஆட்சியைப் பற்றி பல குறிப்புகள் உருவாக்க இந்த புராணங்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அசோகருக்கும் புத்தமதத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் காரணமாக அவை நம்பத்தகுந்ததாக இல்லை [2]. சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட திவ்வியவதனம், இலங்கையின் மிகப்பழமையான வரலாற்றுத் தொகுப்பான பாலி மொழியில் எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், வம்சதபக்சினி, சமந்தபாசடிக்கா மற்றும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாரனாதரின் எழுத்துக்கள் உள்ளிட்டவை பிந்துசாரர் தொடர்பான பௌத்த ஆதார மூலங்களாகும் [4][5][6] 12 ஆம் நூற்றாண்டில் ஏமச்சந்திரர் எழுதிய பரிச்சிசுட்ட பர்வன் என்ற நூலும், 19 ஆம் நூற்றாண்டில் தேவசந்திரர் எழுதிய ராசவளி கதா என்ற நூலும் பிந்துசாரர் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் சமண சமய ஆதார மூலங்களாகும் [7][8] பிந்துசாரர் மௌவுரிய ஆட்சியாளர்களின் மரபுவழியில் வந்தவர் என்று இந்து மத புராணங்கள் குறிப்பிடுகின்றன [9]. கிரேக்க புராணங்கள் இவரை அமிட்ரோகேட்டு என்கின்றன.
தொடக்கக்கால வாழ்க்கைதொகு
மௌரியப் பேரரசின் நிறுவனர் சந்திரகுப்தருக்கு மகனாக பிந்துசாரர் பிறந்தார். பல்வேறு புராணங்களும் மகாவம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் மூலம் இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது[10]. மறுபுறத்தில் மன்னர் சுசுநாகனின் மகனே பிந்துசாரர் என தீபவம்சம் கூறுகிறது [4]. பிந்துசாரர் நந்தாவின் மகன் என்றும் அவர் பிம்பிசாராவின் 10 வது தலைமுறை வம்சாவளி என்றும் அசோககவதனனின் உரைநடை பதிப்பு கூறுகிறது. தீபவம்சத்தைப் போல சந்திரகுப்தரின் பெயரை முற்றிலுமாக இது தவிர்த்து விடுகிறது. அசோகோகதனவின் பரவலான பதிப்பு சில வேறுபாடுகளுடன் இதேபோன்ற மரபுவழி கொண்டிருக்கிறது. அசோகவதனனின் அளவீட்டுப் பதிப்புகளும் இதேகருத்தை சில வேறுபாடுகளுடன் குறிப்பிடுகின்றன [4].
சந்திரகுப்தர் செல்லூசிட்சுடன் ஒரு திருமண உறவு கொண்டிருந்தார், இதிலிருந்து பிந்துசாரரின் தாய் கிரேக்க அல்லது மாசிடோனியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை [11]. 12 ஆம் நூற்றாண்டில் சமண எழுத்தாளர் ஏமச்சந்திரரின் பரிச்சிசுட்ட பர்வம் நுலின் படி பிந்துசாரரின் தாயர் பெயர் தூர்தரா என்பதாகும் [8].
பெயர்தொகு
பிந்துசாரர் என்ற பெயரை தீபவம்சம், மகாவம்சம் உள்ளிட்ட புத்த சமய நூல்கள் சிறு மாற்றங்களுடன் பிந்துசாரோ என்ற பெயராக அங்கீகரிக்கின்றன. பரிசிசுட்ட பர்வன் போன்ற சமண சமய நூல்களும் இந்து சமய புராண நூல்களும் விந்துசாரர் என்கின்றன. சந்திரகுப்தாவின் வாரிசாக வேறு பெயர்களை மற்ற புராணங்கள் தருகின்றன.
மேற்கோள்கள்தொகு
- ↑ Bindusara
- ↑ 2.0 2.1 Singh 2008, ப. 331-332.
- ↑ Srinivasachariar 1974, ப. lxxxvii-lxxxviii.
- ↑ 4.0 4.1 4.2 Srinivasachariar 1974, ப. lxxxviii.
- ↑ Singh 2008, ப. 331.
- ↑ S. M. Haldhar (2001). Buddhism in India and Sri Lanka (c. 300 BC to C. 600 AD). Om. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186867532. https://books.google.com/books?id=jOkQAQAAIAAJ.
- ↑ Daniélou 2003, ப. 108.
- ↑ 8.0 8.1 Motilal Banarsidass (1993). "The Minister Cāṇakya, from the Pariśiṣtaparvan of Hemacandra". in Phyllis Granoff. The Clever Adulteress and Other Stories: A Treasury of Jaina Literature. பக். 204–206. https://books.google.com/books?id=Po9tUNX0SYAC&pg=PA204.
- ↑ Guruge 1993, ப. 465.
- ↑ Srinivasachariar 1974, ப. lxxxvii.
- ↑ Arthur Cotterell (2011). The Pimlico Dictionary Of Classical Civilizations. Random House. பக். 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781446466728. https://books.google.com/books?id=3zy_zJdaSSIC&pg=PT189.