விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல்

தமிழ் விக்கிப்பீடியா ஒரு கூட்டாக்கம். இது நெறியுடன் இயங்குவதற்குத் தேவைப்படும் கொள்கைகளை அனைவரும் முன்னெடுக்கலாம்.

  • உரிய கொள்கைகள், வழிகாட்டல் இல்லாத நிலையில் தேவைப்படும் கொள்கையை யார் வேண்டுமானாலும் முன்னெடுக்கலாம். இதற்கு நீங்கள் நெடுநாள் பங்களிப்பாளராகவோ முனைப்பான பங்களிப்பாளராகவோ நிருவாகியாகவோ இருக்கத் தேவை இல்லை. ஆனால், விக்கிப்பீடியா எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய நல்ல புரிதலும் அதற்கு ஏற்ப இயங்குதலும் தேவை.
  • முன் கூட்டியே தேவையற்ற பல கொள்கைகளை வகுக்காதீர்கள். ஒரே ஒரு முறை நேர்ந்த திருத்தக் கூடிய பிழைகளுக்காகவும் எளிதில் மீண்டும் நிகழாமல் காத்துக் கொள்ளக்கூடிய பிழைகளுக்காகவும் புதிய கொள்கைகளை உருவாக்க முனையாதீர்கள். இறுக்கமான கொள்கைகளைக் காட்டிலும் நெகிழ்வு கூடிய வழிகாட்டல்களே தேவை.
  • நீங்கள் முன்மொழிய விரும்பும் கொள்கைக்கு பிற மொழி விக்கிப்பீடியாக்களில் தக்க முற்காட்டு இருக்கிறதா என்று பாருங்கள். அதே வேளை, விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்களைத் தவிர மற்ற அனைத்தும் ஒவ்வொரு விக்கிமீடியா திட்டத்துக்கும் தன்னாட்சியுடன் வரையறுக்க வல்லவை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனவே, பிற விக்கிப்பீடியாக்களில் இருக்கிறது என்பதற்காகவே இங்கு ஒரு கொள்கையைக் கொண்டு வரத் தேவை இல்லை. அதைப் போலவே, பிற விக்கிப்பீடியாக்களில் இல்லை என்பதற்காகவே நமக்குத் தேவைப்படும் ஒரு கொள்கையை உருவாக்காமலும் இருக்கத் தேவை இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் சூழல் கணக்கில் கொள்ளப்படுகிறதா என்பதே இங்கு முக்கியம்.

கொள்கை உருவாக்குவதற்கான வழிமுறை

  • நீங்கள் உருவாக்க விரும்பும் கொள்கைக்கான தேவையை விளக்கி அக்கொள்கைக்கான விக்கிப்பீடியா பேச்சு பெயர்வெளியில் குறிப்பிடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு, விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள கட்டுரைகள் பாருங்கள். இவ்வாறு குறிப்பிடும் முன் வேறு பெயர்வெளிகளில் தொடங்கிய உரையாடலைக் கவனத்தில் எடுப்பதும் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்கள் ஒன்று கூடி ஒரு பரிந்துரையை வைப்பதும் வரவேற்கத்தக்கது.
  • இவ்வாறு குறிப்பிட்ட பின் மற்ற பயனர்களின் கருத்துகளைக் கோருங்கள். தொடர்புடைய பயனர்களின் பேச்சுப் பக்கங்கள், கொள்கையின் தேவையை உணர்த்திய முந்தைய உரையாடல் பக்கங்களில் புதிய கொள்கை முன்மொழிவு குறித்து குறிப்பிடலாம். எல்லா புதிய கொள்கைகளுக்கும் ஆலமரத்தடியில் குறிப்பிடத் தேவை இல்லை. தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை முன்மொழிவு என்றால் தள அறிவிப்பிலும் குறிப்பிடக் கோரலாம்.
  • பயனர்களின் கருத்துகளைத் தொகுத்து கொள்கையின் முதல் வரைவை எழுதுங்கள். இந்த முதல் வரைவு குறித்த மாற்றுக் கருத்துகளைக் கோருங்கள். ஒரு வார காலம் வரைக்கும் மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லை என்றால், இந்த முதல் வரைவையே முறையான கொள்கையாக திட்டப்பக்கத்தில் அறிவிக்கலாம்.
  • முதல் வரைவுக்கு மாற்றுக் கருத்துகள் வரும் நிலையில், தேவையான மாற்றங்களைச் செய்து இரண்டாம் வரைவை முன்வையுங்கள். ஒரு வார காலம் வரைக்கும் மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லை என்றால், இந்த இரண்டாம் வரைவையே முறையான கொள்கையாக திட்டப்பக்கத்தில் அறிவிக்கலாம்.
  • தொடர்ந்து மாற்றுக் கருத்துகள் எழும் நிலையில், கொள்கையில் உரிய மாற்றம் கொண்டு வர கொள்கை முன்மொழிவில் அறிமுகம் உள்ள பிற பயனர்களின் உதவியை நாடுங்கள். மாற்றுக் கருத்து உள்ளோரிடம் தொடர்ந்து உரையாடுங்கள்.
  • மேற்கண்ட செயற்பாடுகளை அடுத்து கொள்கையின் மூன்றாம் வரைவை முன்வையுங்கள். இதிலும் மாற்றுக் கருத்துகள் எழும் நிலையில் வாக்கெடுப்பு மூலம் கொள்கையை நிறைவேற்ற முனையுங்கள்.

இயன்ற வரை இணக்க முடிவு, கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய கொள்கைகளை உருவாக்குவது நன்று. எடுத்த எடுப்பில் வாக்கெடுப்பில் இறங்காதீர். தேவைப்பட்டால், சில காலம் பொறுத்திருந்து மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கொள்கை முன்மொழிவில் மாற்றங்களைச் செய்து மீண்டும் இணக்க முடிவு நோக்கி நகருங்கள்.