வல்வை ந. அனந்தராஜ்

வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர்

நடராஜா அனந்தராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட வல்வை ந. அனந்தராஜ் இலங்கையின் வடக்கே வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். தற்போது வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவராக சேவையாற்றுகின்றார்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

நடராஜா குணலக்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை வல்வெட்டித்துறை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லுரியிலும் கற்றவர். கல்லூரியில் கற்ற காலத்திலேயே இலக்கியத்துறை மற்றும் நாடகம், சாரணியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். இருபத்தி மூன்று வயதில் ஆசிரியராகத் தனது கல்விச் சேவையை ஆரம்பித்த அனந்தராஜ் பின்னர் அதிபராக, கொத்தணி அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றினார். பின்னர் உலக வங்கியின் பாடசாலை மேம்பாட்டுத் நிகழ்ச்சித் திட்டத்திற்கான வடமாகாண நிபுணத்துவ ஆலோசகராக பாடசாலைகளின் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் ஊடகப் பட்டபடிப்பு மாணவர்களுக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கலைமாணி, முதுமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா, ஊடகத்துறையில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, மற்றும் ஊடகத்துறையில் முதுமாணிப் பட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பட்டங்களையும், கல்வி முகாமைத்தவத் துறையில் முதலாம் தர அதிபர் சேவை, மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவையையும் பெற்றவர்.

எழுத்தாளராக தொகு

சிறுகதைத் தொகுப்பு நூல்கள், அறிவியல் நூல்கள், நாட்டார் இலக்கியங்கள், முகாமைத்துவம், கல்வி, ஆய்வு நூல்கள், சமய இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் என சுமார் 15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

வெளியிடப்பட்ட நூல்கள் தொகு

 • வடபுல நாட்டார் வழக்கு
 • அறிவியல் உண்மைகள்
 • ஈழத் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்
 • முகாமைத்துவ நுட்பங்கள்
 • கூழ்நியாயம்
 • பாதசரம்
 • நீரலைகள்
 • தேசியத்தை நோக்கிய கல்வி
 • உதிரம் உறைந்த மண் (நாகர்கோயில் மாணவப்படுகொலைக் கதை)
 • வல்வைப் படுகொலைகள்
 • India’s Mylai – Valvettiturai Massacre (ஆங்கிலத்தில்) இந்திய இராணுவத்தின் வல்வெட்டித்துறைப் படுகொலைகள் தொடர்பான புகைப்படங்களுடனும், சத்தியக் கடதாசிகளுடனும் வெளியிடப்பட்ட முழுமையான ஆவணம ;
 • அன்னபூரணியின் அமெரிக்கப்பயணம்
 • சந்நிதிச் செல்வம்
 • பாடசாலை முகாமைத்துவம்
 • பொது விவேகம் (கல்வி அமைச்சு வெளியீடு)

பத்திரிகைத் தொடர்கள் தொகு

 • மண்ணும் மனிதனும் - தினகரன் தொடர் நாவல்
 • யப்பானிய 5 S முகாமைத்துவம் - உதயன் தொடர் கட்டுரை
 • முகிழ்த்து நிற்கும் முல்லைத்தீவு - ஈழநாடு தொடர் விவரணச் சித்திரம்
 • ஒப்பரேசன் வல்வைப் புயல் - உதயன் தொடர் கட்டுரை
 • சத்ஜெய - ஈழநாடு தொடர் விவரணச் சித்திரம்
 • அலுவலக முகாமைத்துவம் - விளக்கு தொடர் கட்டுரை

பெற்ற விருதுகள் தொகு

 • இராணிச் சாரணருக்கான விருதையும் மாட்சிமை தங்கிய மகாராணியின் சான்றிதழையும் மகாதேசாதிபதி வில்லியம் கோபல்லாவிடம் இருந்து பெற்றமை - 1968
 • “சுடர்” சஞ்சிகையில் வெளியான சிறந்த சிறுகதையாக “அந்தச்சுவடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன.” தெரிவு செய்யப்பட்டு தந்தை செல்வா அவர்களால் பாராட்டி பணப் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை - 1972
 • ‘அழகியகண்ணே” வல்வை கலை இலக்கிய மன்றம் வழங்கிய இலக்கிய விருது - 1994
 • விளக்கு சிறுகதைப் போட்டியில் “பிறந்த நாள் பரிசு” சிறுகதைக்கான முதலாம் பரிசு - 1995
 • தினக்குரல் பத்திரிகையும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் “பாதசரம்” சிறுகதைக்கான இரண்டாம் இடம் - 1998
 • சிறந்த பெறுபேற்றுக்கான தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை - ஊடகப்பட்டப்பின் டிப்ளோமா,கொழும்பு பல்கலைக்கழகம் - 1999
 • அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் நடத்திய அனைத்துலக சிறுகதைப் போட்டி முதலாம் இடம் (தொடர்ந்து இரண்டு வருடங்கள்- 1999,2000) “ஒரு பிடி அரிசி” (1999 இல்) “ கானல் நீர்” (2000),
 • முகாமைத்துவ நுட்பங்கள் நூலுக்கான ஆளுநர் சாகித்திய விருது - 1999
 • “கலைப்பருதி விருது” – வடமராட்சி வடக்கு பிரதேச கலாச்சாரப் பேரவையின் கௌரவ இலக்கியப்பட்டம் - 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்வை_ந._அனந்தராஜ்&oldid=2716324" இலிருந்து மீள்விக்கப்பட்டது