ஜெயதேவர்
ஜெயதேவர் (Jayadeva) (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர். சமஸ்கிருத மொழி வல்லுனர். பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பானது, புகழ்பெற்ற கீத கோவிந்தம் என்னும் காவியம். இந்த கவிதைப் படைப்பானது, இந்து சமயக் கடவுளாக கண்ணன் மற்றும் ராதை க்கு இடைய இருந்த தெய்வீக காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானன ஒன்றாக விளங்குகிறது.
ஜெயதேவர் | |
---|---|
விட்டுணுவை வழிபடும் ஜெயதேவர். | |
பிறப்பு | பொ.ஊ. 1200 (மதிப்பீடு) குர்தா மாவட்டம், ஒடிசா, இந்தியா |
இறப்பு | ஒடிசா, இந்தியா |
தத்துவம் | வைணவம் |
வாழ்க்கை வரலாறு
தொகுசெயதேவர் ஒடிசா மாநிலத்திலுள்ள குர்தா மாவட்டத்து பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளி சாசன் என்றவிடத்தில் பிறந்தார். இது புகழ்பெற்ற கோவில் நகரமான பூரிக்கு அண்மையில் உள்ளது. இவர் ஒடிசாவை கிழக்கு கங்கை பேரரசு ஆண்டு கொண்டிருந்தபோது பிறந்துள்ளார். சோடகங்க தேவர் மற்றும் அவரது மகன் இராகவா மன்னராக இருந்த காலங்களில் ஜெயதேவர் தமது படைப்புக்களை ஆக்கியிருக்க வேண்டும் என கோவில் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது.
கோவில் கல்வெட்டுக்களிலிருந்தே இவரது பெற்றோரின் பெயர்கள் போஜதேவன் என்றும் ரமாதேவி என்றும் தெரிய வருகின்றன.மேலும் இவர் தமது வடமொழிக் கல்வியை கூர்ம்பதாகை என்றவிடத்தில் கற்றதாகத் தெரிகிறது. இது தற்போதைய கோனரக்கிற்கு அருகே இருக்கலாம். இவர் பத்மாவதியை திருமணம் புரிந்துள்ளார். ஒடிசா கோவில்களில் தேவதாசி முறையை ஒழுங்குபடுத்திய ஜெயதேவர் கோவில் நடனக்கிழத்தியை மணம் புரிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜெயதேவர் குறித்த வரலாற்றுச் செய்திகள்
தொகுஇலிங்கராஜ் கோவில், மதுகேசுவர் கோவில் மற்றும் சிம்மாசலம் கோவில்களில் அண்மையில் கண்டறிந்த கல்வெட்டுக்களிலிருந்து முனைவர். சத்தியநாராயணன் ராஜகுரு ஜெயதேவரின் வாழ்க்கையைக் குறித்த சில புரிதல்களை வெளியிட்டுள்ளார். [1] இவற்றில் ஜெயதேவர் கூர்மபதாகையில் ஆசிரியப்பணியாற்றியதைப் பகர்கின்றன. இவரும் அங்கேயே படித்திருக்கலாம்.இங்கு அவருக்கு கவிதை, இசை மற்றும் நடனத்தில் பயிற்சி ஏற்பட்டிருக்கலாம்.
ஒடிசாவிற்கு வெளியே ஜெயதேவரைக் குறித்த குறிப்புகள் பிருத்திவிராச் சௌகான் அரசவைக் கவிஞராக இருந்த சாந்த் பர்தாய் பாடல்களில் உள்ளன. இதற்கு அடுத்ததாக பொ.ஊ. 1201இல் ராசா சாரங்கதேவர் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கீத கோவிந்தம் இயற்றப்பட்ட சிறிது காலத்திலேயே இந்தியா முழுமையும் பரவலாக அறியப்பட்டது என தெரிய வருகிறது. பூரியிலுள்ள ஜெகன்னாதர் கோயிலில் வழமையாக கீத கோவிந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்திருக்கலாம்.
மேலும் சில குறிப்புக்கள் ஒடிசா வைணவக் கவி மாதவ பட்நாயக்கின் நூலிலிருந்து பெறலாம். இவரது நூல் சைதன்யர் பூரி வந்தபோது கெந்துள் சாசன் சென்று ஜெயதேவரை வணங்கியதாகவும் கீத கோவிந்தத்திலிருந்து சில கீர்த்தனைகளைப் பாடியதாகவும் விவரிக்கிறது. இந்த நூலிலிருந்தே ஜெயதேவரின் பிறப்பிடம் கெந்துள் சாசன் என அறிகிறோம்.
வெளியிணைப்புகள்
தொகு- Sanskrit Scholars of Orissa பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் (pdf)
- "Jayadéva". Encyclopedia Americana. 1920.
- ஜெயதேவர் கதை - ஒலி வடிவம்
- ↑ "Sanskrit Scholars of Orissa" (PDF). 2006.