விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 28, 2012

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. மேலும்...


ஜார்ஜ் ஜோசப் கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர்; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரைச் சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாக பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர். 1918ஆம் ஆண்டில் சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காக தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாடுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை கொண்டதால் மதுரை தொழிலாளர் சங்கத்தின் மூலம் கூலி உயர்வு, வேலை நேரக் குறைப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதுடன் பல வழக்கினையும் நடத்தியுள்ளார். மேலும்...