விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 29, 2013

தேவசகாயம் பிள்ளை (படம்) என்பவர் கத்தோலிக்க கிறித்தவ திருச்சபையினால் "முத்திப்பேறு பெற்றவர்" என்று அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712, ஏப்ரல் 23 அன்று இந்து சமயக் குடும்பத்தில் பிறந்த நீலகண்ட பிள்ளை எனும் இவர் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைத் தழுவித் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்குக் "கடவுளின் கருணை" என்னும் பொருள்படும் "லாசர்" என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதுவே தமிழில் "தேவசகாயம்" என்று வழங்கப்படுகிறது. திருவாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி 1752, சனவரி 14 அன்று ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை எனுமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் உயிர் துறந்த இறந்த இடம் தேவசகாயம் மலை என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்குச் செல்லும் மக்கள் இறைவேண்டல்களை நடத்தத் தொடங்கினர். கத்தோலிக்க கிறித்தவர்களால் இவர் மறைச்சாட்சியாக கருதப்படுகின்றார். குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு மறைமாவட்ட கிறித்தவர்கள் இவருக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனை ஏற்றுக் கொண்ட கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக இவரை மறைச்சாட்சி என்றும் "முத்திப்பேறு பெற்றவர்" (அருளாளர்) என்று 2012, திசம்பர் 2 ஆம் நாள் அறிவிப்பு செய்தது. மேலும்...


ஆழிப்பேரலை அல்லது சுனாமி அல்லது கடற்கோள் என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள் சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. இங்கு "பேரலை" என்பது ஒரு நம்ப முடியாத உயர்அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கி செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும். ‘அலை' என்ற வார்த்தைக்கு “போல" அல்லது “அதே தன்மை கொண்ட என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன்" புலூக் என்பர். “அலோன்" என்ற வார்த்தைக்கு பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்" என்றும் சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைப்பர். மேலும்...