திருவாரூர் தியாகராஜர் கோயில்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருவாரூர் தியாகராஜர் கோயில் (Tiruvarur Thyagaraja Temple) தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் சைவ மரபில் பெரிய கோயில் எனவும் திருமூலட்டானம் எனவும் பூங்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. சைவத்திற்கு கோவில் தில்லை என்றால் இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் ஆகும். சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற இத்திருத்தலம் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களின் தலைமை இடமாகவும் திகழ்கிறது. இது திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இக்கோவிலில் தான் பசுவிற்கு நீதி வழங்கினார் மனு நீதி சோழன்.[1] மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[2]

தேவாரம் பாடல் பெற்ற
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில் is located in தமிழ் நாடு
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
தியாகராஜர் கோயில், திருவாரூர், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°46′34″N 79°38′01″E / 10.7761°N 79.6335°E / 10.7761; 79.6335
பெயர்
புராண பெயர்(கள்):க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம்
பெயர்:திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாரூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், மூலட்டானமுடையார், பூங்கோவில் புண்ணியனார்
உற்சவர்:தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி
தாயார்:அல்லியம்பூங்கோதை (நீலோத்பலாம்பாள்), கமலாம்பிகை
உற்சவர் தாயார்:அல்லியங்கோதை
தல விருட்சம்:பாதிரி
தீர்த்தம்:கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:திருவாதிரை, பங்குனி ஆழித்தேர் திருவிழா, மகா சிவராத்திரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
தொன்மை:4000-5000 ஆண்டுகள்
நிறுவிய நாள்:தெரியவில்லை
கட்டப்பட்ட நாள்:தெரியவில்லை
அமைத்தவர்:சோழர்கள்
திருவாரூர் தியாகராஜர் கோவில்

தல புராணம்

தொகு

திருமால் மன்னுமாமலராளோடு இலக்குமி பிள்ளைப்பேறு வேண்டி சிவபெருமானைப் பூசிக்க சிவபெருமான் தியாகேசர் திருமேனியை அளித்தார். திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பின் இருதய கமலத்தில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த ஏழு விடங்கத் தலங்கள் எனப்படும்.

தல சிறப்புகள்

தொகு

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலில் காமிகாகம முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாகமத்து வழிநின்று துர்வாசர் மரபில் வந்த நயினார்கள் (நயனார்கள்/உரிமையில் தொழுவார்) வன்மீகர் மற்றும் தியாகேசருக்கு தொண்டு புரிந்து வருகின்றனர்.ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் கோவில் தேர் ஆகும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். ஆதலால் தியாகேசருக்கு யோக வேஷ்டி தரித்து நயனார் பூசை செய்வர். திருவந்திக் காப்பழகர் என்று சிறப்பு பெயர் இதனால் ஏற்பட்டது. கமலை என்னும் பராசத்தி தவம் செய்த கமலாலயப் பதி ஆகும். எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. மேலும் இதற்கு சான்றாக அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனப் குறிப்பிட்டுள்ளார். சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம். பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும், தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயகர் சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும். இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது. சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். ஆரூர் அரநெறி திருக்கோயில் நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. (திருவாரூர் திருவீதிகள் அடிமுடி தேடிய திருவீதிகள் என்ற பெயரைக் கொண்டவை) இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.

தர்சனாது அப்ரஸதசி ஸ்மரணாது அருணாசலம் காசியாந்த் மரணாம் முக்திஹி ஜனனாத் கமலாலயே

தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேரை அப்பர் சுவாமிகள் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது. ஆரூர் தலம் இரண்டு பாடல் பெற்ற தலங்களையும் ஒரு வைப்பு தலத்தையும் கோயிலுக்குள்ளும், ஆரூர் பரவையுண் மண்டளி என்ற மற்றொரு தலத்தை கோவிலுக்கு அருகிலும் கொண்ட மேன்மை மிக்கது. இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. காஞ்சிபுரத்தில் இடக்கண் பெற்ற சுந்தரர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி தானிழந்த வலக்கண்ணைப் இப்பதியில் பெற்றார். சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி. தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம். சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் ஞான சிவாச்சாரியாருக்கு மகளாக அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது. திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம். சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

பிற சன்னதிகள்

தொகு
 
பரவைக்கு பரகதி அளித்த ஆகாச விநாயகர் - மூன்றாம் தெற்கு திருச்சுற்று

மூன்றாம் தெற்கு திருச்சுற்றில் உள்ள பரவை நாச்சியாருக்கு முக்தி அளித்த ஆகாச விநாயகர் சிறப்புடையவர். மூலாதார கணபதி, ஒட்டுத் தியாககேசர், கைலாச தியாகர், வீணையில்லாத சரஸ்வதி, பஞ்ச முக கணபதி (ஹேரம்ப கணபதி), யம சண்டீசர், மேலும் பல அரிய சன்னதிகளை உடையது. இத்திருக்கோயில் வளாக முதற்சுற்றில் மூலாதார கணபதிக்கு எதிரில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது. நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். எம சண்டிகேஸ்வர் அமைந்த திருத்தலம். வன்மீகபுரம், அசலேசம், அனந்தீஸ்வரம், ஆடகேஸ்வரம், சித்தீஸ்வரம் என பஞ்ச லிங்க பிரதிஸ்டை செய்யப்பட்ட ஸ்தலம்.

