மகாஜனபாதங்கள்

இந்தியத் துணைக் கண்ட இராச்சியங்கள் (அண். கி. மு. 600 - அண். கி. மு. 300)
(மகாஜனபதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகாஜனபாதங்கள் (Mahājanapadas, சமக்கிருதம்: பெரும் நாடுகள், மகா, "பெரும்", மற்றும் ஜனபாதங்கள் "மக்களின் காலடி ஆதாரம்") என்பவை பண்டைக்கால இந்தியாவில் நிலைத்திருந்த 16 இராச்சியங்கள் அல்லது சிலவர் ஆட்சிக் குடியரசுகள் ஆகும். இவை இரண்டாம் நகரமயமாக்கல் காலத்தின் போது கி. மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி. மு. 4ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தன.[2]

மகாஜனபாதங்கள்
அண். கி. மு. 600–அண். கி. மு. 345
16 மகாஜனபாதங்களின் வரைபடம்.[1]
16 மகாஜனபாதங்களின் வரைபடம்.[1]
தலைநகரம்பல்வேறு
பேசப்படும் மொழிகள்பாளி, பிராகிருதங்கள் மற்றும் சமசுகிருதம்
சமயம்
பண்டைக் கால இந்து சமயம்
சமணம் (பௌத்தம் மற்றும் சைனம்)
அரசாங்கம்குடியரசுகள் (கணசங்கங்கள்)
முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
அண். கி. மு. 600
• முடிவு
அண். கி. மு. 345
முந்தையது
பின்னையது
சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு
வேதகாலம்
ஜனபதங்கள்
குருதேசம்
நந்தர்
கி. மு. 500இல் இருந்த மகாஜனபாத நாடுகள்

கி. மு. 6 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலமானது ஆரம்ப கால இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இக்காலத்தின் போது இந்தியாவின் முதல் பெரும் நகரங்கள் தோன்றின. சமண இயக்கங்களின் (பௌத்தம் மற்றும் சைனம் உள்ளிட்ட) வளர்ச்சியின் காலமாகவும் இது திகழ்ந்தது. வேத காலத்தின் சமய மரபு சார் கொள்கைகளுக்கு இவை சவால் விடுத்தன.

மகாஜனபாதங்களில் இரண்டு பெரும்பாலும் கனசங்கங்களாகவும் (சிலவர் ஆட்சிக் குடியரசுகள்) மற்றும் பிற முடியரசு அமைப்புகளையும் கொண்டிருந்தன. அங்குத்தர நிகயா[3] போன்ற பண்டைக்கால பௌத்த நூல்கள் வடமேற்கே காந்தாரம் முதல் இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அங்கம் வரையிலான ஒரு பட்டை போன்ற வழியில் வளர்ந்து செழித்திருந்த 16 பெரும் இராச்சியங்கள் மற்றும் குடியரசுகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகின்றன. அவை விந்திய மலைப் பகுதிக்குத்[4] தெற்கே இருந்த பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தன. இவை அனைத்துமே இந்தியாவில் பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்னரே வளர்ச்சி அடைந்திருந்தன.[5]

தொல்லியல் ரீதியாக, வடக்கின் மெருகூட்டப்பட்டக் கருப்பு மட்பாண்டப் பண்பாட்டின் பங்காக இக்காலம் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்படுகிறது.[6]

மேற்பார்வை

தொகு
 
வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டின் மட்பாண்டம் (அண். கி. மு. 500 - கி. மு. 200)

"ஜனபாதங்கள்" என்ற சொல்லுக்கு "மக்களின் காலடி ஆதாரம்" என்று பொருள். ஜனபாதம் என்ற சொல்லானது ஜனம் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ள தகவலானது, ஒரு நிலையான வாழ்க்கை முறைக்காக ஜனமான மக்கள் நிலப்பரப்புகளை எடுத்துக் கொண்டதன் ஆரம்ப கட்டத்தைக் குறிப்பிடுகிறது. நிலம் மீது குடியமர்ந்த இந்த மாற்றமானது புத்தர் மற்றும் பாணினியின் காலங்களுக்கு முன்னரே அதன் இறுதிக் கட்டத்தை அடைந்தது. இந்த புத்தர் காலத்துக்கு முந்தைய வட இந்தியத் துணைக் கண்டமானது பல்வேறு ஜனபாதங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க எல்லைகள் இருந்தன. பாணினியின் "அஷ்தத்யயி" நூலானது, ஜனபாதம் என்பதன் பொருள் நாடு என்றும், ஜனபாதின் என்பதன் பொருள் குடிமக்கள் என்றும் குறிப்பிடுகிறது. இந்த ஒவ்வொரு ஜனபாதங்களும் அப்பகுதியில் குடியமர்ந்த சத்திரிய மக்களின் (சத்திரிய ஜனம்) பெயரால் அழைக்கப்பட்டது.[7][8][9][10][11][12][13][14] புத்தரின் காலத்துக்கு முன்னர் நிலைத்திருந்த 16 பெரும் நாடுகளைப் (சோலச மகாஜனபாதங்கள்) பௌத்த மற்றும் பிற நூல்கள் இடைத் தகவலாக மட்டுமே குறிப்பிடுகின்றன. மகதத்தைத் தவிர எந்த ஒரு மகாஜனபாதத்தின் இணைந்த வரலாற்றையும் அவை கொடுப்பதில்லை. பௌத்த நூலான அங்குத்தர நிகயா பல இடங்களில்[15] 16 பெரும் நாடுகளின் ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:

மற்றொரு பௌத்த நூலான திகா நிகயா மேற்கண்ட பட்டியலில் இருந்து 12 மகாஜனபாதங்களைக் குறிப்பிடுகிறது. ஆனால், நான்கைத் (அஸ்மகம், அவந்தி, காந்தாரம் மற்றும் கம்போஜம்) தவிர்க்கிறது.[16]

சுல்ல நித்தேசா எனும் மற்றொருப் பண்டைக் கால பௌத்த சமய நூலானது, கலிங்கத்தை இப்பட்டியலில் இணைக்கிறது. காந்தாரத்திற்குப் பதிலாக யவனர்களைச் சேர்க்கிறது. இவ்வாறாக, உத்தரபாதத்திலிருந்து கம்போஜம் மற்றும் யவனம் ஆகிய இரண்டு மகாஜனபாதங்களை மட்டுமே பட்டியலிடுகிறது.[17][18]

வியக்யபிரச்னபதி (அல்லது பகவதி சூத்திரம்) எனும் சைன சூத்திரமானது ஒரு வேறுபட்ட 16 மகாஜனபாதங்களின் பட்டியலைக் கொடுக்கிறது:

  1. அங்கம்
  2. பங்கா (வங்கா)
  3. மகதம்
  4. மலயம்
  5. மலவகம்
  6. அச்சா
  7. வச்சா
  8. கோச்சா
  9. பதா
  10. இலதா (இராத் அல்லது இலதா)
  11. பச்சி (வஜ்ஜி)
  12. மோலி (மல்லா)
  13. காசி
  14. கோசலம்
  15. அவகம்
  16. சம்புத்தரா
  17. ருகமா

பகவதி சூத்திரம் (அல்லது வியக்யபிரச்னபதி) நூலை எழுதியவர் மத்திய தேசம், தூரக் கிழக்கு மற்றும் தெற்கு நாடுகளை மட்டுமே குறித்து தனது கவனத்தை ஏற்படுத்தியுள்ளார். கம்போஜம் மற்றும் காந்தாரம் போன்ற உத்தரபாத நாடுகளைத் தவிர்த்துள்ளார். பகவதி சூத்திரத்தின் விரிவாக்கப்பட்ட புவியியல் மற்றும் உத்தரபாதத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளையும் தவிர்த்தது ஆகியவை பகவதி சூத்திரத்தின் பட்டியலானது "பிந்தைய காலத்தைச் சேர்ந்தது எனத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே இதைக் குறைவாகவே சார்ந்திருக்க இயலும்".[19]

மகாஜனபாதங்களின் பட்டியல்

தொகு

அங்கம்

தொகு

அங்கம் குறித்த முதல் குறிப்பானது அதர்வண வேதத்தில் காணப்படுகிறது. அதில் மகதம், காந்தாரம் மற்றும் முசவத்துடன் சேர்த்து இது குறிப்பிடப்படுகிறது. சைன பிரச்னபனாவானது அங்கத்தையும், வங்கத்தையும் ஆரிய மக்களின் முதல் குழுவில் தரப்படுத்துகிறது. பண்டைக் கால இந்தியாவின் முதன்மை நகரங்களாக இவற்றைக் குறிப்பிடுகிறது.[20] இது ஒரு பெரிய வணிக மையமாகவும் திகழ்ந்தது. இதன் வணிகர்கள் அடிக்கடித் தொலை தூரத்திலிருந்த சுவர்ணபூமிக்குக் கடற்பயணம் மேற்கொண்டனர். பிம்பிசாரரின் காலத்தின் போது மகதத்தால் அங்கமானது இணைத்துக் கொள்ளப்பட்டது. பிம்பிசாரரின் ஒரே ஒரு படையெடுப்பு இதுவாகும்.

