விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 3, 2011
கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது. இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர் போன இடமாக இருந்தது. கடலோர நெடுஞ்சாலை என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்தையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறப்பு அந்திரேயாவும், மற்றும் யோவான், அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபும் ஆவர். கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார். மேலும்..
காமினி ராய் (1864–1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. கிழக்கு வங்கத்தில் பிறந்த இவர் இந்தியாவிலேயே முதல் பெண் முதுகலை சிறப்புப் பட்டதாரி. தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைப் புத்தகம் அலோ ஓ சாயா 1889ல் வெளியானது. பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். பன்முக முன்னேற்றமும் திறமைகளை வளர்ப்பதும்தான் பெண் கல்வியின் நோக்கமாக அமைய வேண்டுமென கல்கத்தாவிலுள்ள ஒரு பள்ளியில் பேசும்போது கூறினார். 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1926ல் முதல் முறையாக வங்காளப் பெண்கள் வாக்களித்தனர். 1922-23 இல் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளிலும் சமசுகிருத இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கொல்கத்தாப் பல்கழைக்கழகம் ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் வழங்கி இவரைக் கெளரவித்தது. மேலும்..