வன்மீகநாதர் பெருமை

தொகு

இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.

தியாகராஐர் பெருமை

தொகு
  • உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். இங்கு எழுந்தருளியிருக்கும் வீதிவிடங்கர் சோமாஸ்கந்த தத்துவத்திற்கு அப்பார் பட்டவர் என்பதை ஐஐஞ்சின் (அம்மையப்பயர் முதலான 25 மாகேஸ்வர மூர்த்திற்கு) அப்புரத்தான் என்று அப்பர் பாடுகிறார். ஹம்ச மந்திர தத்துவத்தோடு இணைந்தவர் இப்பெருமான். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டியம்மை எனப் பெயர்.[3] தியாகேசரின் முந்நூறுக்கும் மேற்பட்ட லீலைகளை 'தியாகராஜ லீலை' என்ற நூல் விவரிக்கின்றது. இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். ஆதலால் தியாகேசருக்கு நயினார்கள் யோக வேஷ்டி தரித்து பூசை செய்வர். இவருக்கு திருவந்திக் காப்பழகர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. தியாகேசரின் திருமேனி பகல் படா திருமேனி ஆகும். ஆதலால் தியாகராசர் உத்ஸவங்களுக்கு இரவு நேரங்களில் மட்டுமே புறப்பாடு கண்டருளுவார். தியாகேசர் யதா ஸ்தானத்தில் தத்புருஷ முகமாகவும் (கிழக்கு நோக்கி) தேருக்கு வரும் முன் இந்திர மண்டபத்தில் சத்யோதாஜ முகமாக (மேற்கு நோக்கி) நடனமாடியும் உத்திர பாத தரிசனத்தின் போது அகோர முகமாவும் (தெற்கு நோக்கி) ஞானமளிக்கும் பெருமானாக காட்சியளிப்பார்.
  • தியாகராஜரின் தேவரும் காணா மேலான வலப்பாதம் (இடப்பாதம் என்றும் மூடப்பட்டிருக்கும்) ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா சமயங்களில் தியாகேசர் மற்றும் கொண்டி அம்மை தத்தம் வலது மற்றும் இடது பாதத்தை முறையே பக்தர்களுக்கு காட்டி அருளுவர்.
  • தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதாரத்" தலம்.
  • தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

தியாகேசருக்கு உரிய அங்கப்பொருள்கள்

தொகு
ஆடுதண்டு மாணிக்கத்தண்டு முரசு பஞ்சமுக வாத்தியம்
கொடி தியாகக்கொடி மத்தளம் சுத்தமத்தளம்
ஆசனம் இரத்தின சிம்மாசனம் நாதஸ்வரம் பாரி
மாலை செங்கழுநீர்மாலை குதிரை வேதம்
வாள் வீரகட்கம் ஞானகட்கம் நாடு சோழநாடு
நடனம் அஜபா நடனம் ஊர் திருவாரூர்
யானை அயிராவணம் ஆறு காவிரி
மலை அர்தன சிருங்கம் பண் பதினெண்வகைப்பண்
தோழர் நம்பி ஆரூரர்

தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.

 அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர்

உரிமையிற் றொழுவார் உத்திர பல்கணத்தார்

விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசுப தர்கபாலிகள்

தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.

- 4 - 20 - 3(அப்பர் தேவாரம்)

சப்த விடங்க ஸ்தலங்கள்

தொகு

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு

காரார் மறைக்காடு காராயில் - பேரான

ஒத்ததிரு வாய்மூர் உகந்ததிருக் கோளிலி

சத்தவி டங்கத் தலம்

சப்த விடங்க ஸ்தலங்கள்
தலம் விடங்கர் தியாகராஜர் நடனம் புகைப்படம்
திருவாரூர் வீதிவிடங்கர் அஜபா நடனம்
நாகை சுந்தர விடங்கர் பாரவாரதரங்க நடனம்
நள்ளாறு நகர விடங்கர் உன்மத்த நடனம்
 