அஸ்மகம்

தொகு

அஸ்மகப் பழங்குடியினத்தின் நாடானது தக்சிண பாதை அல்லது தென்னிந்தியாவில் அமையப் பெற்றிருந்தது. தற்கால ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, மற்றும் மகாராட்டிரத்தின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது.[21] புத்தரின் காலத்தில் பெரும்பாலான அஸ்மகர்கள் விந்திய மலைகளுக்குத் தெற்கே கோதாவரி ஆற்றின் கரைகளில் அமையப் பெற்றிருந்தனர். அஸ்மகர்களின் தலைநகரமானது போதனா அல்லது போதலி ஆகும். இது தெலங்காணாவின் தற்போதைய போதன் என்று கருதப்படுகிறது. இது பௌதன்யா என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[22] மகாராட்டிரத்தில் இதன் தலைநகரமானது போதலியில் அமையப் பெற்றிருந்தது எனக் கருதப்படுகிறது. இது மகாராட்டிராவின் புல்தானா மாவட்டத்தின் தற்கால நந்துரா என்று கருதப்படுகிறது. பாணினியாலும் அஸ்மகர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். மார்க்கண்டேய புராணம் மற்றும் பிர்கத் சம்கிதா ஆகியவை வடமேற்குப் பகுதியில் இவர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. முலகர்களின் (அல்லது அலகர்களின்) நாட்டிலிருந்து அஸ்மகர்களின் நாட்டைக் கோதாவரி ஆறானது பிரித்தது. மத்திய தேசத்திற்கு வெளிப்புறத்தில் அஸ்மக நாடானது அமைந்திருந்தது. தக்சிண பாதை எனப்படும் தெற்கு வழியில் இருந்தது. ஒரு காலத்தில் அஸ்மகமானது முலகாவையும் தன்னகத்தே கொண்டிருந்தது. அவந்தியுடன் எல்லையைக் கொண்டிருந்தது.[23]

அவந்தி

தொகு
 
அவந்தி மகாஜனபாதத்தின் வெள்ளி நாணயம் (கி. மு. 4ஆம் நூற்றாண்டு)

மேற்கு இந்தியாவின் முக்கியமான இராச்சியமாக அவந்தி நாடானது இருந்தது. மகாவீரர் மற்றும் புத்தர் காலத்துக்குப் பிந்தைய இந்தியாவில் நான்கு பெரிய முடியரசுங்களில் ஒன்றாகவும் இருந்தது. மற்ற மூன்று கோசல நாடு, வத்ச நாடு மற்றும் மகத நாடு ஆகியவையாகும். அவந்தியை வடக்கு மற்றும் தெற்கில் நருமதை ஆறானது பிரித்தது. ஆரம்பத்தில் தெற்கு அவந்தியின் தலைநகராக மகேஷ்வரும், வடக்கு அவந்தியின் தலைநகராக உஜ்ஜைனியும் இருந்தன. ஆனால், மகாவீரர் மற்றும் புத்தரின் காலத்தில் ஒன்றிணைந்த அவந்தியின் தலைநகரமாக உஜ்ஜைனி இருந்தது. அவந்தி நாட்டின் பகுதிகளானவை நவீன மால்வா, நிமர் மற்றும் நவீன மத்தியப் பிரதேசத்துடன் இணைந்துள்ள பகுதிகளாக இருந்தது. மகேஷ்வரும் மற்றும் உஜ்ஜைனியும் தெற்கு உயர் சாலை எனப்படும் தக்சிண பாதையில் அமைந்திருந்தன. இப்பாதை ராஜகிரகம் முதல் பிரதிஷ்தனா (நவீன பைத்தான் நகரம்) வரை விரிவடைந்திருந்தது. அவந்தி புத்த மதத்திற்கு ஒரு முக்கியமான மையமாக இருந்தது. சில முன்னணி தேரர்களும், தேரிகளும் அங்கு பிறந்து வாழ்ந்து வந்தனர். அவந்தியின் மன்னரான நந்தி வர்தனர் மகதத்தின் சிசுநாகரால் தோற்கடிக்கப்பட்டார். அவந்தியானது பின்னர் மகதப் பேரரசின் பகுதியானது.[சான்று தேவை]

சேதி

தொகு

சேதி என்பவர்கள் இரண்டு தனித்துவமான குடியிருப்புகளைக் கொண்டிருந்தனர். நேபாளத்தின் மலைகளில் ஒன்றும், மற்றொன்று கோசாம்பிக்கு அருகில் புந்தேல்கண்டில் மற்றொன்றும் இருந்தன. பழைய அதிகாரமுடையோர், சேதியானது யமுனை ஆற்றுக்கு அருகில் அமைந்திருந்தது என்றும், குரு மற்றும் வத்ச இராச்சியங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது என்றும் குறிப்பிடுகின்றன. நடுக்காலத்தில் சேதி நாட்டின் தெற்கு எல்லைகள் நருமதை ஆற்றின் கரைகள் வரை விரிவடைந்து இருந்தன. சோத்திவத்நகரா, சுக்தி அல்லது சுக்திமதி என மகாபாரதத்தில் குறிப்பிடப்படுவது சேதி நாட்டின் தலைநகரம் ஆகும். சேதிக்கள் இந்தியாவின் பண்டைக்கால மக்கள் ஆவர். இவர்கள் இருக்கு வேதத்தில் இவர்களது மன்னர் காசு சைத்யாவுடன் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[24]

தலை நகரமான சுக்திமதியின் அமைவிடமானது எந்த இடத்தில் அமைந்திருந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றாளர் ஹேமச்சந்திர ராய் சௌதாரி மற்றும் பர்கிதேர் ஆகியோர் உத்தரப்பிரதேசத்தின் பந்தாவிற்கு அருகில் இது அமைந்திருந்திருக்கும் என்று நம்புகின்றனர்.[24] தொல்லியலாளர் திலிப் குமார் சக்கரவர்த்தி, மத்திய பிரதேசத்தின் ரேவாவுக்கு வெளிப்புறத்தில் இதாகா என்ற பெயருடைய நவீன இடத்தில் இருக்கும் ஒரு பெரிய ஆரம்ப வரலாற்றுக் கால நகரத்தின் சிதிலங்களுடன் சுக்திமதியை அடையாளப்படுத்தலாம் என்று முன்மொழிகிறார்.[25]

