விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 25, 2010

திலாப்பியா (Tilapia) ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர்நீரிலும் வாழ வல்லது. மீன் வளர்ப்பு முறையின் மூலம் தற்பொழுது (2010) ஆண்டொன்றுக்கு இவ்வகை மீன்கள் சுமார் 27 இலட்சம் (2,700,000) டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழில் திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறுபெயர்களாகும்.


செமினிவிரிடீ (geminiviridae) என்பவை பயிர்களைத் தாக்கும், ஓரிழை கொண்ட வட்ட வடிவிலான டி.என்.ஏ தீ நுண்மம் ஆகும். இவை தோராயமாக 2.6 kb- 2.8 kb வரை டி.என்.ஏ வரிசைகள் கொண்டவை. மேலும் ஒற்றையாகவோ (monopartite) இரட்டையாகவோ (bipartite) அமைந்து இருக்கும். இவற்றின் புற உறை (capsids) முற்றுப் பெறாத இரு இகோச (icosa) தலைகளைக் கொண்டுள்ளதால், இவற்றுக்கு செமினி நுண்மங்கள் எனப் பெயர். புற உறைகள் 18-20 நானோமீட்டர் (nm) சுற்றளவும், 30 nm நீளமும் கொண்டவை. இரட்டைப் பிரிவு கொண்ட நுண்மங்களின் (DNA A, DNA B) இழைகள் ஒவ்வொன்றும் தனியாக புற உறைகளால் சூழப்பட்டு இருக்கும். பொதுவாக களைகளில் (weeds) இவை செரிமையக்கப்பட்டு, பின் மெதுவாக அதனின் இழையில் ஏற்படும் மாற்றங்களால் உணவுப்பயிர்களைத் தாக்குகின்றன. மேலும், தன் இருப்பிடங்களுக்கு ஏற்ப தம்மை தகவமைப்பு ஏற்படுத்தும் தன்மையையும் இவை கொண்டுள்ளன. இதனால் இவற்றின் சிற்றினத்தைக் குறிக்கும் பொழுது, அவற்றின் ஊரைக் குறிபிட்டாக வேண்டும்.