வளர்ச்சியில் பெண்கள்

வளர்ச்சியில் பெண்கள் (Women in Development) என்பது 1960 களில் உருவான வளர்ச்சித் திட்டங்களின் அணுகுமுறையாகும். இது வளர்ச்சித் திட்டங்களில் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கான முறைகளைக் கண்டறியவும், களையவும் அழைப்பு விடுக்கிறது. மேலும், உலகளாவிய பொருளாதாரச் செயல்பாடுகளில் பெண்களின் நிலையை மேம்படுத்தி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் ஒருங்கிணைப்பது ஆகும். பின்னர், பாலினம் மற்றும் அது சார்ந்த வளர்ச்சி (GAD) அணுகுமுறை பெண்களின் பிரச்சினைகளை தனிமையில் பார்ப்பதை விட பாலின உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஒருங்கிணைந்த அணுகுமுறையாக பார்ப்பதே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்தது. [1]

கருத்துக்கள்

தொகு

ஆப்பிரிக்காவில், விவசாயத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை முதன்முதலில் அங்கீகரித்தவர்களில் ஒருவரான எர்மன் பெளமன் 1928 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்க ஹோ கலாச்சாரத்தின் படி வேலைப் பகிர்வு என்ற தனது கட்டுரையில் இது குறித்து தெரிவித்திருந்தார். காபெரி 1952 ஆம் ஆண்டில் கேமரூனில் பெண்களைப் பற்றி மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வை வெளியிட்டார், மேலும் ஆண் மற்றும் பெண் செயல்பாடுகள் பற்றிய அனுபவத் தகவல்கள் 1956 இல் கல்லெட்டி, பால்ட்வின் மற்றும் தினாவால் வெளியிடப்பட்ட நைஜீரிய கோகோ விவசாயிகள் என்ற கட்டுரையில் ஆவணப்படுத்தப்பட்டன. [2] எஸ்தர் போசரப்பின் பொருளாதார வளர்ச்சியில் முன்னோடிப் பெண்களின் பங்கு என்ற ஆவணம் விவசாயப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கின் முக்கியத்துவம் மற்றும் இந்த யதார்த்தத்துடன் வளர்ச்சித் திட்டங்களின் சீரமைப்பு இல்லாதது குறித்து அதிக கவனத்தை ஈர்த்தது. [3] தனது புத்தகத்தின் முன்னுரையில், போசரப் "பொருளாதார வளர்ச்சி குறித்த பரந்த அளவிலான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் இலக்கியங்களில், பெண்களின் குறிப்பிட்ட பிரச்சனைகள் பற்றிய பிரதிபலிப்புகள் குறைவாகவே உள்ளன" என்று எழுதினார். [4] பெண்கள் பெரும்பாலும் விவசாயப் பணிகளில் பாதிக்கு மேல் செய்வதாகவும், ஒரு சில விடயங்களில் 80%அளவுக்கு அதிகமாக இருப்பதையும், அவர்கள் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்ததையும் அவர் காட்டினார். [2]

வேறு சில நாடுகளில், பெண்கள் கடுமையாக வேலையில்லாமல் இருந்தனர். இந்தியாவில் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 48.2% பெண்கள் இருந்தனர். ஆனால் பொருளாதார நடவடிக்கைகளில் 13% பெண்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். பெண்கள் பல வகையான முறையான வேலைகளிலிருந்து விலக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். எனவே 94% பெண் தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையில் விவசாயம், வேளாண் வனவியல், மீன்வளம், கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பலவிதமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். [5] பெண்களின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு பெருகி, 1970 களில் வளர்ச்சித் திட்டமிடல் செய்பவர்கள் பெண்களை அதிக செயல்திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்காக அவர்களின் திட்டங்களில் சிறப்பாக ஒருங்கிணைக்க முயன்றனர். [3] வளர்ச்சியில் பெண்கள் அணுகுமுறை ஆரம்பத்தில் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நாட்டில் ஏற்கனவே இருந்த சமூக கட்டமைப்புகளை ஏற்றுக்கொண்டது மற்றும் தற்போதுள்ள வளர்ச்சி முயற்சிகளில் பெண்களை எவ்வாறு சிறப்பாக ஒருங்கிணைப்பது என்று திட்டமிட்டபார்த்தது. [6] பெண்களின் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயை அதிகரிப்பதே நேரடியான குறிக்கோளாக இருந்தது. [7]