நகர விடங்கர் என்னும் சண்பகத் தியாகர்
திருக்காராயில் ஆதி விடங்கர் குக்குட நடனம்
 
ஆதி விடங்க தியாகேசர்
திருவாய்மூர் நீல விடங்கர் கமல நடனம்
திருக்கோளிலி

(திருக்குவளை)

அவனி விடங்கர் பிருங்க நடனம்
 
அவனி விடங்கர்
திருமறைக்காடு

(வேதாரண்யம்)

புவனி விடங்கர் ஹம்ச பாத நடனம்

ஆரூரைப் போற்றும் இலக்கியங்கள்

தொகு
தமிழ் இலக்கியங்கள் வடமொழி இலக்கியங்கள் தெலுங்கு மொழி இலக்கியங்கள் மாராட்டிய மொழி நூல்கள்
தேவாரம்

திருவாசகம்

திருவாரூர் மும்மணிக்கோவை

திருநாட்டுச் சிறப்பு.(பெரிய புராணம்)

திருவிசைப்பா திருப்பல்லாண்டு

கந்த புராணம்

தியாகேசர் தாலாட்டு

திருவாரூர் புராணம்

தியாகராஜ லீலை (மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் தமிழில் யாக்கப்பட்டது)

ஸ்காந்தம்

அஜபா ரகஸ்யம்

கமலாலய மகாத்மியம்

கமலாலய ஸ்துதி

தியாகராஜ முசுகுந்த சஹஸ்ர நாமாவளி

நாகர கண்டம்

முத்துசாமி தீட்சதர் கீர்த்தனம்

சங்கர பல்லக்கி சேவ பிரபந்தம்

தியாகேச பதமுலு

தியாகராஜ விலாச

தியாகராஜ தியான

கோயில் அமைப்பு

தொகு

33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

மண்டபங்கள்

தொகு
இந்திர மண்டபம் கீழராஜ கோபுரத்திற்கு எதிரே உள்ள திருமண்டபம். ஆழித்தேருக்கு தியாகேச வள்ளல் எழுந்தருளுங்கால் சத்யோஜாத முகமாக ஆடும் பேரு பெற்ற மண்டபம்.
தட்டஞ்சுற்றி மண்டபம் தியாகேச வள்ளல் கிருஷ்ணகாந்த சாயரட்சை கண்டருளும் இடம். வல்லப கணபதி பிரதிஸ்டை செய்யப் பெற்றுள்ளார்.
உத்திர பாத மண்டபம் பங்குனி உத்திர நன்னாளில் வீதிவிடங்கர் தனது வலப்பாதத்தை காட்டி அருளும் திருமண்டபம். சபாபதி மண்டபம் என்று தற்போது அறியப்படுகிறது.
தேவாசிரியன் மண்டபம் ஆரூர் பெருமை பகரும் மண்டபம். ஸ்வஸாமி மித்ரர் (சுந்தரர்) திருத்தொண்டத் தொகை பாடியருளிய மண்டபம்.
இராஐநாரயண மண்டபம் திருவாதிரை மகாபிஷேகம் கண்டருளி தியாகேசர் வலப் பாத தரிசணம் அருளும் இடம்.
சுந்தரர் மண்டபம் தியாகேச வள்ளலின் திருமந்திரப் பிரசாதம் (திருநீறு) தயாரிக்கும் மேலான இடம்.
கமலாம்பிகை மண்டபம் கமலாம்பிகை சன்னதிக்கு எதிரே உள்ள முகமண்டபம் ஆகும். உச்சிஸ்ட கணபதி பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளார்.
சந்திரசேகரர் மண்டபம் தியாகேச புராணத்தை எடுத்துரைக்கும் சிற்பத்தொகுதியைக் கொண்ட மண்டபம். 15 பிரிவுகளாக இச்சிற்பத் தொகுதியினைப் பகுக்கலாம்.

மன்னர்களின் அரும்பணி

தொகு
 
மூன்றாம் குலாத்துங்கன்- கீழ ராஜ கோபுரத்தில் காணப்படும் கற்படிமம்
 
ஈஸ்வர சிவர்- மூன்றாம் குலோத்தங்கனின் ஞான குரு
 
மேற்கு ராஜகோபுரம்

இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்துள்ளது. சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் கீழக்கு ராஜ கோபுரத்தை கட்டுவித்தார். அச்சுதப்ப நாயக்கர் வடக்கு ராஜ கோபுரத்தை கட்டுவித்தார்.

 
மூன்றாம் குலோத்துங்கன் கட்டுவித்த 118 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரம்

வழிபாடு

தொகு
  • காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி , பால் நிவேதனம்
  • காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
  • காலை 8 மணி - முதற் கால பூஜை
  • மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
  • பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை
  • பகல் 12.30 மணி - அன்னதானம்
  • மாலை 4 மணி -நடை திறப்பு
  • மாலை 6 மணி - சாயரட்சை பூஜை = (மிகவும் சிறப்புடையது). நித்திய பிரதோஷம் என்று அறியப்படுகிறது.
  • இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
  • இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை

அன்னை கமலாம்மாள் — நீலோத்பலாம்பாள் சந்நிதி

தொகு

கமலாம்பிகை (யோக சக்தி)

தொகு

திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது. சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அட்சர பீடம் உள்ளது.