காந்தாரம்

தொகு

காந்தாரர்களின் கம்பளியானது இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தாரமும், அதன் மன்னரும் மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராகக் குருக்களின் வலிமையான கூட்டாளிகளாக முதன்மையாகச் சித்தரிக்கப்படுகின்றனர். காந்தார நாட்டவர் வன்மையான மக்கள் ஆவர். போர்க்கலையில் நன்றாகப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். புராணங்களின்படி, இந்த ஜனபாதமானது யயதியின் ஒரு வழித்தோன்றலான அருத்தாவின் மகனான காந்தாராவால் நிறுவப்பட்டது. ரிக்வேத காலத்தில் புகழ்பெற்ற மன்னராக இருந்த துருகுயுவின் வழித்தோன்றல்களாக இந்த நாட்டின் இளவரசர்கள் இருந்தனர் என்று கூறப்பட்டது. சந்திர வம்சத்தின் மன்னர் யயதியின் ஐந்து மகன்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறது. காந்தார நாட்டவரின் நிலப்பரப்புகளுக்குச் சிந்து ஆறானது நீர் கொடுத்தது. தக்சசீலமும், புஷ்கலாவதியும் இந்த மகாஜனபாதத்தின் இரண்டு நகரங்கள் ஆகும். கடவுள் இராமரின் தம்பியும் அயோத்தியின் ஒரு இளவரசருமான பரதரின் இரு மகன்களான தக்சா மற்றும் புஷ்கரா ஆகியோரின் பெயரால் இந்த இரு நகரங்களும் பெயரிடப்பட்டன என்று கூறப்படுகிறது. வாயு புராணத்தின் (II.36.107) படி, கலி யுகத்தின் இறுதியில் காந்தார நாட்டவரைப் பிரமிதி (அல்லது கலிகா) அழித்தார். பாணினியின் அஷ்டாத்தியாயீ நூலானது வேத கால காந்தாரிகள் மற்றும் பிந்தைய கால காந்தாரர்கள் ஆகிய இருவரையுமே குறிப்பிடுகிறது. காந்தார இராச்சியமானது சில நேரங்களில் காஷ்மீர நாட்டையும் உள்ளடக்கியிருந்தது.[27] மிலேதுசின் கெகாதேயுசு (549-468) கசுபபைரோசை (கஸ்யபுரம் அல்லது புருசபுரம், அதாவது நவீன கால பெசாவர்) ஒரு காந்தார நகரம் என்று குறிப்பிடுகிறார். காந்தார ஜாதகம் என்ற நூலின்படி, ஒரு நேரத்தில் காந்தாரமானது காஷ்மீர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. காந்தாரத்திற்கு மற்றொரு பெயராக இந்த ஜாதகமானது சந்தகாரா என்ற பெயரையும் கொடுக்கிறது.

பௌத்த சமய நூல்களின் காந்தார மகாஜனபாதமானது கிழக்கு ஆப்கானித்தான், வடமேற்கு பஞ்சாப் (நவீன மாவட்டங்களான பெசாவர் (புருசபுரம்) மற்றும் இராவல்பிண்டி) ஆகியவற்றி நிலப்பரப்புக்களை உள்ளடக்கி இருந்தது. இதன் பிந்தைய தலைநகரமானது தக்சசீலம் ஆகும். பண்டைய காலங்களில் தக்சசீலப் பல்கலைக்கழகமானது ஒரு புகழ்பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது. தங்களது உயர் கல்விக்காக உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் இங்கு வருகை புரிந்தனர். இந்திய இலக்கணவியலாளரான பாணினி மற்றும் சாணக்கியர் ஆகியோர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தின் உலகப் புகழ்பெற்ற மாணவர்கள் ஆவர். கி. மு. 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காந்தாரத்தின் மன்னனாக இருந்த புக்குசதி அல்லது புஷ்கரசரின் என்பவர் மகதத்தின் மன்னனான பிம்பிசாரரின் சமகாலத்தவர் ஆவார். காந்தாரமானது பெரிய வடக்கு உயர் சாலையான உத்தரப் பாதையில் அமைந்திருந்தது. பன்னாட்டு வணிகச் செயல்களின் ஒரு மையமாகத் திகழ்ந்தது. அறிஞர்களின் ஒரு குழுவின் கூற்றுப்படி, காந்தாரர்களும், கம்போஜர்களும் தொடர்புடைய மக்களாவர்.[28][29][30] குருக்கள், காம்போஜர்கள், காந்தாரர்கள் மற்றும் பகுலிகாக்கள் ஆகிய அனைவரும் ஒரே மக்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.[31] டி. எல். ஷா என்பவரின் கூற்றுப்படி, காந்தாரமும், கம்போஜமும் ஒரே பேரரசின் இரு மாகாணங்கள் ஆகும். இவை அண்டைப் பகுதிகளாக இருந்தன. எனவே, ஒன்று மற்றொன்றின் மொழி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.[32] இயற்கையிலேயே, இவர்கள் ஒரு காலத்தில் ஒரே மக்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.[33] அரசியல் ரீதியாக அண்டைப் பகுதிகளான காஷ்மீர் மற்றும் கம்போஜத்துடன் காந்தாரமானது அடிக்கடி தொடர்புபடுத்தப்படுகிறது.[34]

கம்போஜம்

தொகு

கம்போஜமானது உத்தரப் பாதையிலும் உள்ளடக்கப்பட்டிருந்தது. பண்டைக்கால இலக்கியங்களில் கம்போஜமானது காந்தாரர்கள், தராதரர்கள் மற்றும் பகிலிகா (பாக்திரியா) ஆகியவற்றுடன் பலவராகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பண்டைக்கால கம்போஜமானது இந்து குஃசு மலைப்பகுதிக்கு இரு பக்க வாட்டிலும் இருந்த பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்ததாக அறியப்படுகிறது. உண்மையான கம்போஜமானது கிழக்கு ஆமூ தாரியா நாட்டில், பகிலிகர்களின் அண்டை நாடாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் காம்போஜர்களின் சில குலங்கள் இந்து குஃசு மலையைக் கடந்ததாகத் தோன்றுகிறது. தெற்குப் பகுதியிலும் காலனிகளை அவர்கள் உருவாக்கினர். இந்திய இலக்கியத்தில் இந்தப் பிந்தைய காம்போஜர்கள் தராதரர்கள் மற்றும் காந்தாரர்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றனர். அசோகரின் கல்வெட்டுகளும் இவர்களைக் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதம் மற்றும் தொலெமியின் புவிவியல் நூல் ஆகியவை தனித்தனியாக இரண்டு கம்போஜர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சான்றாக அமைகின்றன.[35] நூரிஸ்தான் முதல் தென்மேற்கு காஷ்மீரின் ரஜௌரி வரையிலான இந்து குஃசு பகுதியானது தராதரர்கள் மற்றும் காந்தாரர்களுடன் எல்லைகளைப் பங்கிட்டு இருந்தது. இது கம்போஜ நாடு ஆகும்.[36] கம்போஜர்களின் தலைநகரமானது தென்மேற்கு காஷ்மீரின் இராஜபுரம் (நவீன ரஜோரி) என்று கருதப்படுகிறது. பௌத்த சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கம்போஜ மகாஜனபாதமானது பண்டைக்கால காம்போஜர்களின் இந்து குஃசு பிரிவினரைக் குறிப்பிடுகிறது.[37]

பாமிர்கள் மற்றும் பதாக்சானை உள்ளடக்கி இருந்த தெற்கு இந்து குஃசு பகுதியானது பரம காம்போஜ நாடு என்று அழைக்கப்பட்டது. பதாக்சானது மேற்கில் பாக்லீகர்கள் (பாக்திரியா) மற்றும் வடக்கில் லோகர்கள் மற்றும் சோக்தியானா/பெர்கானாவின் ரிஷிகர்கள் ஆகியோருடன் எல்லைகளைக் கொண்டிருந்தது.[38] இந்து குஃசு மலைக்குத் தெற்கில் இருந்த கம்போஜர்களின் பிரிவினர் சுத்தமான ஈரானியர்களாகத் தொடர்ந்தனர். ஆனால், இந்து குஃசு பகுதியில் இருந்த ஒரு பெருமளவிலான பிரிவான கம்போஜர்கள் இந்தியக் கலாச்சாரத் தாக்கத்தின் கீழ் வந்தனர் என்று தோன்றுகிறது. ஈரானிய மற்றும் இந்தியச் சாயல் ஆகிய இரண்டையுமே கம்போஜர்கள் கொண்டிருந்தவர்களாக அறியப்படுகின்றனர்.[39][40][41][42][43][44][45][46][47][48][49]

