வத்சம் (பாளி:வம்ச, அர்த்தமாகதி: வச்ச) என்பது அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் குறிப்பிடும் பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாகும்.

வத்ச நாடு

வத்ச நாடு கங்கை மற்றும் யமுனை ஆற்றின் அருகில் அமைந்திருந்தது. அதன் தலைநகர் கௌசாம்பி ஆகும்.[1][2] (தற்போது அலகாபாத்துக்குத் தென்மேற்கே 35 மைல் தொலைவிலுள்ளது கோசாம்பி).

ஆரம்ப காலம்

தொகு

காசி மன்னனான வத்சன் என்பவனின் பெயரிலேயே இந்நாடும் அழைக்கப்பட்டதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.[3] இதன் தலைநகரான கௌசாம்பியை அமைத்தவன் சேதியின் இளவரசனான குசன் அல்லது குசாம்பன் என ராமாயணமும் மகாபாரதமும் குறிப்பிடுகின்றன. அத்தினாபுரம் கங்கையில் அடித்துச்செல்லப்பட்ட பின்பு பரத மன்னனான நிகேசு என்பவன் அத்தினாபுரத்தை விட்டு நீங்கி கௌசாம்பியில் குடியேறினான் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவன் ஜனமேஜயனின் முப்பாட்டப் பிள்ளையாவான். இது பற்றிய குறிப்புகள் ஸ்வப்னவசவதத்த மற்றும் பிராச்சின-யுகந்தராயன போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இவையிரண்டும் உதயண மன்னனை பரத குலத் தோன்றலாகக் குறிப்பிடுகின்றன. புராணங்களில் நிகேசுவுக்குப்பின் ஆட்சிசெய்த மன்னர்கள் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. இதன் இறுதி மன்னன் சேமக ஆவான்.[4]: p.117-8

2-ஆம் சதானிகன், பரந்தபன்

தொகு

பரத குலத்தின் முதல் ஆட்சியாளன் 2ம் சதானிகன், பரந்தபன் ஆவான். எனினும் புராணங்களில் இவனது தந்தையின் பெயர் வசுதானன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2ம் சதானிகன் விதேகத்தின் இளவரசியை மணந்து கொண்டான். இவள் உதயணனின் தாய் ஆவாள். 2ம் சதானிகன் லிச்சவி வம்ச தலைவன் சேதக எனபவனின் மகளான மிருகாவதியையும் மணந்துகொண்டான்.[5] அங்க தேசத்தை தாதிவாகனன் ஆண்ட காலத்தில் அதன் தலை நகரான சம்பாவை 2ம் சதானிகன் தாக்கினான்.[4]: p.119

உதயணன்

தொகு

2-ஆம் சதானிகனுக்கு விதேக இளவரசி மூலம் பிறந்த உதயணன், அவனுக்குப்பின் ஆட்சிபீடம் ஏறினான். இவனே ஸ்வப்னவசவதத்த, பிராச்சின-யௌகந்தாரயன ஆகியவற்றின் நாயகன் ஆவான். இவன் கௌதம புத்தர் மற்றும் அவந்தியின் மன்னன் பிரத்தியோடாவின் சமகாலத்தவனாவான்.[4]: p.119 கதாசரித சாகரம் எனும் நூல் இவனது படையெடுப்புக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

பிரிய தர்சிகா எனும் நூல் கலிங்க தேசத்தை இவன் வெற்றிகொண்டு, அங்க தேச மன்னனாக திருதவர்மனை அரியணையில் ஏற்றியமை பற்றிக் குறிப்பிடுகிறது. தம்மபதத்தில் அவந்தி மன்னனான ப்ரத்யோதனின் மகளான வசவதத்த அல்லது வசுலதத்தவை இவன் மணம் புரிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில் அவன், பிராமணரொருவரின் மகளான மகந்தியா மற்றும் கோசக எனும் நிதியமைச்சரி மகளான சமாவதி ஆகியோரையும் மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மிலிந்த பன்ஹோ எனும் நூல் ஒரு விவசாயியின் மகளான கோபால மாதா என்பவளையும் இவன் மணந்ததாகக் கூறுகிறது. ஸ்வப்னவசவதத்த எனும் நூல் மகதத்தின் மன்னனான தர்சகவின் சகோதரியான பத்மாவதி எனபவளையும் இவன் மணந்ததாகக் கூறுகிறது. பிரியதர்சிகா எனும் நூலில் அங்கதேச மன்னனான திருதவர்மனின் மகளான ஆரண்யகாவுடன் உதயணனின் திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறது. ரத்னாவலி எனும் நூல் அவனுக்கும், அவனது மகாராணி வசவதத்தாவின் பணிப்பெண்ணான சாகரிகாவுக்கும் இடையிலான காதலைப் பற்றிக் கூறுகிறது. அவனது மகாராணி மூலமான அவனது மகனின் பெயர் போதி.[4]: pp.179-80