அன்னையின் அருட்கோலத்தை 'தியாகேச குறவஞ்சி' கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது.

விளங்கு தென்னாரூர் வியன்பதி தழைக்க

உளங்கனிவாக யோகாசனத்தில்

அண்டருந் துதிக்க அரசிருந்தருள் பூ

மண்டலம் துதிக்க வளர் பராசக்தி.

முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.

நீலோத்பலாம்பாள் (போக சக்தி)

தொகு
 
தியாகவள்ளல் உமையம்மையுடன் வேடுவ வடிவம் தாங்கி சோமாசியார் யாகத்திற்கு எழுந்தருளல் - மராத்திய கால ஓவியம் - நீலோத்பலாம்பிகை சன்னதி

இத்திருக்கோவில், இரண்டாம் பிராகரத்தின் வடபுறம் கொடிமரத்தின் எதிரே அமைந்துள்ளது. தென்மொழியில் அல்லியங்கோதை என்னும் திருப்பெயரோடு விளங்குகிறாள். இரண்டு திருக்கைகளோடு, இடக்கை சேடிப்பெண் சமந்திருக்கும் முருகனின் சிரசை தீண்டிய வண்ணம் உள்ளது. இதே போன்று உற்சவ மூர்த்தியும் இருப்பது சிறப்பு. இச்சந்நிதியின் முகமண்டபத்தில் தியாகேசர் சோமாசி யாகத்திற்கு செல்லுதல், மாணிக்க நாச்சியருக்கு அருள் புரிதல், மராத்திய மன்னர் வீதிவிடங்கனை வணங்குதல் போன்ற பல மராத்திய ஓவியங்கள் உள்ளன.

திருவாரூர் ஆழித்தேர்

தொகு

"ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே" என்பது அப்பர் தம் வாக்கு. ஆசியாவிலயே மிகப் பெரிய தேர் திருவாரூர் ஆழித்தேர் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.

யஜூர் வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்தில் தியாகேசர்

ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய: ரதபதிப்யச்ச வோநமோ நமோ:

தேராகவும் தேர்த் தலைவனாகவும் உள்ள சிவபெருமான் எனக் குறிப்பிடப்படுகிறார் என்பது திருவாரூரின் தொன்மையை உணர்த்தும்.

1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைப்பெற்ற தேர்த்திருவிழா, 1927 ஆம் ஆண்டு ஆழித்தேரோட்டத்தின்போது தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. கமல வசந்த வீதிவிடங்கப் பெருமானை முத்துக் கொத்தனார் என்பவர் காப்பாற்றினார்.

நின்றுபோன தேர்த் திருவிழா, பிறகு 1930 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டு மீண்டும் தேரோட்டம் 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிறகு 1970 ஆம் ஆண்டு மு. கருணாநிதி மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியால் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது.[4] 

 
வீதிவிடங்கனின். பிரம்மாண்டமான ஆழித்தேர்

ஆழித்தேரின் உயரம் 96 அடி ஆகும். இது வீதிவிடங்கன் 96 தத்துவங்களைக் கடந்தவன் என்று குறிக்கிறது. தேரின் மேல் பகுதி கமலவடிவமாக காட்சி அளிக்கும்.

அமைவிடம்

தொகு

மயிலாடுதுறை - திருவாரூர், தஞ்சாவூர் - நாகப்பட்டிணம், காரைக்குடி - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி,காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.

திருத்தலப் பாடல்கள்

தொகு
  • இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம் மொத்தம் 21 சில

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் மொத்தம்-5

சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே.
துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.
உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே.

சுந்தரர் பாடிய பதிகம் மொத்தம்-8

இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

திருவாசகத்தில் திருப்புலம்பல் என்ற பகுதி திருவாரூரில் பாடப்பெற்றதாகும். அது அன்றி ஆறு இடங்களில் திருவாரூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளிலும் பாடப்பெற்ற ஒரே தலம்.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.[5]

அடிக்குறிப்பு

தொகு
  1. வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  2. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  3. சிவம் சுகி; ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம், வானதி பதிப்பகம் சென்னை, பக். 143
  4. "ஆரூர் அழகுத் தேர்". ஆனந்த விகடன்.
  5. திருவாரூரில் தியாகராஜர் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, நவம்பர் 8, 2015

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thyagaraja Temple, Tiruvarur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.