இதிகாசக் காலங்களில் இருந்து காம்போஜர்கள் ஒரு நன்றாக அறியப்பட்ட குடியரசு மக்கள் ஆவர். கம்போஜர்களின் ஏராளமான கனா (அல்லது குடியரசுகள்) பற்றி மகாபாரதம் குறிப்பிடுகிறது.[50] சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமானது[51] கம்போஜர்களின் குடியரசுத் தன்மையைக் குறிப்பிடுகிறது. அசோகரின் எட்டாம் கல்வெட்டானது காம்போஜர்களை யவனருடன் சேர்த்துக் குறிப்பிடுகிறது.[52] பாணினியின் சூத்திரங்களில்[53] குறிப்பிட்டுள்ள காம்போஜர்கள் ஒரு சத்திரிய முடியரசு என்று அறியப்படுகின்றனர். "சிறப்பான ஆட்சி மற்றும் தனித்துவமான அமைப்பு" ஆகியவை கம்போஜர்களின் ஆட்சியாளரானவர் பெயரளவிலான மன்னர் மட்டுமே என்று காட்டுகின்றன. [54]பௌத்த சமய நூல்களின்படி மேற்கண்ட முதல் 14 மகாஜனபாதங்கள் மஜ்ஜிமாதேசத்தைச் (நடு இந்தியா) சேர்ந்தவையாகும். அதே நேரத்தில், கடைசி இரண்டு உத்தரப் பாதை அல்லது நாவலந்தீவின் வடமேற்குப் பிரிவைச் சேர்ந்தவை ஆகும்.

கி. மு. 6ஆம்/5ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து முதன்மை நிலைக்கான போராட்டத்தில் வளர்ந்து வந்த மகதமானது பண்டைக்கால இந்தியாவில் முதன்மையான சக்தியாக உருவானது. மஜ்ஜிமதேசத்தின் ஏராளமான ஜனபாதங்களைத் தன்னுடன் இணைத்தது. புராணங்களில் ஒரு வரியானது மகதப் பேரரசரான மகாபத்ம நந்தன் அனைத்துச் சத்திரியர்களையும் கொன்றார் என்று குறிப்பிடுகிறது. இதற்குப் பிறகு சத்திரியர் என்று பெயரைக் குறிப்பிடத் தகுந்த யாரைப் பற்றியும் தகவல்கள் இல்லை. இது காசிக்கள், கோசலர்கள், குருக்கள், பாஞ்சாலர்கள், வத்சயர்கள் மற்றும் கிழக்குப் பஞ்சாபின் பிற முன் வேத காலப் பழங்குடியினங்களைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது எனக் கருதப்படுகிறது. இவர்களைப் பற்றி புராணம் மற்றும் கவிதை தவிர இதற்குப் பிறகு எந்தவிதத் தகவலும் இல்லை. அண். கி. மு. 345இல் சிசுநாக அரசமரபின் அரியணையை நந்த அரசமரபினர் தவறான வழியில் கைப்பற்றினர். இவ்வாறாக நந்தப் பேரரசைத் தோற்றுவித்தனர்.[55]

எனினும், கம்போஜர்களும், காந்தாரர்களும் மகத அரசுடன் சந்திரகுப்தர் மற்றும் சாணக்கியர் நிகழ்வுக்கு வரும் வரையில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தவில்லை. சைரசின் (கி. மு. 558 - கி. மு. 530) ஆட்சி அல்லது தாரியசின் முதலாம் ஆண்டின் போது ஈரானின் அகாமனிசியப் பேரரசுக்கு இரு நாடுகளும் இரையாயின. அகமானிசியப் பேரரசின் 12வது மற்றும் முதன்மையான செல்வச் செழிப்பு மிக்கச் சத்திரப்புவாக கம்போஜமும், காந்தாரமும் இணைந்து உருவாயின. பரோபமிசதில் கபிசி (நவீன பாக்ராம்) என்று அழைக்கப்பட்ட பிரபலமான கம்போஜ நகரத்தையும் முதலாம் சைரசு அழித்தார் என்று கூறப்படுகிறது.

காசி

தொகு

இந்த இராச்சியமானது இதன் தலைநகரம் வாரணாசியைச் சுற்றி இருந்த பகுதியில் அமைந்திருந்தது. இது வடக்கு மற்றும் தெற்கு வருணா மற்றும் அசி ஆறுகளை எல்லைகளாகக் கொண்டிருந்தது. இந்த இரண்டு ஆறுகளும் இதற்கு வாரணாசி என்ற பெயரைக் கொடுத்தன. புத்தருக்கு முன்னர் 16 மகாஜனபாதங்களில் மிகுந்த சக்தி வாய்ந்ததாக காசி திகழ்ந்தது. இந்தியாவில் பிற நகரங்களைக் காட்டிலும் இதன் தலைநகரம் கொண்டிருந்த முதன்மை நிலையை ஏராளமான ஜாதகக் கதைகள் விளக்குகின்றன. இதன் செல்வச் செழிப்பைப் பற்றி மிக உயர்வாகப் பேசுகின்றன. காசி மற்றும் மூன்று இராச்சியங்களான கோசல நாடு, அங்கம் மற்றும் மகத நாடு ஆகியவற்றுக்கிடையே முதன்மை நிலைக்கான நீண்ட போராட்டத்தை இந்தக் கதைகள் கூறுகின்றன. காசியின் மன்னனான பிரகத்ரதர் கோசல நாட்டை வென்றிருந்த போதும், புத்தரின் காலத்தின் போது கன்சா மன்னனின் காலத்தில் கோசல நாட்டுடன் காசியானது இணைக்கப்பட்டது. காசி நாட்டவர் கோசலர்கள் மற்றும் விதேகர்களுடன் வேத நூல்களில் முதலில் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் நெருக்கமாக ஒன்றிணைந்த மக்களாகத் தோன்றுகிறது. மச்ச புராணம் மற்றும் அல்பெருனி ஆகிய நூல்கள் காசியைக் கெளசிகா மற்றும் கெளஷகா என்று முறையே குறிப்பிடுகின்றன. மற்ற பிற அனைத்து பண்டைக்கால நூல்களும் காசி என்றே குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]

கோசலம்

தொகு
 
கோசல மகாஜனபாதத்தின் வெள்ளி நாணயங்கள் (அண். கி. மு. 525 - கி. மு. 465)

மகதத்திற்கு வடமேற்கே கோசல நாடானது அமைந்திருந்தது. இதன் தலைநகரம் அயோத்தி ஆகும். உத்தரப் பிரதேசத்தின் நடு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள நவீன அவத் பகுதியுடன் இதன் நிலப்பரப்பு ஒத்துப்போகிறது. இது தன் தெற்கு எல்லையாகக் கங்கையாற்றையும், கிழக்கு எல்லையாக கந்தக் (நாராயணி) ஆற்றையும், வடக்கு எல்லையாக இமய மலைகளையும் கொண்டுள்ளது. வேத காலத் தர்மத்தின் மையமாக இது குறிப்பிடப்படுகிறது. தைத்தியர்கள், இராட்சதர்கள் மற்றும் அசுரர்களுக்கு எதிரான பல்வேறு போர்களில் இதன் மன்னர்கள் தேவர்களுடன் இணைந்தனர். இந்து சமயப் புனித நூல்கள், இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் கோசலமும், அயோத்தியும் ஒரு மையமான இடத்தைப் பெற்றுள்ளன. இரகுவம்ச-இஷ்வாகு வம்சமானது இங்கு நீண்ட காலம் தொடர்ச்சியாக ஆட்சி செய்த அரசமரபு ஆகும். இந்த அரசமரபின் ஒரு மன்னர் தான் கடவுள் இராமர். மற்ற பெரிய மன்னர்கள் பிரிது, அரிச்சந்திரன் மற்றும் திலீபர் ஆகியோர் ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பட்ட புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்நூல்களின் படி, வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகப் பெரிய இராச்சியமானது கோசலம் ஆகும்.

