வாலிகண்டபுரம் வாலீசுவரர் கோயில்

வாலிகண்டபுரம் வாலீசுவரர் கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கிமீ. தொலைவில் உள்ளது.[1]

அமைவிடம் தொகு

இக்கோயில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சியின் வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ளது. வாலி பூசை செய்த நிலையில் இவ்வூர் வாலிகண்டபுரம் என்றழைக்கப்படுகிறது.[2]இக்கோயில் இரஞ்சன்குடி கோட்டைக்கு 7 கிமீ தொலைவிலும், பெரம்பலூரிலிருந்து 11 கிமீ தொலைவிலும், தொழுதூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், சிறுவாச்சூரிலிருந்து 17 கிமீ தொலைவிலும் உள்ளது. இது பெரம்பலூர்-தொழுதூர் சாலையில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக வாலீசுவரர் உள்ளார். அம்பாள் பெயர் வாலாம்பிகை. வாலி வழிபட்ட ஈசுவரர் என்ற நிலையில் இவ்வாறு அழைக்கப்படுகிறார். வாலினை நினைவுகூறும் வகையில் திருக்குளத் தூணிலும், ஆங்காங்கே பல இடங்களில் வாலியின் சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றில் பல வாலி மயமாக உள்ளன என்று கூறலாம். இங்கு வந்து மூலவரை பூசித்த பின்னர் வாலிக்கு எதிராளியின் பலத்தில் பாதி பலம் கிடைத்ததாகக் கூறுகின்றனர். அன்னை வாலாம்பிகை ஆவார். சரவண தீர்த்தம் கோயிலின் தீர்த்தமாக உள்ளது.[3][2]

அமைப்பு தொகு

ஏழு நிலையுள்ள ராஜ கோபுரம் சிற்பங்களின்றி காணப்படுகின்றன. சகஸ்ர கோபுரம் என்றழைக்கப்படுகின்ற ராஜ கோபுரத்தின் முன்பாக இடப்புறத்தில் நடராசர் மண்டபம் உள்ளது. கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இம்மண்டபத்தில் அழகான சிற்பங்கள் உள்ளன.ராஜ கோபுரத்திற்கு எதிராகவும், இந்த மண்டபத்திற்குத் தென் எதிராகவும் உள்ள மண்டபத்தில் பால கணபதி காணப்படுகிறார். ராஜ கோபுரத் தூண்களில் இரு புறம் அரசிகள் காணப்படுகின்றனர். கோபுரத்தின் உட்புறம் வலது பக்கத்தில் ஈசான்ய மூலையில் கோயில் தீர்த்தம் அமைந்துள்ளது. மண்டபத்தில் நந்தி, மூலவரைக் காணும் வகையில் உள்ளார். மூலவரின் எதிரே அடுத்தடுத்து பால நந்தி, வாலிப நந்தி, யவன நந்தி என்றழைக்கப்படுகின்ற மூன்று நந்திகள் உள்ளன. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கிய நிலையில் பைரவர் உள்ளார். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டப வாசலின் அருகில் கணபதி உள்ளார். இரு புறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். மகா மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கிய நிலையில் இறைவியின் சன்னதி உள்ளது. தண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, ஆகியோர் உள்ளனர். வடமேற்கு மூலையில் கொற்றவை உள்ளார். திருச்சுற்றின் தென் திசையில் ஏழரை அடி உயரத்தில் தண்டாயுதபாணி சற்றே மேற்கு நோக்கி முகம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். தென் புறத்தில் 1008 பாணங்களை உள்ளடக்கிய லிங்கம் காணப்படுகிறது.[2]

திருவிழாக்கள் தொகு

அஷ்டமி பூசை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவாகும்.[2]

மேற்கோள்கள் தொகு