விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 14, 2010

எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். இத்தகைய வேறுபாட்டுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன. இலங்கையின் வடபகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே இக் கட்டுரையில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் எனக் குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதி பலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.


உலகக்கோப்பைக் கால்பந்து 2010 அல்லது 2010 ஃபீஃபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகின்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இம்முறை முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுகின்றது. ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆப்பிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது. முதல்நாள் விழா 2010 ஜூன் 11 ஜோகானஸ்பேர்க்கில் ஆரம்பமாகியது. புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட 1500 பேர் இவ்விழாவில் பங்காளர்களாகப் பங்குபற்றிச் சிறப்பித்தனர். பார்வையாளர்களாக தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா, ஐநா செயலர் பான் கி மூன் உட்படப் பல தலைவர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.