விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 27, 2008

கலைமான் (Blackbuck) இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். கலைமானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான், கருஞ்சிக் கிடாய் என்று பல்வேறு பெயர்கள் உள்ளன. இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணப்படுகின்றன. அத்துடன் அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாச் செல்லும் விலங்கு கலைமான் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 40-60 மைல் வேகத்தில் பாய்ந்து செல்லும்.


தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டது. மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் என்ற இந்தக் கட்டுரை அந்த வரலாற்றுப் பின்னணியை விபரிக்கிறது. மனித உரிமைகள் எனும் கருத்தேற்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் கொடூரங்களும் அனர்த்தங்களுமே மனித உரிமைகள் பற்றிய வினாக்கள் மீது அரசுகளின் கவனத்தைக் குவியச் செய்தன. குறிப்பாக அளவுக்கதிகமான நாசிசவாதத்தின் ஆட்சி மனித உரிமைகள் பற்றிய கொள்கையில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்துயது. இவ் யுத்தங்களின் பிற்பட்ட காலத்தில் சர்வதேச மட்ட உணர்வுப் பரிமாணத்தில் தனிமனித உரிமைகளின் மீதான மீறுகைகளை மிக உறுதிப்பாடான விதத்தில் கண்காணிப்பதற்கான ஓர் அவசரத் தேவைப்பாட்டினை அக்காலகட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டின.


மலையாள எழுத்துமுறை என்பது மலையாள மொழியினை எழுதப் பயன்படுதப்படும் அபுகிடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களில் இருந்து தோன்றின. எனினும் பழங்காலத்தில் மலையாளம் வட்டெழுத்து முறையிலும் எழுதப்பட்டு வந்தது. வடமொழிக் கலப்பு அதிகமானதால் சமஸ்கிருத ஒலிகளை துல்லியமாக குறிப்பிடுவதற்கு கிரந்தம் சார்ந்த எழுத்து முறைக்கு மாறியது. ஏனெனில் வட்டெழுத்து வடிவங்களில் சமஸ்கிருத ஒலிகளை குறிப்பதற்கான குறியீடுகள் இல்லை.