கனகதாசர்

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

கனகதாசர் பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டைச் (1509–1609) சேர்ந்த வைணவ பக்தர் மற்றும் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கர்நாடக இசைக் கலையில் சாதனை படைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர். கன்னட பக்தி இலக்கியத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். உடுப்பி கிருஷ்ணர் கோயில் கிருஷ்ணர் மேற்கு நோக்கி காட்சி தர இவர் காரணம் என்பதாக வரலாறு.[1]

கனகதாசர்
கனகதாசரின் ஓவியம்
பிறப்பு30 நவம்பர் 1509
பாடா, சிக்கோன், விஜயநகரப் பேரரசு (இன்றைய ஆவேரி மாவட்டம், கர்நாடகா, இந்தியா)
இறப்பு1609 (அகவை 100)
காகிநேலே, ப்யடகி தாலுகா (ஆவேரி மாவட்டம்)
இயற்பெயர்திம்மப்ப நாயகா
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம், வைணவம்
குருவியாசதீர்த்தர்

கனகதாசர் 240 கர்நாடக இசைப் பாடல்கள் இயற்றியுள்ளார்.[2] இவரது பாடல்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 100 பாடல்கள் கன்னடத்திலும்[3], 60 பாடல்கள் ஆங்கிலத்திலும் பிரபலமான புத்தகங்களில் வெளியாகியுள்ளன.[4]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பதினாறாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பாடா என்னும் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை படைத் தளபதியாகப் பணியாற்றியவர். குழந்தைச் செல்வம் வேண்டி வெங்கடேசப் பெருமானுக்கு சிறந்த வழிபாடுகள் செய்தவர். அதன் பயனாகப் பிறந்த குழந்தைக்கு திம்மப்பா என்று பெயர் வைத்தார். திம்மப்பா சிறந்த தளபதி ஆனார். ஒரு சமயம் திம்மப்பா போரில் கடுமையாகத் தாக்கப்பட்டு நினைவு இழந்தபோது கிடைத்த வெங்கடேசப் பெருமாளின் தரிசனத்தால் பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் செல்வம், போர் வாழ்க்கை அனைத்தையும் ஒதுக்கினார். இறைப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தனக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு சொந்த ஊரான பாடாவுக்கு அருகில் கேசவனுக்கு ஒரு கோயில் கட்டினார். இந்தக் காலகட்டத்தில் தான் திம்மப்பாவின் பெயர் கனகப்பாவாக மாறியது.

பக்தி வெளிப்பாடு தொகு

தாசகூடம் என்னும் அமைப்பு கன்னட பக்தி இலக்கியத்தைப் பொறுத்த வரை மிகச் சிறப்பான இடம் வகிக்கிறது. அதில் வியாசராயனின் சீடனாக கனகப்பா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாசகூடம் அமைப்பு அவரை கனகதாசராக்கியது. தனது மாணவர்களில் மிகச் சிறந்தவர் கனகதாசரே என வியாசராயனே குறிப்பிட்டு உள்ளார். ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும், அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பது அவருடைய கொள்கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் பாடல்கள் அமைந்தன.

படைப்புகள் தொகு

மோகன தரங்கிணி, நள சரித்ரே, ராமதான்ய சரித்ரே ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

 • மோகனதரங்கிணி
இந்த நூல் பாணாசுரனின் மகள் உஷா மற்றும் கிருஷ்ணரின் பேரனும், பிரத்யும்னாவின் மகன் அனிருத்தன் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள காதலை வெளிப்படுத்துவது ஆகும். கேசவனின் பக்தனான பாணாசுரனிடம் சிவ பக்தனான பிரத்யுமனா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு இளம் காதலர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று சொல்வதாக ஒரு காட்சி உள்ளது. இங்கு சைவம் வைணவத்துடன் சேரும் நிலையில் அமைந்த கனகதாசரின் மனப்போக்கைப் பார்க்க முடிகிறது. மோகன தரங்கிணி பலராலும் போற்றப்படுவதற்கு இது ஒரு காரணமாகும்.
 • ராமதான்ய சரித்ரே
இது நாட்டுப்புறக் கதை அமைப்பில் ஆனது. ஏறத்தாழ ஐம்பத்தி எட்டு பாடல்களைக் கொண்டது. ராமபிரான் நீதிபதியாக அரச சபையில் இருக்கும்போது கேழ்வரகுக்கும், அரிசிக்கும் இடையே சண்டை யார் உயர்வானவர்கள் என்று. வழக்கை நடத்தும் ராமன் இரு தானியங்களையும் தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட கெடு வரை அடைத்து வைக்கச் சொல்கிறான். கெடு முடிந்ததும் அவை எடுத்து வரப்படுகின்றன. பல நாட்களுக்குப் பிறகும் ராகி தன் சக்தியை இழக்காமல் அப்படியே இருக்கிறது. அரிசி தன் சக்தி முழுவதையும் இழந்திருந்தது. ராமன் கேழ்வரகின் தன்மையைப் புரிய வைத்ததாக கதை. கேழ்வரகை ஏழைகளின் வடிவாகவும், அரிசியைப் பணம் உடையவர்களின் வடிவாகவும் உள்ளுறையாகக் காட்டி உள்ளார்.[1]
 • நளசரித்ரே
நளனின் வரலாற்றைக் விரிவாகக் கூறுவதாகும்.
 • ஹரிபக்தி சாரம் என்ற பெயரில் நூற்றுக்கும் மேலான பாடல்களைப் பாடி உள்ளார். மூட நம்பிக்கைகளை வெறுத்து கண்டனமாகப் பாடி உள்ளார்.

அங்கீகாரங்கள் தொகு

இவரைப் போற்றும் விதமாக கர்நாடகாவில் கார்த்திகை மாதம் 18ஆம் நாள் கனகதாசர் ஜெயந்தி நாளாக போற்றப்படுகிறது. இந்த நாளை மாநில விடுமுறை நாளாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

திரைப்படம் தொகு

 • பக்த கனகதாசர் என்ற கன்னட திரைப்படம் இவரது வாழ்க்கை வரலாறு கூறும் திரைப்படமாக 1960 ஆம் ஆண்டு வெளிவந்து விருது பெற்றது.[5]
 • கனக-புரந்தரா (1988) எனும் ஆங்கில ஆவணத் திரைப்படம் இவரது வரலாற்றையும், புரந்தரதாசரது வரலாற்றையும் கூறும் திரைப்படம்.[6][7]

சான்றுகள் தொகு

 1. 1.0 1.1 http://www.tamilhindu.com/2010/11/kannada-nandhanar-kanakadasa/
 2. Kanakadasa-The Golden servant of Lord Hari (2001) by Basavaraj Naikar, National Book Trust பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-3664-9
 3. Kanaka Daasara Padagalu (1997) By S Rudramurthy Shastri, Bhagya Laksmi Publishers, Bangalore
 4. Songs of Three Great South Indian Saints by William J. Jackson (2002), Oxford India Paper, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-566051-X
 5. [1]
 6. Kanaka-Purandara ஐ.எம்.டி.பி இணையத்தளம்'
 7. AWARDS: The multi-faceted playwright பரணிடப்பட்டது 2001-12-30 at the வந்தவழி இயந்திரம் பிரண்ட்லைன், Vol. 16, No. 03, January 30 - February 12, 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகதாசர்&oldid=3891572" இலிருந்து மீள்விக்கப்பட்டது