விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 06, 2009

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.


தீயணைப்பான் எனப்படுவது குடியிருப்புக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தீப் பற்றல், பரவல்களை தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி. இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. முதலாவது, அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பான். இவற்றில் நீர், வளிமம் போன்ற அடிப்படை தீயணைப்புக் காரணிகள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்படுகின்றன. மற்றது, அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான். இவற்றில் அடிப்படை தீயணைப்பு காரணிகளான வேதிப்பொருள்கள் ஒரே உருளையின் இருவேறு கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்படுகின்றன. இவற்றின் தலை தாக்கப்படும்பொழுது இந்த கண்ணாடிக் குடுவை உடைந்து, இருவேறு வேதிப்பொருள்களும் ஒன்று சேர்கின்றன. இதனால் ஏற்படும் வேதிவினையால் உருவாகும் வேதிப்பொருளானது அதிக அழுத்தத்தில் விரைந்து வெளியேறி நெருப்பை அணைக்கிறது.