செயல்பாடுகள்

தொகு

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) பெண்கள் வளர்ச்சிக்கான ஒரு சிறப்புப் பிரிவை நிறுவி, இத்திட்டங்களில் பெண்கள் பங்கேற்பதை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகளை ஊக்குவித்தது. [8] 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மூன்றாம் ஐக்கிய நாடுகளில் தசாப்தத்திற்கான மேம்பாடுகள் என்ற தலைப்பிலான ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மேம்பாட்டு உத்தி, வளர்ச்சிப் பிரச்சினைகளில் பல பெண்களை அங்கீகரித்தது. ஐக்கிய நாடுகள் பெண்கள் தசாப்தத்தின் உலக மாநாட்டால் முகர்களாகவும் பயனாளிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்கள் அனைத்துத் துறைகளிலும் மற்றும் அனைத்துத் திட்டங்களிலும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் செயலில் பங்கு வகிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. தொழில்மயமாக்கல், உணவு மற்றும் விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சமூக மேம்பாடு பற்றிய கொள்கைகள் அனைத்தும் பெண்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். [9]

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு மேம்பாட்டு மையத்தின் 1985 ஆம் ஆண்டு அறிக்கையானது பெண்களை இலக்காகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்களின் பரந்த மாதிரியை ஆய்வு செய்தது. பெண்களில் பலர் நலத்திட்டங்களைச் சார்ந்தவர்கள் என்று முடிவு செய்யப்பட்டது. "எதிர்காலத் திட்டங்கள் வீட்டுப் பொருளாதார அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் வளர்சித் திட்டங்கள் சார்ந்த தொழில்களில் பங்குபெறும் பெண்களுக்கு பொருத்தமான மற்றும் பயனுள்ள வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் இந்த அறிக்கை கூறியது. இது பெண்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவலின் பற்றாக்குறையையும் குறிப்பிட்டது, மேலும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான உள்ளீடாக அதிக ஆராய்ச்சி செயல்பாடுகளுகக்கு அழைப்பு விடுத்தது. [10]

ஆர்வர்டு பகுப்பாய்வு கட்டமைப்பு இத்தகைய கவனம் தேவைப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றது. உலக வங்கியின் வளர்ச்சியில் பெண்கள் பயிற்சிக்காக ஆர்வர்டு பல்கலைக் கழகத்திற்கு 1980 ஆம் ஆண்டில் ஒரு கோரிக்கையுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆர்வர்டில் தனி ஆய்வு-முறை பயிற்சிக்கு நன்கு அறியப்பட்ட ஜேம்ஸ் ஆஸ்டின், வளர்ச்சியில் பெண்கள் பணியில் அனுபவம் வாய்ந்த மூன்று பெண்களுடன் ஒரு குழுவை வழிநடத்தினார்: கேத்தரின் ஓவர்ஹோல்ட், மேரி ஆண்டர்சன் மற்றும் கேத்லீன் கிளவுட் ஆகியோர் இம்மூவர் ஆவர். இக்குழு "ஹார்வர்ட் குழு" என்று அறியப்பட்டது. [11] திட்டத்தின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்ட பொழுது சர்வதேச வளர்ச்சிக்கான ஹார்வர்ட் நிறுவனம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சர்வதேச வளர்ச்சி முகமையின் வளர்ச்சியில் பெண்கள் அலுவலகத்துடன் இணைந்து, கேத்தரின் ஓவர்ஹால்ட் மற்றும் பலரால் 1984 ஆம் ஆண்டில் இத்திட்டம் விவரிக்கப்பட்டது. இது போன்ற கட்டமைப்புகளில் இந்த அமைப்பு ஒரு ஆரம்பகால அமைப்பாகும். [12] கட்டமைப்பின் தொடக்கப் புள்ளி, வளர்ச்சி அல்லது மேம்பாட்டு உதவித் திட்டங்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வளங்களை ஒதுக்குவதற்கு பொருளாதாரம் அவசியம் என்பது அர்த்தமுள்ளது என்ற அனுமானம் ஆகும். இது வளர்ச்சியை மிகவும் திறம்பட செய்யும் - "செயல்திறன் அணுகுமுறை" என்று பெயரிடப்பட்ட ஒரு நிலையாகும். [13]

நவம்பர் 1990 இல், தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) நாடுகளின் தலைவர்கள் ஜூன் 1990 இல் நடைபெற்ற இரண்டாவது சார்க் அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தனர், 1991-2000 ஆண்டுகளை "சார்க் பெண் குழந்தைகளுக்கான தசாப்தமாக கடைபிடிக்க வேண்டும்" என்று ஒப்புக் கொண்டனர். பெண் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான பரந்த அளவிலான பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. [8]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்ச்சியில்_பெண்கள்&oldid=3287588" இலிருந்து மீள்விக்கப்பட்டது