தீபாவளி

இந்தியாவின் தீப ஒளித் திருநாள் தீபாவளி

தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி
தீபாவளியன்று வழக்கமாக ஏற்றப்படும் விளக்குகள்
பிற பெயர்(கள்)தீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்
கடைபிடிப்போர்இந்துக்கள்,சீக்கியர்கள், சமணர்கள் சமய ரீதியாகவும் ஏனைய இந்தியர்கள் காலாச்சார ரீதியாகவும் கொண்டாடுகின்றனர்.
வகைகலாச்சாரம், சமயம் சம்பந்தமான
முக்கியத்துவம்பாரத நாட்டின் மிகப்பெரும் திருவிழா
கொண்டாட்டங்கள்வீடுகளை விளக்குகளால் அலங்கரித்தல், வெடி வெடித்தல், பரிசு பரிமாறல்
அனுசரிப்புகள்சதுர்த்தசி நோன்பு, கேதார கௌரி விரதம்(அமாவாசை)
நாள்Ashvin Krishna Trayodashi, Ashvin Krishna Chaturdashi, Ashvin Amavasya, Kartik Shukla Pratipada, Kartik Shukla Dwitiya
நிகழ்வுஆண்டுக்கு ஒருமுறை

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டங்கள்
நரக சதுர்த்தசி இரவில் வீட்டின் உட்புறத்தில் அகல் விளக்கு அலங்காரம்.
தீபாவளி விளக்குகள்
நேபாளத்தில் தீபாவளி கொண்டாட்டம்.
சென்னையில் இரவு நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள்.
நடன நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள்.
தீபாவளி தினத்தில் வீடுகளை விளக்குகளால் அலங்கரித்தல், வெடி வெடித்தல், பரிசு பரிமாற்றம் செய்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். தீபாவளியானது சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.[1][2][3]

தோற்ற மரபு

இந்து சமயத்தில் தீபாவளி

  • தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
  • புராணக் கதைகளின் படி, திருமால் வராக அவதாரம் (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்). பின்பு அவன் இன்றைய அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்சோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான். பின்பு தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாதென்று பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.
  • அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படக்கூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.
  • பின்பு மனிதன் ஆக இருந்து ஓர் அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும்.
  • இவன் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான். அப்போது கிருட்டிணர் அவதாரத்திற்கு முன்பே திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தார்.
  • அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருட்டிணர் தனது மனைவியரில் ஒருவரான ச‌‌த்யபாமா‌ (பூமாதேவியின்) அவதாரமாவார்.
  • அவருடன் சென்று நரகாசுரனை அழிக்க பல வகையில் முயற்சித்த கிருட்டிணர் தனது மனைவி சத்யபாமாவை நரகாசுரன் முன்பு ஒரு பேரழகியாக அலங்கரித்து ஒரு நாட்டிய நடனம் நடத்தினார்.
  • அதில் அழகிய மாறுவேடத்தில் பாரதகிருட்டிணர்–சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஓர் அடிமை நாட்டியம் ஆட வைக்கின்றார்.
  • இந்த நடனத்தின் முடிவில், நரகாசுரன் தனது இறப்பு நெருங்கியது கண்டு அச்சமுற்றாலும், நரகாசுரன் ஓர் அம்பை, கிருட்டிணரை பார்த்து விட்ட போதிலும் அந்த அம்பை தனது கணவன் மீது படாமல் நாட்டியம் ஆடும் அழகியான சத்யபாமா தன் நெஞ்சில் வாங்கிக் கொள்கிறாள்.
  • அந்த அம்பு நெஞ்சில் விழுந்த வலியைக் கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் இருந்து எடுத்து நரகாசுரனை சத்யபாமா கையால் அழிக்க வைத்தார் கிருட்டிணர் என்றும் கிருட்டிணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.
  • இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்தமண்களம். அதாவது {சிவந்த+(இரத்தம்)+மண்(பூமி)+களம்(போர்புரியும்இடம்)} என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பின்னர் கிருட்டிணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருட்டிண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்.
  • அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.[4]
  • இராமாயண இதிகாசத்தில் இராமர்- இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும், அயோத்திக்கு திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
  • கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.
  • தமிழகத்தில் முதன்முதலாக கி.பி.15ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்திருவிழாவின் போது வான வேடிக்கையுடன் தீபாவளி கொண்டாடியதாக அங்குள்ள சுவரோவியங்கள் மூலம் அறியலாம் .[5]

சீக்கியர்களின் தீபாவளி

  • 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி

முதன்மைக் கட்டுரை: தீபாவளி (சைனம்)

  • மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

பௌதத்தில் தீபாவளி

பௌத்தத்தில், தீபாவளியை 'தீபதான உற்சவம்' என்றும் அழைப்பர்.