 
கௌதம புத்தரைச் சந்திப்பதற்காகச் சிராவஸ்தியில் இருந்து புறப்படும் கோசல மன்னர் பசேனதியின் ஊர்வலம். இடம் சாஞ்சி.[56]

மகாவீரர் மற்றும் புத்தரின் சகாப்தத்தின் போது, இந்த இராச்சியமானது புகழ்பெற்ற மன்னரான பசேனதியால் ஆளப்பட்டது. அவருக்குப் பிறகு அவரது மகன் விதுதபா (விருதகா) ஆட்சிக்கு வந்தார். மன்னர் பசேனதி மிகுந்த கல்வியறிவு பெற்றவர் ஆவார். மகதத்துடன் ஒரு திருமண உறவை ஏற்படுத்தியதன் மூலம் இவரது நிலையானது இன்னும் வலிமையானது. இவரது சகோதரி பிம்பிசாரரைத் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்திற்காகக் காசியின் ஒரு பகுதி வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. எனினும், மன்னர் பசேனதி மற்றும் மகதத்தின் மன்னரான அஜாதசத்ருவுக்கு இடையில் முதன்மை நிலைக்காக ஒரு போராட்டம் ஏற்பட்டது. இறுதியாக லிச்சாவி கூட்டமைப்பை மகதம் வென்ற போது இப்பிரச்சனை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கோசலத்தின் மன்னராக விதுதபா இருந்த போது கோசலம் இறுதியாக மகதத்துடன் இணைக்கப்பட்டது. கோசலத்தின் முதன்மையான நகரங்களாக அயோத்தி, சாகேதம், வாரணாசி, மற்றும் சிராவஸ்தி ஆகியவை இருந்தன.[சான்று தேவை]

குரு

தொகு
 
குரு மகாஜனபாதத்தின் வெள்ளி நாணயம் (கி. மு. 4ஆம் நூற்றாண்டு)

புராணங்கள் குருக்களின் பூர்வீகத்தைப் புரு-பாரதக் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. புரு அரசமரபுக்கு 25 தலைமுறைகள் கழித்துக் குரு பிறந்தார். குருவுக்குப் பிறகு 15 தலைமுறைகள் கழித்துக் கௌரவர்களும், பாண்டவர்களும் பிறந்தனர். அயித்தரேயப் பிராமணமானது குருக்களை மத்திய தேசத்தில் அமைவிடம் பெற்றவர்களாகக் குறிப்பிடுகிறது. மேலும், உத்தர குருக்களை இமயமலை தாண்டி வாழ்பவர்களாகக் குறிப்பிடுகிறது. பௌத்த சமய நூலான சுமங்கவிலாசினி,[57] குரு இராட்டிரமானது (குருக்கள்) உத்தர குருவிலிருந்து வந்தனர் எனக் குறிப்பிடுகிறது. புரு பரம்பரையின் சம்வர்சனரின் மகனாகக் குரு இருந்தார் என வாயு புராணம் குறிப்பிடுகிறது. குருக்களுக்குப் பெயரைக் கொடுத்து மூதாதையராக இவர் கருதப்படுகிறார். குருச்சேத்திரத்தில் உள்ள குரு இராட்டிரத்தின் (குரு ஜனபாதம்) நிறுவனராக இவர் குறிப்பிடப்படுகிறார். குருக்களின் நாடானது தோராயமாகத் தற்போதைய தானேசர், தில்லி மாநிலம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டம் ஆகியவற்றுடன் ஒத்ததாயிருந்தது. ஜாதகக் கதைகளின் படி, குருக்களின் தலைநகரம் இந்திரப்பிரஸ்தம் (இந்தபட்டா) ஆகும். இது நவீன தில்லிக்கு அருகில் அமைந்திருந்தது. இது சுமார் 35 கிலோ மீட்டருக்கு விரிவடைந்து இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. புத்தரின் காலத்தில் குரு நாடானது பெயரளவுத் தலைவராக இருந்த கோரய்வியா என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. புத்தரின் காலத்தில் குருக்கள் தாங்கள் வேத காலத்தில் பெற்றிருந்த அதே பதவியைப் பெற்றிருக்கவில்லை, எனினும், பண்டைக் காலத்தில் ஆழ்ந்த புத்திசாலித்தனம் மற்றும் வலிமையான உடல் நலத்திற்காகப் பெற்றிருந்த பெயரைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். யாதவர்கள், போஜர்கள், திரிகிராதர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் உடன் குருக்கள் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். ஜாதகக் கதைகளில் மன்னர் தனஞ்செயனைப் பற்றிக் குறிப்பு உள்ளது. தருமரின் இனத்தைச் சேர்ந்த ஒரு இளவரசராக இவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். ஆரம்ப காலத்தில் நன்றாக அறியப்பட்ட முடியரசு மக்களாக இருந்த போதிலும் கி. மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி. மு. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தின் போது ஒரு குடியரசு அமைப்பு அரசாங்கத்திற்கு மாறியதாகக் குருக்கள் அறியப்படுகின்றனர். கி. மு. 4ஆம் நூற்றாண்டில் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும் குருக்கள் இராஜசப்தோபசிவின் (மன்னர் பேராளர்) அரசியலமைப்பைப் பின்பற்றுபவர்களாகக் குறிப்பிடுகிறது.

மகதம்

தொகு
 
மகத மகாஜனபாதத்தின் வெள்ளி நாணயம் (அண். கி. மு. 350)

மகதமானது மகாஜனபாதங்களிலேயே மிகுந்த முக்கியத்துவம் கொண்ட மற்றும் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் (தற்போதைய பட்னாவுக்கு அருகில்) ஆகும். கங்கை, சோ, புன்புன் மற்றும் கந்தக் போன்ற முக்கியமான ஆறுகள் இணையும் இடத்தில் இது அமைந்திருந்தது. இப்பகுதியின் வண்டல் சமவெளிகள், மற்றும் பீகார் மற்றும் சார்க்கண்டு பகுதிகளின் செம்பு மற்றும் இரும்பு மிகுந்த பகுதிகளுக்கு அருகில் அமைந்திருந்தது ஆகியவை இந்த இராச்சியம் நல்ல தரமுடைய ஆயுதங்களை உருவாக்குவதற்கும், விவசாயப் பொருளாதாரத்துக்கு ஆதரவளித்ததற்கும் உதவி செய்தது. இது அக்கால வணிக நெடுஞ்சாலைகளின் மையத்தில் அமைந்திருந்ததானது இதன் செல்வச் செழிப்புக்குப் பங்களித்தது. அக்காலத்தின் மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க நாடாக மகதம் உருவாவதற்கு இந்த அனைத்துக் காரணிகளும் உதவி புரிந்தன.[சான்று தேவை]

 
மகதத்தின் மன்னரான பிம்பிசாரர் இராஜக்ரிகாவிலுள்ள மூங்கில் தோட்டத்திற்கு (வேணுவனா) வருகை புரிகிறார். சாஞ்சியைச் சேர்ந்த ஒரு கலை வேலைப்பாடு.

மகத இராச்சியமானது தற்போதைய தெற்கு பீகாரின் பட்னா மற்றும் கயா மாவட்டங்கள், மற்றும் கிழக்கு வங்காளத்தின் பகுதிகள் ஆகியவற்றுடன் தோராயமாக ஒத்துப் போகிறது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரமாகும். பாடலிபுத்திரத்துக்கு வடக்கு எல்லையாகக் கங்கை ஆறும், கிழக்கு எல்லையாகச் சாம்பா ஆறும், தெற்கே விந்திய மலைகளும், மேற்கே சோனா ஆறும் அமைந்திருந்தன. புத்தரின் காலத்தில் இதன் எல்லைகள் அங்கத்தையும் கொண்டிருந்தன. இதன் தொடக்க காலத் தலைநகரமானது கிரிவ்ராஜா அல்லது இராஜககா (தற்போதைய இராஜ்கிர், நாளந்தா மாவட்டம், பீகார்) ஆகும். இத்தலைநகரத்திற்கான மற்ற பெயர்கள் மகதபுரம், பிரிகத்ரதபுரம், வசுமதி, குசக்ரபுரம் மற்றும் பிம்பிசாரபுரி ஆகியவையாகும். இது பண்டைக் காலங்களில் ஒரு செயல்பட்டுக் கொண்டிருந்த சைன மையமாகத் திகழ்ந்தது. முதல் பௌத்த மாநாடானது வைபரக் குன்றுகளில் உள்ள இராஜககத்தில் நடைபெற்றது. பிற்காலத்தில் மகதத்தின் தலைநகராகப் பாடலிபுத்திரம் உருவானது.[சான்று தேவை]

மல்லம்

தொகு
மல்லர்களின் நகரமான குசி நகரின் முதன்மை வாயிற்கதவு. அனுமானத்தின் அடிப்படையிலான மறு கட்டமைப்பு. ஆண்டு அண். கி. மு. 500. சாஞ்சியில் உள்ள ஒரு சிற்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
கி. மு. 5ஆம் நூற்றாண்டில் குசி நகர். சாஞ்சி தூபி 1 தெற்கு வாயிலில் உள்ள சிற்பம்.

