விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 17, 2010
ராசிதீன் கலிபாக்கள் எனப்படுபவர்கள் முகம்மது நபி அவர்களுக்குப் பிறகு, இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்களைக் குறிக்கும். கிபி 632 முதல் 661 வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. முகம்மது நபியின் மறைவுக்கு பிறகு அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை யார் ஆளுவது என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது ஒருசாரார் முகம்மதுவின் நண்பரும், மாமனாருமான அபூபக்கரை ஆதரித்தனர். மற்றொரு சாரார் மதீனா வாசிகளை ஆதரித்தனர். இவ்வாறான ஒரு சிறிய சர்ச்சைக்குப் பிறகு அபூபக்கர் அடுத்த கலிபாவாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்குப்பிறகு உமர், உதுமான், அவருக்குப் பின் கடைசியாக அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராசித்தீன் கலிபாக்களின் ஆட்சி அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாட்சியாக இருந்தது. இவர்களின் ராணுவம் பைசாந்தியம், பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இருந்த அநேக பேரரசுகளை வெற்றிக்கொண்டது. இவர்களது ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கு, ஈரான், சிரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகள் ஆகிய அனைத்தும் வந்தன. அலியின் படுகொலைக்குப்பிறகு ஆட்சிக்கு வந்த முஆவியாவின் அரசு உமய்யா கலிபாக்கள் ஆட்சி என அழைக்கப்படுகின்றது. மேலும்
சுவாமி ஞானப்பிரகாசர் (1875-1947) ஈழத்தைச் சேர்ந்த பன்மொழிப் புலவர், தமிழறிஞர். தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த பரராசசேகரனின் வழித்தோன்றலான இவர் இயற்பெயர் வைத்தியலிங்கம். ஐந்து வயதாக இருந்த போது ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்று அரச எழுத்தராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். 1895 இல் யாழ்ப்பாணம் குரு மடத்தில் சேர்ந்து, 1901 இல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். 50 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் எடுத்துக் காட்டினார். மேலும்..