விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சீனிவாசன்
த. சீனிவாசன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பல கட்டற்ற மென்பொருட்களை உருவாக்குவதுடன் கட்டற்ற மென்பொருள் தத்துவம் குறித்த விழிப்புணர்வையும் கூட்டி வருகிறார். 2016ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் எழுத்துணரியையும் விக்கி மூலத்தையும் இணைக்க இவர் எழுதிய OCR4wikisource நிரல், இந்திய மொழிகளின் விக்கிமூலம் திட்டத்தில் ~9,00,000 பக்கங்களைச் சேர்க்க உதவியது. பொதுவகத்தில் படங்களை மொத்தமாகப் பதிவேற்றுதல், பல்வேறு விக்கி துப்பரவுப் பணிகள் செய்தல் என இவர் எழுதிய நிரல்கள் பயன் மிக்கவை. தமிழில் கட்டற்ற உரிமையில் தமிழக வரைபடங்கள், உரைதிருத்தி, உரை ஒலி மாற்றி ஆகியவற்றை உருவாக்க, ஆய்வுகளைச் செய்து வருகிறார். விக்கிமூலம் மற்றும் பிற திட்டங்களுக்கு இவரது பங்களிப்பைப் பாராட்டி, 2016ம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டுள்ளது.