வளிமப் பெருங்கோள்
வளிமப் பெருங்கோள் (Gas giant) என்பது முதன்மையாக ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகிய வளிமங்களைக் கொண்டுள்ள ஒரு பெருங்கோளைக் குறிக்கும். கதிரவ அமைப்பில் வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும். வளிமப் பெருங்கோள் என்பது பெருங்கோள்கள் என்ற வகைப்பாட்டிற்கு இணையாகவே கருதப்பட்டு வந்தது. எனினும் 1990களில் யுரேனசு மற்றும் நெப்டியூன் ஆகிய இரு பெருங்கோள்களின் உள்ளடக்கம் முதன்மையாக, கனமான மற்றும் ஆவியாகும் பனி போன்ற பொருட்களால் ஆகியிருப்பதால் அவை பனிக் கோள்கள் என்று தனிவகையாகப் பிரிக்கப்பட்டன.
வியாழனிலும் சனியிலும் பெரும்பாலும் ஐதரசன், ஈலியத்தால் நிறைந்துள்ளன; மிகுநிறையுள்ள தனிமங்கள் திண்மத்தின் 3இலிருந்து 13 விழுக்காடு வரை உள்ளன.[1] உருகிய நிலையிலான பாறைக் கட்டமைப்பு கருவத்தை அடுத்து மாழைய ஐதரசன் நீர்மமும் இதனை வெளி அடுக்கில் நீரியம் சூழ்ந்தும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. ஐதரசன் வளிமண்டலத்தின் வெளிப்புறப் பகுதியில் பல அடுக்குகளிலான நீராலும் அம்மோனியாவாலுமான மேகங்களைக் காணலாம். மாழைநிலை ஐதரசன் இக்கோள்களின் பெரும்பான்மை உள்ளடக்கமாக உள்ளது; மிகுந்த உயர்நிலை அழுத்தத்தால் ஐதரசன் மின்கடத்தியாக செயற்படுவதால் "மாழைய" ஐதரசன் என்று குறிப்பிடப்படுகின்றது. கருவத்தில் உள்ளதாகக் கருதப்படும் மிகுநிறை தனிமங்கள் மிகுந்த உயர் அழுத்தத்திலும் மிகுந்த உயர் வெப்பநிலையிலும் (20,000 K) உள்ளதால் அவற்றின் பண்புகள் சரியாக அறியப்படவில்லை.[1]