விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 12, 2010

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை சீனாவில் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இதுவே உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகக் கருதப்படுகிறது. அணை கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. இந்த அணைத் திட்டத்தால் மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாக கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள் மற்றும் பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின. மேலும்..


பனகல் அரசர் (18661928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவாந்தார்கள் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். 1917 இல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் அங்கம் வகித்தார். 1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். மேலும்..