வாழ்த்து அட்டை
நட்பு, வாழ்த்து, மகிழ்ச்சி, நன்றி போன்ற உணர்வுகளை உரியவர்களுக்குத் தெரிவிப்பதற்காக அனுப்பப்படும் படம் அச்சிடப்பட்ட மடல்களை வாழ்த்து அட்டைகள் என்பர். இவ்வட்டைகள் பெரும்பாலும் மடக்கப்பட்டதாகவும் அழகான வாழ்த்துச் சொற்றொடர்களைக் கொண்டதாகவும் இருக்கும். பிறந்த நாள், பொங்கல், ஆண்டுப் பிறப்பு, கிறிஸ்துமஸ் போன்ற சிறப்பு நாட்களில் வாழ்த்து அட்டைகள் பெருமளவில் பரிமாறிக் கொள்ளப்பட்டாலும், அன்பைத் தெரிவிக்க எந்நாளிலும் இவற்றை அனுப்பலாம்.
வாழ்த்து அட்டைகள் பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கும். கூடவே, அவற்றை அஞ்சலில் அனுப்பி வைப்பதற்கான பொருத்தமான வண்ணம் உடைய அஞ்சல் உறைகளும் கிடைக்கும். இவ்வாழ்த்து அட்டைகள் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களால் கையாலோ பொறிகளின் உதவியுடனோ உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழ்த்து அட்டைகளின் வடிவமைப்பு, அளவு, தரம் ஆகியவற்றைப் பொறுத்துப் பத்து இந்திய ரூபாய்கள் முதற்கொண்டு நூற்றுக்கணக்கான இந்திய ரூபாய்கள் வரை விலை மதிப்புடைய வாழ்த்து அட்டைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. வாழ்த்து அட்டைகளைப் பிரிக்கும் போது இசைக்கும் வண்ணமும் ஒளிரும் வண்ணமும் அமைக்கப் பட்ட சிறப்பு அட்டைகளும் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், வேலன்டைன் நாள் போன்ற நாட்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்த்து அட்டைகள் பரிமாரிக் கொள்ளப் படுகின்றன. மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் காலங்களில் இவை அதிகம் பரிமாரிக் கொள்ளப் படுகின்றன. ஹால்மார்க் கார்ட்ஸ், அமெரிக்கன் க்ரீட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களே உலகின் முன்னணி வாழ்த்து அட்டை விற்பனை நிறுவனங்களாகும். ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் ஓராண்டுக்கு அனுப்பப்படும் வாழ்த்து அட்டைகளின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்டாக மதிப்பிடப்படுகிறது.[1]
நண்பர்கள், உறவினர்கள் தவிர நிறுவனங்களும் கூடத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வணிக நோக்கத்துடன் சமயம் சாராத விழா கால மற்றும் விடுமுறைக் கால வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைப்பது வழக்கம்.
உசாத்துணை
தொகு- ↑ "Card sharps". BBC News. 2006-10-12. http://news.bbc.co.uk/1/hi/magazine/6043426.stm. பார்த்த நாள்: 2006-10-14.