மல்லகர்கள் அடிக்கடிப் பௌத்த மற்றும் சைன நூல்களில் குறிப்பிடப்படுகின்றனர். வட இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு சக்தி வாய்ந்த மக்கள் இவர்கள் ஆவர். மகாபாரதத்தின் படி, பாண்டு புத்திரனான வீமசேனர் மல்லர்களின் தலைவரை வென்றார் என்று கூறப்படுகிறது. கிழக்கு இந்தியாவில் தனது போர் நடவடிக்கையின் போது இவ்வாறு செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது. பௌத்த காலத்தின் போது மல்ல சத்திரியர்கள் ஒரு குடியரசு மக்களாக இருந்தனர். இவர்களது நிலப்பரப்பானது ஒன்பது பகுதிகளைக்[58] கொண்டிருந்தது. இது ஒன்பது கூட்டமைக்கப்பட்ட இனங்களை ஒத்திருந்தது. இந்தக் குடியரசு நாடுகள் கனசங்கங்கள் என்று அறியப்பட்டன. இதில் இரண்டு கூட்டமைப்புகள் புத்தரின் காலத்தில் மிகுந்த முக்கியத்துவமுள்ளவையாக உருவாயின. ஒன்று குசி நகரை (தற்கால கசியா, கோரக்பூருக்கு அருகில் உள்ளது) அதன் தலைநகரமாகக் கொண்டிருந்தது. மற்றொன்று பாவாவை (தற்கால பாசில் நகர், குசி நகருக்குத் தென் கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) அதன் தலைநகரமாகக் கொண்டிருந்தது. புத்தர் தனது கடைசி உணவைப் பாவாவில் எடுத்துக் கொண்டதில் இருந்து பௌத்த வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இடமாகத் திகழ்ந்தது. புத்தர் பாவாவில் உடல் நலம் குன்றினார். குசி நராவில் இறந்தார். குசி நகரின் மன்னரான சஸ்டிபால் மாலின் அரசவையில் புத்தர் இறந்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது. குசி நகர் தற்போது பௌத்தப் புனிதப் பயண வட்டத்தின் மையமாக உள்ளது. உத்தரப்பிரதேச சுற்றுலா முன்னேற்ற நிறுவனத்தால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

லிச்சாவிகளைப் போலவே மல்லர்கள் மனுதரும சாத்திரத்தில் விராத்ய சத்திரியர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். மகாபர்னிப்பன சுத்தந்தாவில் இவர்கள் வைசித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மல்லர்கள் உண்மையில் ஒரு குடியரசு வகையிலான அரசாங்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், பின்னர் சங்கம் (குடியரசு) வகையிலான ஒரு அரசாங்க அமைப்புக்கு மாறினர். இதன் உறுப்பினர்கள் தங்களை இராஜாக்கள் என்று அழைத்துக் கொண்டனர். தங்கள் தற்காப்புக்காக லிச்சாவிகளுடன் ஒரு கூட்டமைப்பை மல்லர்கள் ஏற்படுத்திக் கொண்டதாகத் தோன்றுகிறது. ஆனால், புத்தரின் இறப்பிற்குப் பிறகு சிறிது காலத்திலேயே இவர்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர். இவர்களது நிலப்பரப்புகள் மகதப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்பட்டன.[சான்று தேவை]

 
சாஞ்சியில் சித்தரிக்கப்பட்டுள்ள படி குசி நகரத்தைத் தற்காக்கும் மல்லர்கள். மல்லமானது ஒரு பண்டைக்கால இந்தியக் குடியரசு (கனசங்கம்) ஆகும். இது அங்குத்தர நிகயாவில் குறிப்பிடப்பட்டுள்ளது..[59]

மத்சயம்

தொகு

மத்சயப் பழங்குடியினரின் நாடானது குருக்களுக்குத் தெற்கிலும், யமுனை ஆற்றுக்கு மேற்கிலும் அமைந்திருந்தது. யமுனையானது மத்சயர்களைப் பாஞ்சாலர்களிடமிருந்து பிரித்தது. இராசத்தானின் முந்தைய செய்ப்பூர் அரசுடன் இதன் பரப்பளவு தோராயமாக ஒத்துப்போகிறது. ஒட்டுமொத்த அல்வார் மற்றும் பரத்பூரின் சில பகுதிகள் ஆகியற்றையும் இது உள்ளடக்கியிருந்தது. மத்சயர்களின் தலைநகரம் விரதநகரம் (நவீன பைரத்) ஆகும். இந்த நாட்டை நிறுவிய மன்னரான விரதருக்குப் பிறகு இது பெயரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. பாளி இலக்கியத்தில் மத்சயர்கள் பொதுவாக சூரசேனர்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றனர். மேற்கு மத்சயமானது சம்பையின் ஆற்றின் வடக்குக் கரையில் ஒரு குன்றுப் பகுதியில் அமைந்திருந்தது. மத்சயர்களின் ஒரு பிரிவானது பிற்காலத்தில் விசாகப்பட்டினம் பகுதியிலும் கண்டறியப்பட்டுள்ளது. புத்தரின் காலத்தின் போது இந்த மத்சயர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை.[சான்று தேவை]

பாஞ்சாலம்

தொகு
 
அதிச்சத்திர பாஞ்சாலர்களின் நாணயம் (கி. மு. 75 - கி. மு. 50). முற்பகுதி இந்திரன் அமர்ந்திருத்தல். பிற்குதி பிராமி எழுத்துமுறையில் இத்ரமித்ரசா, பாஞ்சாலச் சின்னங்கள்.

பாஞ்சாலர்கள் குருக்களுக்குக் கிழக்கில் இருந்த நாட்டில் வாழ்ந்தனர். இவர்கள் மலைகள் மற்றும் கங்கை ஆற்றுக்கு நடுவில் வாழ்ந்தனர். நவீன புதௌன், பரூக்காபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் அண்டை மாவட்டங்களுடன் இதன் நிலப்பரப்பு ஒத்துப்போகிறது. இந்த நாடானது உத்தர பாஞ்சாலம் மற்றும் தக்சிண பாஞ்சாலம், அதாவது வடக்குப் பாஞ்சாலம் மற்றும் தெற்குப் பாஞ்சாலம் என்று பிரிக்கப்பட்டிருந்தது. வடக்குப் பாஞ்சாலத்தின் தலைநகரமானது அதிச்சத்ரா அல்லது சத்ரவதி (நவீன இராம்நகர், பரேலி மாவட்டம்) அமைந்திருந்தது. அதே நேரத்தில், தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரானது கம்பில்யா அல்லது பரூக்காபாத் மாவட்டத்தின் கம்பிலில் அமைந்திருந்தது. புகழ்பெற்ற நகரமான கன்யகுப்ஜா அல்லது கன்னோசியானது பாஞ்சால இராச்சியத்தில் அமைந்திருந்தது. உண்மையில் ஒரு முடியரசு குலமாக இருந்த பாஞ்சாலர்கள் கி. மு. 6ஆம் மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளின் போது ஒரு குடியரசு முறைக்கு மாறினர் என்று தோன்றுகிறது. கி. மு. 4ஆம் நூற்றாண்டில் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் பாஞ்சாலர்களை இராஜசப்தோபசிவின் அரசியலமைப்பைப் பின்பற்றியதாகக் குறிப்பிடுகிறது.[சான்று தேவை]

சூரசேனம்

தொகு
 
சூரசேன மகாஜனபாதத்தின் (கி. மு. 5ஆம் நூற்றாண்டு) வெள்ளி நாணயம்.