நான்கு உண்மைகள், தம்மம், எட்டு மடிப்புப் பாதை போன்ற தத்துவங்களைப் பரப்புவதில் உதயணனின் முயற்சியைக் கண்டு புத்தர் கௌசாம்பி நகருக்கு அடிக்கடி விஜயம் செய்தார். உதயணன் புத்தரின் ஒரு சீடனாவான். ஏகோத்தர ஆகம எனும் பௌத்த நூலின் சீன மொழிபெயர்ப்பில், புத்தரின் முதல் திருவுருவம், உதயணனின் ஆணையின் கீழ் சந்தனக்கட்டையில் செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

பின்னைய முன்னேற்றங்கள்

தொகு

புராணங்களின் படி உதயணனின் பின் வஹினார, தந்தபானி, நிரமித்ர, சேமக ஆகியோர் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தில் வத்ச நாடு அவந்தியுடன் இணைக்கப்பட்டது. பிரத்யோதனின் பூட்டப்பிள்ளையான மணிபிரபா என்பவன் அவந்தியின் இளவரசனாக கௌசாம்பியில் ஆட்சி புரிந்தான்.[4]: pp.180, 180n, facing 565

வத்ச வாக்கு

தொகு

வத்ச மன்னனின் வழிவந்தோர் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிறந்து விளங்கினர். தமது வாக்குகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த, 2ம் வத்ச ஆதர்ஷ் என்பவன் பாளி மொழியிலமைந்த வத்ச வாக்கு எனும் கருத்தை ஆரம்பித்தான். இவ்வாக்கு, தமது குடும்பப் பெயரின் மீது சத்தியம் செய்வதன் மூலம் ஒரு சத்தியப் பிரமாணமாக வழங்கப்படும். இவ்வாக்கு அரசியல், பொருள், பாதுகாப்பு வழங்கல் என எது தொடர்பாகவும் இருக்கலாம். வத்ச மகாஜனபதத்தின் வீழ்ச்சியுடன் இப் பண்பாடும் மெதுவாக வீழ்ச்சியடைந்தது. இவ்வகையில் இதன் முதலாவது அறியப்பட்ட வாக்கு மூன்றாம் ஆதித்திய என்ற ஒரு நிலப்பிரபுவால் தன்னைச் சேர்ந்தோருக்காக வழங்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு:

" பண்டைய ஆரியர் வழி வந்தவனும், வத்ச என அறியப்படுபவனுமாகிய, மூன்றாம் ஆதித்திய ஆகிய நான் என்னைச் சேர்ந்தோரை, இறக்கும் வரை அல்லது எனது குடும்பம் மற்றும் வம்சத்தினரைப் பாதிக்கும் வரை பாதுகாப்பேன் என உறுதியளிக்கிறேன்."

மகாபாரதக் குறிப்புகள்

தொகு

பாஞ்சாலியின் சுயம்வரத்துக்கு வருகைதந்த மன்னர்கள்

தொகு

மகாபாரதம் முதலாம் நூல், 188ம் அத்தியாயத்தில் திருஷ்டத்யும்னன் தனது சகோதரியான திரௌபதிக்கு ஒவ்வொரு மன்னர்களைப்பற்றியும் விவரித்துக் கூறுகிறான்: "........மகாரதர்களான சுருதாயு, உலுகா, கைதவன், சித்திராங்கதன் மற்றும் சுவங்கதன், உயர் அறிவுடையோராகிய வத்சராஜா(வத்ச நாட்டு மன்னன்), கோசல மன்னன், சிசுபாலன் மற்றும் பலம் பொருந்திய ஜராசந்தன் இவர்களோடு உலகெங்குமுள்ள மாபெரும் சத்திரிய மன்னர்களும், மங்கலமானவளே! உனக்காக வந்துள்ளனர்."

