விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 3, 2008

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.


மிளா (Cervus unicolor) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். மான் இனத்திலேயே புவிப்பரவல் அதிகமுடையது மிளா ஆகும். இவை இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தீவுக்கூட்டங்கள் தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன. இம்மான்கள் பல்வேறு வகையான சூழியல் கூறுகளிலும் வாழும் தன்மையைக் கொண்டவை. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானின் முற்காடுகளிலும், இமயமலையின் கருவாலிக் காடுகளிலும், தீபகற்பத்தின் ஈரமான இலையுதிர், பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா மாநிலங்களிலும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றது. இம்மான்களுக்கு "கடம்பை மான்" என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் இதன் இந்தி பெயரான "சாம்பார்" என்பதையே பின்பற்றி அழைக்கிறார்கள்.


யுனிக்ஸ் ஒரு கணினி இயக்கு தளம் ஆகும். இது 1960 மற்றும் 1970களில் ஏ. டி. & பெல் ஆய்வுக்கூடத்தில் கென் தாம்சன், டென்னிஸ் ரிட்சி ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது. யுனிக்ஸ் இயக்கு தளத்தை யுனிக்ஸ் ஷெல் (shell), யுனிக்ஸ் கருனி (kernal) என இரண்டாகப் பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.