சூரசேனர்களின் நாடானது மத்சயர்களுக்குக் கிழக்கிலும், யமுனை ஆற்றுக்கு மேற்கிலும் அமைந்திருந்தது. இது உத்தரப் பிரதேசத்தின் பிரிச் பகுதி, அரியானா, இராசத்தான், மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் பகுதி ஆகியவற்றுடன் தோராயமாக ஒத்துப்போகிறது. இதன் தலைநகரம் மதுரா ஆகும். சூரசேனத்தின் மன்னரான அவந்தி புத்திரர் புத்தரின் தலைமைச் சீடர்களில் முதன்மையானவர்களில் ஒருவராவர். மதுரா நாட்டில் இவரது உதவியுடன் பௌத்தம் வேரூன்றியது. மதுரா அல்லது சூரசேனத்தின் அந்தகர்களும், விருஷ்ணிகளும் பாணினியின் அஷ்டாத்தியாயீயில் குறிப்பிடப்படுகின்றனர். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் விருஷ்ணிகளைச் சங்கம் அல்லது குடியரசு என்று குறிப்பிடுகிறது. விருஷ்ணிகள், அந்தகர்கள் மற்றும் பிற யாதவர்களின் கூட்டணிக்குப் பழங்குடியினங்கள் ஒரு சங்கத்தை அமைத்தனர். சங்க-முக்யா என வசுதேவர் (கிருட்டிணன்) குறிப்பிடப்படுகிறார். சூரசேனத்தின் தலைநகராகிய மதுராவானது கிருஷ்ணர் வழிபாட்டின் மையமாக மெகஸ்தெனஸின் காலத்தின் போது அறியப்பட்டது. சூரசேன இராச்சியமானது சுதந்திரத்தை மகதத்தால் இணைத்துக் கொள்ளப்பட்ட போது இழந்தது.[சான்று தேவை]

வஜ்ஜி

தொகு
 
வைசாலியில் லிச்சாவிகளால் கட்டப்பட்ட ஆனந்த தூபி. வஜ்ஜி நாட்டின் தலைநகரமாக இது சேவையாற்றியது. இது உலகின் தொடக்க காலக் குடியரசுகளில் (கனசங்கம்) ஒன்றாகும்.

லிச்சாவிகள் உள்ளிட்ட அண்டை இனங்களின் ஒரு கூட்டமைப்பு வஜ்ஜி ஆகும். இந்தியாவின் மகாஜனபாதங்களில் ஒரு முதன்மையான நாடு இதுவாகும். இவர்கள் ஆண்ட பகுதியானது நேபாளத்தின் மிதிலை பகுதி மற்றும் வடக்கு பீகார் ஆகியவையாகும். இவர்களது தலைநகரம் வைசாலி ஆகும்.[60]

பௌத்த நூலான அங்குத்தர நிகயா மற்றும் சமண நூலான பகவதி சூத்திரம் ஆகிய இரண்டுமே தங்கள் சோலசா (16) மகாஜனபாதங்களின் பட்டியலில் வஜ்ஜியைக் குறிப்பிடுகின்றன.[61] இந்த மகாஜனபாதத்தின் பெயரானது இதை ஆண்ட இனங்களில் ஒன்றான வஜ்ஜிகளிடம் இருந்து பெறப்பட்டது. வஜ்ஜி அரசானது ஒரு குடியரசாக இருந்ததாகப் புலப்படுத்தப்படுகிறது. பாணினி, சாணக்கியர் மற்றும் சுவான்சாங் ஆகியோரால் இந்த இனமானது குறிப்பிடப்பட்டுள்ளது.[62]

வத்சம்

தொகு

வத்சர்கள் அல்லது வம்சர்கள் குருக்களின் ஒரு பிரிவினர் என்று அழைக்கப்படுகின்றனர். வத்சா அல்லது வம்ச நாடானது நவீன உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நிலப்பரப்புடன் ஒத்துப்போகிறது. இது ஒரு முடியரசு வகையிலான அரசாங்கத்தைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் கோசாம்பியில் (அலகாபாத்திலிருந்து 38 மைல் தொலைவில் உள்ள கிராமமான கோசத்துடன் இது அடையாளப்படுத்தப்படுகிறது) அமைந்திருந்தது.[63] கோசாம்பி ஒரு மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க நகரமாக இருந்தது. இங்கு ஏராளமான எண்ணிக்கையில் செல்வந்த வணிகர்கள் தங்கி இருந்தனர். பொருட்களை வணிகம் செய்வதற்கு ஒரு மிக முக்கியமான இடமாக இது திகழ்ந்தது. மேலும், வடமேற்கு மற்றும் தெற்கிலிருந்து இங்கு ஏராளமான பயணிகள் வந்தனர். கி. மு. 6ஆம் - 5ஆம் நூற்றாண்டில் வத்ச நாட்டின் ஆட்சியாளராக இருந்த உதயணர் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருந்தார். போர்க் குணம் கொண்டவராகவும், வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவராகவும் இருந்தார். தொடக்கத்தில் மன்னர் உதயணர் பௌத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், பிறகு புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவபராக மாறினார். அரசாங்கத்தின் சமயமாகப் பௌத்த சமயத்தை ஏற்றுக் கொண்டார். உதயணரின் தாயான இராணி மிரிகாவதி இந்திய வரலாற்றில் தொடக்கத்தில் அறியப்பட்ட பெண் ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராவார்.