இராசசூய வேள்விக்கான பீமனின் ராணுவ நடவடிக்கைகள்

தொகு

2ம் நூல், 29 அத்தியாயம், குந்தியின் மகனான, பீமன், தன் வீர பராக்கிரமத்தால் வத்ச பூமி என்ற நாட்டையும் (வத்ச நாடு), பர்கா, நிஷாதம் மற்றும் மணிமத் ஆகிய நாடுகளின் மன்னனையும் மேலும் ஏணைய பல மன்னர்களையும் வெற்றிகொண்டான் எனக் குறிப்பிடுகிறது.

காசி இளவரசி அம்பையின் பயணங்கள்

தொகு

5ம் நூல், 189ம் அத்தியாயம் குறிப்பிடுவதன் படி "அவள் சித்த சாரணர்களின் பூமியும், புண்ணிய செயல்களில் ஈடுபடுகின்ற புண்ணியாத்மாக்களான துறவிகளின் வாசஸ்தலமானதுமான வத்ச பூமியை நோக்கிச் சென்றாள். அங்குள்ள புண்ணிய நதிகளில் நீராடி தன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த விடயங்களை மறக்க முயற்சித்தாள்."

6ம் நூல், 50ம் அத்தியாயம் குறிப்பிடுவதன்படி, "பாண்டவ சேனையின் சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் தனது சேனையை கிரௌஞ்சரூம (பறவை வடிவம்) வடிவில் ஒழுங்கமைத்தான்."

படாசரர்கள், ஹூணர்கள், பௌரவகர்கள் மற்றும் நிஷாதர்கள் அதன் ஒரு இறக்கையாயினர். மேலும் பிசாசர்கள், குண்டவிஷர்கள், மண்டகர்கள், லடாகர்கள், டங்கனர்கள், உத்தரர்கள், சரவர்கள், தும்புமர்கள், வத்சர்கள் மற்றும் நகுலர்கள் ஆகியோர் அதன் மற்றைய இறக்கையாயினர்.

கர்ணனின் ராணுவ நடவடிக்கைகள்

தொகு

8ம் நூல், 8ம் அத்தியாயத்தில் திருதராஷ்டிரர் கர்ணனைப் பற்றிக் குறிப்பிடும்போது "கர்ணன் தோற்கடிக்கப்படவே முடியாத எதிரிகளான காந்தாரர்கள், மத்ரகர்கள், மத்சயர்கள், திரிகர்த்தர்கள், டங்கனர்கள், காசர்கள், பாஞ்சாலர்கள், விதேகர்கள், குலிந்தர்கள், காசி-கோசலர்கள், சுமர்கள், அங்க தேசத்தினர், நிஷாதர்கள், புந்திரர்கள், கிசாகர்கள், வத்சர்கள், கலிங்கர்கள், தரளர்கள், அஸ்மகர்கள் மற்றும் ரிஷிகர்கள் ஆகியோரை வெற்றி கொண்டான்."

பார்கவ பிராமணர்களுடனான போட்டி

தொகு

12ம் நூல், 49ம் அத்தியாயத்தின் படி "பார்கவ ராமன் சத்திரிய மன்னர்களை அழித்தான். சத்திரியத் தாய்மார் தமது பிள்ளைகளை இரகசியமாக வளர்த்து வந்தனர். அவர்களில் ஒருவன் வத்ச மன்னன்.

"அவர்களுள் பிரதர்தனவின் மகனான வீர பராக்கிரமம் பொருந்திய வத்சன் எனப்பட்டவன் முன்னிலையிலிருந்தான்."

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  • Mahabharata of Krishna Dwaipayana Vyasa, translated to English by Kisari Mohan Ganguli
  • Swapna Vasavadatta of Kalidasa
  1. Geographical Review of India. Original from the University of Michigan: Geographical Society of India. 1951. p. 27.
  2. Hermann Kulke, Dietmar Rothermund (2004). A History of India. Routledge. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32920-5.
  3. Pargiter, F.E. (1972) Ancient Indian Historical Tradition, Motilal Banarasidass, Delhi, pp.269-70
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Raychaudhuri, Hemchandra (1972). Political History of Ancient India. Calcutta, India: University of Calcutta.
  5. Mahajan V.D. (1960, reprint 2007). Ancient India, S.Chand & Company, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0887-6, pp.171-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்ச_நாடு&oldid=3799286" இலிருந்து மீள்விக்கப்பட்டது