ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, மூதேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியான லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.[2]

ஜேஷ்டா தேவி
ஜேஷ்டா தேவி, கயிலை ஆலையம், காஞ்சிபுரம்.[1]
அதிபதிதுரதிர்ஷ்டம்
தேவநாகரிज्येष्ठा
சமசுகிருதம்Jyeṣṭhā
வகைதேவி

பெயர்கள்

தொகு

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சமசுகிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர்.

தொன்மவியல்

தொகு

இந்துத் தொன்மவியல்படி,பாற்கடலைக் கடைந்த போது ஜேஷ்டா தேவி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவரது தங்கை லட்சுமி அமிர்தம் தோன்றும் முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது.

தவ்வை வழிபாடு

தொகு
 
பரிவார தேவதைகளுடன் தவ்வை சிற்பம்

தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்ததில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.

தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர்,இவர்களை ஏகாளி (சிவன்காளி) அம்சத்தினர் என்றும் அழைக்கின்றனர்.

கோயில்கள்

தொகு

தவ்வைக்கு வாரணாசியிலும், அசாமின் கவுகாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில்கள் அமைந்துள்ளன. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீலாதேவிக்கு கோயில் அமைந்துள்ளது.

தமிழகம்

தொகு

தவ்வையை மூலவராகக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை. தவ்வை தனியாகவோ, மகன் மற்றும் மகளுடன் ஒரே பீடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. எண்ணற்ற கோயில்களில் தவ்வை சிலையானது உள்ளது. சில இடங்களில் தவ்வை கோயிலில் அல்லாமல் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படுகிறார்.

  • திருவாரூர் தியாகராஜர் கோவிலிலுள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவுவாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது.
  • நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேசுவரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.[3]
  • திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை.
  • திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு.
  • பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது.
  • திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை "உஜ்ஜீவநாதர்' (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.
  • ஓரையூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம்
  • குளித்தலை கடம்பவனநாதர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
  • சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் - திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது.
  • மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் - சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது.
  • திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
  • சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் - கோயிலுக்கு வெளியே பிள்ளையார், நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.
  • பெரணமல்லூர் திருக்கரேசுவரர் கோயில
  • திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளமைத் தெய்வமான தவ்வை நடுகல்லை, தூய நெஞ்சக் கல்லூரி பேரராசிரியர்கள், செப்டம்பர் 2018-இல் கண்டெடுத்தனர்.[4]
  • விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பரளச்சி கிராமத்தில் ஆகஸ்டு 2020-இல், பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டின் தவ்வை சிற்பத்தை கண்டெடுத்தனர்.[5]
  • உத்திரமேரூர், அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி கற்சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் மே 2021-இல் கண்டெடுத்தனர்.[6]
  • பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் உள்ள ஜேஷ்டாதேவி கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

தமிழ் இலக்கியங்களில்

தொகு

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி ( 'கரிய சேட்டை ஆகிய மூதேவி'), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு (14) பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர்.

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன. குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

அழுக்கு, நாற்றம், துன்பம், புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. The description and photo of this image is given in Julia Leslie pp. 115, 117
  2. தமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி!
  3. மா. சந்திரமூர்த்தி தொகுத்த “தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்” எனும் நூலில் தரங்கம்பாடி காப்பாட்சியர் கோ. முத்துசாமி என்பவர் எழுதிய வழுவூர் - வீரட்டேஸ்வரர் கோயில் கட்டுரை. பக்கம்-166
  4. கிபி10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை நடுகல் கண்டெடுப்பு. தினமணி. 28 செப்டம்பர் 2018. {{cite book}}: Check date values in: |date= (help)
  5. பரளச்சியில் தவ்வை சிற்பம் கண்டெடுப்பு. தினமலர். 22 செப்டம்பர் 2020. {{cite book}}: Check date values in: |date= (help)
  6. உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு. தினமணி. 18 மே 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவ்வை&oldid=3898888" இலிருந்து மீள்விக்கப்பட்டது