கதைப்படி, புத்தர் போதிகயாவில் மெய்ஞானம் பெற்ற பிறகு, அவரது தந்தை அரசர் சுத்தோதனர் மகனின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர், அவனைப் பார்க்க விரும்பினார்.

இதற்காக, புத்தர் இராசகிரக மகாநகருக்கு அருகிலுள்ள மங்களகிரி என்ற மலையிடத்தில் இருந்தபோது, புத்தரை மன்னரின் தலைநகரான கபிலவத்துவுக்குத் திரும்பி வரும்படி சுத்தோதனர் ஒரு தூதரை அனுப்பினார். ஆனால் தூதுவர் புத்தரைச் சந்தித்த பிறகு அவருடைய சீடரானார். முந்தைய தூதர் வராததால், சுத்தோதனர் மற்றொரு தூதரை அனுப்பினார், அவரும் புத்தரின் கீழ் துறந்தவரானார், மேலும் புத்தரை மீண்டும் அழைத்து வரும் இராச கட்டளையை துறந்த தூதுவர் ஏற்கவில்லை. அவ்வாறே பல தூதர்களை ஒவ்வொருவராக அனுப்பினார், அவர்கள் பெருமானின் கீழ் உண்மையை உணர்ந்து துறவிகள் ஆனார்கள். புத்தருடன் மங்களகிரியிலிருந்து யாரும் திரும்பவில்லை.

கடைசியாக, சுத்தோதனர் தனது விசுவாசமான மந்திரி காலோதயனை அனுப்பினார், அவர் பின்வாங்க மாட்டார், இராச கட்டளையை நிராகரிக்க மாட்டார் என்று மன்னர் நம்பினார். காலோதயன், அரச தேரோட்டியான சந்தகனுடன் மங்களகிரியை நோக்கிச் சென்றான். புத்தரின் உபதேசத்தைக் கேட்ட காலோதயன் பெருமானின் பாமர மாணவனாக மாறினாலும், புத்தரை மீண்டும் கபிலவத்துவிற்கு வரச் செய்தான். புத்தரும் அவரது துறவிகணங்களும் கபிலவத்துவுக்குச் செல்ல அறுபது நாட்கள் ஆனது. பெருமானும் அவருடைய மாணவர்களும் கபிலவத்துவிற்கு விசயம் செய்த நாளன்று, நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விளக்குகளை வரிசையாக வைத்திருந்தார்கள். புத்தபெருமானின் புனித வருகையைக் கொண்டாடும் வகையில் தீபங்களைத் வாங்க முடியாத அனைத்து ஏழைகளுக்கும் வறியர்களுக்கும் மக்கள் தீபம் அளித்தனர். இந்த நாள் தான் ஐப்பசி மாத அமாவாசை.

புத்தரின் திருவிசயத்தை வழிபடுவதற்காக கபிலவத்துவின் மக்கள் தீபங்களை தானமாக அளித்து, ஊர் முழுவதும் அவற்றைத் தொடராக அமைத்து, சோதிப்பிரகாசத்தால் பூமியை தூயமாக்கியதால் அன்றைய தினம் 'தீபதான உற்சவம்' என்றும் 'தீபாவளி' என்றும் அழைக்கப்பட்டது. மகாராசா அசோகர் மகாத்தவிரர் மௌகளிப்புத்திரர் மற்றும் இந்திரகுப்தர் ஆகியோரின் மேற்பார்வையில் மௌரியத்தலைநகர் பாடலிபுத்திரத்தின் 'அசோகாராமம்' என்ற தனது மடாலயத்தில் தீபதான உற்சவத்தை கொண்டாடினார்.

இந்நிகழ்வு 'சிதவிரகாதை' என்னும் திருநூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.

பிற நாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு.[சான்று தேவை] மற்ற பல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.[சான்று தேவை]

மேலும் காண்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபாவளி&oldid=4075863" இலிருந்து மீள்விக்கப்பட்டது