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Lal, Deepak (2005). The Hindu Equilibrium: India C.1500 B.C. - 2000 A.D. (in ஆங்கிலம்). Oxford University Press. p. xxxviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-927579-3.
  2. Vikas Nain, "Second Urbanization in the Chronology of Indian History", International Journal of Academic Research and Development 3 (2) (March 2018), pp. 538–542 esp. 539.
  3. Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.
  4. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Delhi: Pearson Education. pp. 260–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1120-0.
  5. 16 Mahajanapadas - Sixteen Mahajanapadas, 16 Maha Janapadas India, Maha Janapada Ancient India. Iloveindia.com. Retrieved on 2013-07-12.
  6. J.M. Kenoyer (2006), "Cultures and Societies of the Indus Tradition. In Historical Roots", in the Making of ‘the Aryan’, R. Thapar (ed.), pp. 21–49. New Delhi: National Book Trust.
  7. India as Known to Panini: A Study of the Cultural Material in the Ashṭādhyāyī, 1963, p 427
  8. Vasudeva Sharana Agrawala - India; India in the Time of Patañjali, 1968, p 68, Dr B. N. Puri - India;
  9. Socio-economic and Political History of Eastern India, 1977, p 9, Y. K Mishra - Bihar (India)
  10. Tribes of Ancient India, 1977, p 18 Mamata Choudhury - Ethnology
  11. Tribal Coins of Ancient India, 2007, p xxiv Devendra Handa - Coins, Indic - 2007
  12. The Journal of the Numismatic Society of India, 1972, p 221 Numismatic Society of India - Numismatics
  13. A History of Pāli Literature, 2000 Edition, p 648 B. C. Law
  14. Some Ksatriya Tribes of Ancient India, 1924, pp 230-253, Dr B. C. Law.
  15. Anguttara Nikaya: Vol I, p 213, Vol IV, pp 252, 256, 260 etc.
  16. Digha Nikaya, Vol II, p 200.
  17. Chulla-Niddesa (P.T.S.), p 37.
  18. Lord Mahāvīra and his times, 1974, p 197, Dr Kailash Chand Jain; The History and Culture of the Indian People, 1968, p lxv, Dr Ramesh Chandra Majumdar, Bharatiya Vidya Bhavan, Bhāratīya Itihāsa Samiti; Problems of Ancient India, 2000, p 7, K. D. Sethna.
  19. Political History of Ancient India, 1996, p. 86; History & Culture of Indian People, Age of Imperial Unity, pp. 15–16
  20. Digha Nikaya
  21. Tiwari, Anshuman; Sengupta, Anindya (2018-08-10). Laxminama: Monks, Merchants, Money and Mantra (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. p. 307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789387146808.
  22. Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization (in ஆங்கிலம்). New Age International. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122411980.
  23. Dr Bhandarkaar
  24. 24.0 24.1 Raychaudhuri, Hem Chandra (1923), Political history of ancient India, from the accession of Parikshit to the extinction of the Gupta dynasty, p. 66
  25. Chakrabarti, Dilip Kumar (2000), "Mahajanapada States of Early Historic India", in Hansen, Mogens Herman (ed.), A Comparative Study of Thirty City-state Cultures: An Investigation, p. 387, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788778761774
  26. "Post-Mauryan (Punjab). Taxila (local coinage). Circa 220–185 BC. Æ (17x18mm, 7.71 g)". www.cngcoins.com. Classical Numismatic Group Inc. பார்க்கப்பட்ட நாள் 28 June 2017.
  27. Jataka No 406.
  28. Revue des etudes grecques 1973, p. 131, Ch-Em Ruelle, Association pour l'encouragement des etudes grecques en France.
  29. Early Indian Economic History, 1973, pp. 237, 324, Rajaram Narayan Saletore.
  30. Myths of the Dog-man, 199, p. 119, David Gordon White; Journal of the Oriental Institute, 1919, p 200; Journal of Indian Museums, 1973, p 2, Museums Association of India; The Pāradas: A Study in Their Coinage and History, 1972, p 52, Dr B. N. Mukherjee - Pāradas; Journal of the Department of Sanskrit, 1989, p 50, Rabindra Bharati University, Dept. of Sanskrit- Sanskrit literature; The Journal of Academy of Indian Numismatics & Sigillography, 1988, p 58, Academy of Indian Numismatics and Sigillography - Numismatics; Cf: Rivers of Life: Or Sources and Streams of the Faiths of Man in All Lands, 2002, p. 114, J. G. R. Forlong.
  31. Journal of the Oriental Institute, 1919, p 265, Oriental Institute (Vadodara, India) - Oriental studies; For Kuru-Kamboja connections, see Dr Chandra Chakraberty's views in: Literary history of ancient India in relation to its racial and linguistic affiliations, pp. 14,37, Vedas; The Racial History of India, 1944, p. 153, Chandra Chakraberty - Ethnology; Paradise of Gods, 1966, p 330, Qamarud Din Ahmed - Pakistan.
  32. Ancient India, History of India for 1000 years, four Volumes, Vol I, 1938, pp. 38, 98 by Dr T. L. Shah.
  33. James Fergusson observes: "In a wider sense, name Gandhara implied all the countries west of Indus as far as Candhahar" (The Tree and Serpent Worship, 2004, p. 47, James Fergusson).
  34. Encyclopedia Americana, 1994, p 277, Encyclopedias and Dictionaries.
  35. Ptolemy's Geography mentions Tambyzoi located in eastern Bactria (Ancient India as Described by Ptolemy: Being a Translation of the Chapters ... 1885, p. 268, John Watson McCrindle - Geography, Ancient; Barrington Atlas of the Greek and Roman World, History - 2000, p. 99, (editors) Richard J. A. Talbert) and Ambautai people located to south of Hindukush Mountains (Geography 6.18.3; See map in McCrindle, p. 8). Dr S. Levi has identified Tambyzoi with Kamboja (Indian Antiquary, 1923, p. 54; Pre Aryan and Pre Dravidian in India, 1993, p. 122, Dr Sylvain Lévi, Dr Jean Przyluski, Jules Bloch, Asian Educational Services) while land of Ambautai has also been identified by Dr மைக்கேல் விட்செல் (Harvard University) with Sanskrit Kamboja Electronic Journal of Vedic Studies, Vol. 5, 1999, issue 1 (September), Dr. M. Witzel; Indo-Aryan Controversy: Evidence and Inference in Indian History, 2005, p 257, Laurie L. Patton, Edwin Bryant; The Indo-Aryans of Ancient South Asia: Language, Material Culture and Ethnicity, 1995, p. 326, George Erdosy.
  36. MBH VII.4.5; II.27.23.
  37. See: Problems of Ancient India, 2000, pp. 5-6; cf: Geographical Data in the Early Puranas, p. 168.
  38. MBH II.27.27.
  39. Vedic Index I, p. 138, Macdonnel, Dr Keith.
  40. Ethnology of Ancient Bhārata, 1970, p. 107, Dr Ram Chandra Jain.
  41. The Journal of Asian Studies; 1956, p. 384, Association for Asian Studies, Far Eastern Association (U.S.).
  42. Balocistān: siyāsī kashmakash, muz̤mirāt va rujḥānāt; 1989, p. 2, Munīr Aḥmad Marrī.
  43. India as Known to Panini: A Study of the Cultural Material in the Ashṭādhyāyī; 1953, p. 49, Dr Vasudeva Sharana Agrawala.
  44. Afghanistan, p. 58, W. K. Fraser, M. C. Gillet.
  45. Afghanistan, its People, its Society, its Culture, Donal N. Wilber, 1962, pp. 80, 311 etc.
  46. Iran, 1956, p. 53, Herbert Harold Vreeland, Clifford R. Barnett.
  47. Geogrammatical Dictionary of Sanskrit (Vedic): 700 Complete Revisions of the Best Books..., 1953, p. 49, Dr Peggy Melcher, Dr A. A. McDonnel, Dr Surya Kanta, Dr Jacob Wackernagel, Dr V. S. Agarwala.
  48. Geographical and Economic Studies in the Mahābhārata: Upāyana Parva, 1945, p. 33, Dr Moti Chandra - India.
  49. A Grammatical Dictionary of Sanskrit (Vedic): 700 Complete Reviews of the ..., 1953, p. 49, Dr Vasudeva Sharana Agrawala, Surya Kanta, Jacob Wackernagel, Arthur Anthony Macdonell, Peggy Melcher - India.
  50. MBH 7/91/39.
  51. Arthashastra 11/1/4.
  52. 13th Major Rock Edict. Translation by E. Hultzsch (1857-1927). Published in India in 1925. Inscriptions of Asoka p.43. Public Domain.
  53. Ashtadhyayi IV.1.168–175.
  54. Hindu Polity: A Constitutional History of India in Hindu Times, Parts I and II., 1955, p. 52, Dr Kashi Prasad Jayaswal - Constitutional history; Prācīna Kamboja, jana aura janapada =: Ancient Kamboja, people and country, 1981, Dr Jiyālāla Kāmboja - Kamboja (Pakistan).
  55. Panda, Harihar (2007), Prof. H.C. Raychaudhuri, as a Historian, Northern Book Centre, p. 28, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7211-210-3
  56. Marshall p.59
  57. II. p 481
  58. Kalpa Sutra; Nirayavali Sutra
  59. Asiatic Mythology by J. Hackin p.83ff
  60. Olivelle, Patrick (13 July 2006). Between the Empires: Society in India 300 BCE to 400 CE. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199775071 – via Google Books.
  61. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp. 85–6
  62. Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p.107
  63. Rohan L. Jayetilleke (2007-12-05). "The Ghositarama of Kaushambi". Daily News இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604160714/http://www.dailynews.lk/2007/12/05/fea06.asp. 

மேலும் படிக்க

தொகு
  • R. C. Majumdar and A. D. Pusalker, eds. The History and Culture of the Indian People. Bharatiya Vidya Bhavan, Bombay 1951.
  • Sethna, K. D. (1989). Ancient India in a new light. New Delhi: Aditya Prakashan.
  • Sethna, K. D. (2000). Problems of ancient India. New Delhi: Aditya Prakashan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாஜனபாதங்கள்&oldid=4054685" இலிருந்து மீள்விக்கப்பட்டது