விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 20, 2013
கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி என்பது கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் ஒட்டோமான் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிகழ்வாகும். 21 வயது நிரம்பிய ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் இந்நகரை முற்றுகையிட்டு கைப்பற்ற ஆணையிட்டான். இந்நகரைக் கிழக்கு உரோமைப் பேரரசு என்றழைக்கப்பட்ட பைசாந்தியத்தின் அரசன் பதினொன்றாம் கான்சுடன்டைன் காத்து நின்றான். இம்முற்றுகை ஏப்பிரல் 6, 1453 முதல் மே 29, 1453 வரை நடந்தது. கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி 1500 ஆண்டுகள் நீடித்த உரோமைப் பேரரசுக்கு முடிவு கட்டியது. இந்நகர வீழ்ச்சி ஒட்டோமான் பேரரசு ஐரோப்பா நோக்கி முன்னேறுவதற்குக் குறுக்கே நின்ற சிறு தடையை நீக்கிவிட்டது. கான்சுடன்டினோப்பிளைக் கைப்பற்றியதும் ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் ஒட்டோமான் பேரரசின் தலைநகராக இருந்த ஏடிரியானோபிளை கான்சுடன்டினோப்பிளுக்கு மாற்றினார் . கான்சுடன்டிநோப்பிளின் வீழ்ச்சியும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த கிழக்கு உரோமைப் பேரரசின் (பைசாந்தியப் பேரரசு) வீழ்ச்சியும் ஐரோப்பிய இடைக்காலத்தின் முடிவு என சில வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும்...
நியமவிலகல் அல்லது திட்ட விலக்கம் (standard deviation, σ) என்பது, ஒரு தரவிலுள்ள ஒவ்வொரு மதிப்பும் அத்தரவின் சராசரி மதிப்பிலிருந்து எவ்வளவு விலகி உள்ளது என்பதைக் கணிப்பதாகும். இக்கருத்துரு, நிகழ்தகவுக் கோட்பாடு, புள்ளிவிவர தொகுப்பாக்கம், நிகழ்தகவுப் பரவல் (probability distribution) ஆகிய பல துறைகளில் அடிப்படைக் கருத்தாகப் பயன்படுகின்றது. நியமவிலகல், பரவற்படியின் வர்க்கமூலமாக அமைகிறது. பரவற்படி போன்று இல்லாமல், தரவின் அலகிலேயே அமைவது, நியமவிலகலின் ஒரு சிறப்புப் பண்பு. தரவின் ஒவ்வொரு தரவுப் புள்ளியும் அத் தரவின் சராசரியில் இருந்து மாறுபடும் அளவினை வர்க்கப்படுத்தி, பின் அவ்வாறு கிடைக்கும் வர்க்கங்களின் சராசரியின் வர்க்கமூலம் காணக் கிடைக்கும் அளவு, அத்தரவின் நியமவிலகல் ஆகும். ’மாறுபாடு’ அல்லது ’பரவல்’ ன் அளவீடாக நியமவிலகல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகச், சராசரியிலிருந்து தரவு எந்தளவிற்கு மாறுபட்டிருக்கிறது என்பதை நியமவிலகலின் மதிப்புக் காட்டுகிறது. குறைவான நியமவிலகல், தரவுப் புள்ளிகள் சராசரிக்கு மிகவும் நெருங்கிச் செல்பவையாக இருப்பதையும், அதிக அளவு நியமவிலகல் தரவு பரந்து விரிந்திருக்கிறது என்பதையும் காட்டும். மேலும்...