தசாவதாரம் (இந்து சமயம்)

அநீதிகளை அழித்து, நீதிகளை நிலைநாட்ட, யுகங்களின் முடிவில், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள்.. மொத்தம் 10.

தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். மோகினி, வெங்கடாசலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.

இந்து கடவுள் விஷ்ணு (மத்தியில்): அவரது பத்து முக்கிய அவதாரங்களால் சூழப்பட்டுள்ளது (கிருஷ்ண-புத்த பதிப்பு). மேலே இடதுபுறத்தில் இருந்து எதிரெதிர் திசையில்: மச்ச அவதாரம்; கூர்ம அவதாரம்; வராக அவதாரம்; நரசிம்மர்; வாமனர்; பரசுராமர்; இராமர்; கிருட்டிணன்; புத்தர், கல்கி (அவதாரம்)

தசாவதாரங்கள்

உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன:

  1. மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில், விஷ்ணு நான்கு கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.
  2. கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின் படி, விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
  3. வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்..
  4. நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும், மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும், நகங்களோடும், மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது.[1] பல வைஷ்ணவர்கள் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.[2]
  5. வாமன அவதாரம் - காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து, தானம் கேட்டு, அவரை வதை செய்வது.
  6. பரசுராம அவதாரம் - ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க, சபதமேற்ற பரசுராமர்.
  7. இராம அவதாரம்
  8. பலராமர் அவதாரம்
  9. கிருஷ்ண அவதாரம்
  10. கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி, விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

தசாவதாரத்தில் புத்தர்

வட இந்தியர் சிலர் புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.

தசாவதார திருக்கோயில்

தாசாவதார திருக்கோயில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன. கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், மதில்சுவர் கட்டுமானப் பணிகளை செய்த திருமங்கையாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தில் இரங்கநாதர் பத்து அவதார திருக்கோலத்திலும் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது.[3][4]

மேற்கோள்கள்

  1. "Bhag-P 7.8.19-22". Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-05-27.
  2. Steven J. Rosen, Narasimha Avatar, The Half-Man/Half-Lion Incarnation, p5
  3. பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்கள் (10 அவதாரங்கள்)
  4. அருள்மிகு தசவதார திருக்கோயில், திருவரங்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாவதாரம்_(இந்து_சமயம்)&oldid=4070443" இலிருந்து மீள்விக்கப்பட்டது