சாக்கியர்
சாக்கியர் (Shakya, சமசுகிருதம்: Śākya, தேவநாகரி: शाक्य, Pāli: Sākya) என்பவர்கள் பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சாக்கியர்கள் கோலியர்களுடன் திருமண தொடர்பு கொண்டவர்கள். சாக்கியர்களும் கோலியர்களும் தற்கால நேபாள நாட்டு, ரோகிணி ஆற்றின் இருகரைகளிலும் உள்ள லும்பினி மாவட்டப்பகுதிகளை ஆண்ட குடியரசுத் தலைவர்கள் ஆவர். சாக்கியர்களும், கோலியர்களும் கோசல நாட்டின் சிற்றரசர்கள் ஆவர்.
சமசுகிருதத்தில் சாக்கியம் என்பது ஆற்றலுடையவர் என்று பொருள். இவர்களின் வம்சாவளி பற்றிய குறிப்புகள் விஷ்ணு புராணம்,[1] பாகவத புராணம்[2] பிரம்ம புராணம்.[3] ஆகிய நூல்களில் காணப்படுகின்றது.
சாக்கியர்கள் சாக்கிய ஞான இராச்சியம் என்ற பெயரில் தனி அரசை அமைத்தனர். இவர்களின் தலைநகர் கபிலவஸ்து ஆகும். இது இந்தியாவின் இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தை எல்லையாகக் கொண்டு, இன்றைய நேபாளத்தில் அமைந்திருந்தது.[4]
சாக்கியர்களின் மிகப் பிரபலமாக இருந்தவர் இளவரசர் சித்தார்த்த சாக்கியர் (கிமு 5ம் நூற்றாண்டு). இவரே பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் ஆவார். சாக்கியக் குடியரசின் தலைவர் சுத்தோத்தனாவின் மகன் சித்தாத்தர். சித்தார்த்தர் புதிய மதத்தைத் தோற்றுவித்து முடி துறந்ததை அடுத்து அவரது மகன் ராகுலன் அரசனானார்.