விக்கிப்பீடியா:அடிக்கடி ஏற்படும் பிழைகள்

அடிக்கடி ஏற்படும் பிழைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.


எழுத்துக் கூட்டல்களும் புணர்ச்சிகளும்தொகு

பிழையான சொற்கள் கோடிட்டு அடிக்கப்பட்டுள்ளன.

 1. அதைப் பொறுத்து பொருத்து இது மாறும்.
 2. சொல்லின் ஈற்றில் nth, ndh ஒலி வர ந் என்று எழுதுவது தவறு. ந்து என்று எழுதுவது இலக்கணப் படி சரியாக இருக்கும். ந்த் என்று எழுதுவதும் பரவலான பயன்பாட்டில் உள்ளது. எடுத்துக்காட்டு: முகுந்து - சரி; முகுந்த் - பரவலான பயன்பாடு; முகுந் - தவறு.
 3. தொழிற்நுட்பம் - தவறு; தொழிற்சாலை, தொழிற்கல்வி ஆகியவற்றில் தொழில்+சாலை, தொழில்+கல்வி என்று வரு சொல் முதலில் வல்லினம் வருவதால் ல், ற் ஆகும். தொழில்+நுட்பம் என்பதில் நு வல்லினம் இல்லை என்பதால் தொழிற்நுட்பம் ஆகாது. தொழினுட்பம் என்பது இலக்கணப்படி சரியான புணர்ச்சி. ஆனால், தொழில்நுட்பம், தொழில் நுட்பம் என்று சொற்களைச் சேர்க்காமல் எழுதுவது பரவலான வழக்கத்தில் உள்ளது.
 4. முயற்சிக்கிறேன் - தவறு. வளர் - வளர்ச்சி - வளர்கிறேன் என்றை ஒப்பிட்டால் முயல் - முயற்சி - முயல்கிறேன் சரி என அறியலாம். வளர்ச்சிக்கிறேன் - தவறு :)
 5. கற்ப்பிக்கிறேன், விற்க்கிறேன் - தவறு. ற்- க்கு அடுத்து இன்னொரு மெய் வராது.
 6. அதனால்த் தான்-தவறு; அதனால் + தான் என்பது அதனாற்றான் என்றே வரும். ஆயினும் அதனால் தான் என்று சொற்களைச் சேர்க்காமல் எழுதுவதும் பரவலான வழக்கத்தில் உள்ளது.
 7. சொல்லின் முதல் எழுத்தாக மெய் வரக் கூடாது. எ.கா: ப்ரச்சாரம், ஸ்வயம்வரம்
 8. சொல்லின் இடையில் உயிரெழுத்து வரக் கூடாது. இப்பிழை பெரும்பாலும் சொற்சுருக்கங்களைப் பயன்படுத்தும்போது நிகழும். எ.;கா: ஆர்ஐயூ
 9. முன்னணி என்பதே சரி, முன்ணணி என்பது தவறு
 10. முண்ணாண் (முள் + நாண்) என்பதே சரி. முண்ணான் என்பது தவறானது.
 11. பெயர்ச்சொற்குறிகள் - ஒரு, ஓர், அந்த (a, an, the) கவனம் தேவை,
  • '"ஓர்"' என்பது உயிர் எழுத்தின் முன்னமும், '"ஒரு"' என்பது உயிர்மெய் எழுத்தின் முன்னமும், ஒருமையைக் குறிக்க பயன்படுத்தப்படும்.

சொற்கள்தொகு

பிழையான சொற்கள் சரியான சொற்கள் குறிப்பு
பின்னனி பின்னணி Background என்பதற்கு இணையான சொல் தமிழ் விக்சனரி
மேற்க்கோள்கள் மேற்கோள்கள் References என்பதற்கு இணையான சொல் தமிழ் விக்சனரி
வெளியினைப்பு வெளியிணைப்பு External Link என்பதற்கு இணையான சொல்
உசாத்துனை உசாத்துணை குறிப்பெடுக்க உதவிய/துணைநின்ற நூல்கள் என்பதற்கு இணையான சொல் தமிழ் விக்சனரி
முயற்ச்சி முயற்சி
அருகாமையில் அருகில்
தொலைகாட்சி தொலைக்காட்சி
நிகழ்சிகள் நிகழ்ச்சிகள்

இலக்கண விதிகள்தொகு

 • மற்றும்
அவன் மற்றும் அவள் என்றெழுதுவது தவறு. அவனும் அவளும் என்று எழுத வேண்டும். எடுத்துக்காட்டு:
 1. அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்பது தவறான நடைமுறை. அறிவியலும் தொழில் நுட்பமும் என்பது சரியானது.
 2. பிரதமர் மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர் என்று எழுதுவது தவறு. பிரதமரும் அவரது உறவினரும் சென்றனர் என்று எழுதுவதும் தவறு. “பிரதமரும் அவர்தம் உறவினரும் சென்றனர்” என்று எழுதுவதே சரி.
 • அல்லது
இது அல்லது அது என்றெழுதுவது தவறு. இதுவோ அல்லது அதுவோ, இதிலோ அல்லது அதிலோ என்றவாறு எழுதலாம்.

எடுத்துக்காட்டு:

 1. காய்கள் அல்லது பழங்களைக் கேட்கலாம். - தவறு
காய்களையோ பழங்களையோ கேட்கலாம். - சரி
 1. பேருந்தில் அல்லது மிதிவண்டியில் செல்லலாம். - தவறு
பேருந்திலோ மிதிவண்டியிலோ செல்லலாம். - சரி.