விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்ப்பரிதி மாரி
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி தமிழ்நாட்டின் சின்னசேலத்தைச் சேர்ந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2011 முதல் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார். தொடர் பரப்புரை, ஊடகப் பங்களிப்புகள், விக்கிமேனியா, படிமங்கள் பதிவேற்றம் போன்ற களங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.
தமிழ் இணையக்கல்வி கழகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது தமிழக அரசு, அரசு சார் வெளியீடுகளை படைப்பாக்க பொதும உரிமையில் வெளியிடவும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் படைப்பாக்க பொதும உரிமையில் இணையத்தில் வெளியிடவும்,பக்க அடிப்படையில் 58 ஆம் இடத்தில் இருந்த தமிழ் விக்கி மூலத்தை எட்டாம் இடத்திற்குக் கொண்டு வரவும் பெரும்பங்களித்தவர். கட்டற்ற முறையில் ஒளிப்படங்கள், காண்பொலிகள், ஒலிக்கோப்புகள் போன்றவற்றை பொதுவகத்தில் பதிவேற்றியுள்ளார்.
செயற்கைக்கோள் வாயிலாக 40 ஆயிரம் மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியையும், தமிழ்நாட்டரசின் நிதியுதவிடன் 100 கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவைகளைத் தொடங்கி அதன்மூலம் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியளித்துள்ளார். இலண்டன், மெக்சிகோ நகரம், இலெசினோ லாரியோ (இத்தாலி), ஆகிய இடங்களில் நடந்த விக்கிமேனியா மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரையாற்றியுள்ளார்.