புல்வாய்

மான் வகை
(கலைமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புல்வாய்
Blackbuck
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஆர்டியோடாக்டைலா
குடும்பம்:
போவிடே
துணைக்குடும்பம்:
ஆண்டிலோபின்னே
பேரினம்:
ஆண்டிலோப்

பாலாசு, 1766
இனம்:
ஆ. செர்விகேப்ரா
இருசொற் பெயரீடு
ஆண்டிலோப் செர்விகேப்ரா
(லின்னேயஸ், 1758)
ஆண், பெண் புல்வாய்கள்.

புல்வாய் (Blackbuck) என்பது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது.[1] இதுதவிர புல்வாய் மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன.[2] இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணப்படுகின்றது. அத்துடன் அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் விலங்கு புல்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 கிமீ (40-60 மைல்) வேகத்தில் பாய்ந்து செல்லும்[3]. இவ்விலங்கு ஆந்திரப்பிரதேச மாநில விலங்காகும்.

உடல் அமைப்பு

தொகு

இம் மானினத்தில் மிகுந்த பால் ஈருருமை உண்டு, உருவத்தில் பெண்னைவிட ஆண் பெரியது. ஆண் சராசரியாக 34 முதல் 45 கிலோ வரையிலும்; பெண் 31 முதல் 39 கிலோ வரையிலும் எடை கொண்டிருக்கும்;[4] பருவமடைந்த ஆண் புல்வாய் கறுத்த உடல்மயிர்ப் போர்வையும், திருகுக்கொம்புகளையும் (சுரிக்கொம்பு) கொண்டிருக்கும். சில ஆண் புல்வாய்களின் உடல்மயிர்ப் போர்வை பருவத்திற்கேற்ப பழுப்பு முதல் கறுப்பு நிறமாக மாறும். இளங்கலைகளும், பெண் புல்வாய்களும் பழுப்பு நிற உடல்மயிர் போர்வையுடன் காணப்படும். பெண் புல்வாய்களுக்கு கொம்புகள் இல்லை[5].

சூழியல்

தொகு

புல்வாய்கள் குழுவாக வாழும் தன்மை கொண்டவை. இவை அகன்ற சம தரை வெளிகளை வாழிடமாகக் கொண்டவை. இவ்விடங்களில் விளையும் புற்களையே உணவாக உட்கொள்ளும். இதை தவிர்த்து சில வேளைகளில் காடுகளுக்கு அருகிலுள்ள வயல்களில் உள்ள பயிர்களையும் மேயும்[6]. புல்வாய்கள் உணவிற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பெரும்பாலும் அகன்ற சம தரை வெளிகளையே தேர்வு செய்கின்றன; ஏனெனில், இவ்விடங்களில் கொன்றுண்ணிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இவ்விடங்களைத் தேர்வு செய்கின்றன. இவை தொலைவில் இருந்தே எதிரிகளின் வரவைக் கவனித்துவிடும். ஒரு கிழ புல்வாயே மந்தையின் காவலாக இருக்கும். இப்புல்வாய் எதிரிகளின் வரவை எழும்பித் துள்ளி எல்லா மான்களையும் எச்சரிக்கும்; உடனே மந்தையிலுள்ள மான்கள் அனைத்தும் உயர்ந்து எழுந்து துள்ளி ஒடும். இவை ஏறக்குறைய 3 மீ (10 அடி) உயரம் வரை செங்குத்தாக துள்ளும். இவ்வின மான்கள் வெப்பம் மிகுந்த கோடை காலங்களில் பல்வேறு உடற்செயலியல், நடத்தை மாற்றங்கள் மூலம் நீர் பற்றாக்குறை தங்கள் வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகவும் குறைந்த அளவில் சிறுநீர், மலம் கழித்தல், பகற்பொழுதில் நடவடிக்கைகள் ஏதுமின்றி இருத்தல்.

வியத்திவரலாறும் இனப்பெருக்கமும்

தொகு

இருபாலும் தன்னுடைய 1.5 முதல் 2 ஆண்டுகளில் பருவமடைகின்றன. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் நடந்தாலும் மார்ச்சு முதல் மே வரையிலும் ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலும் மிக கூடுதலான இனப்பெருக்கங்கள் நடக்கின்றன[7]. இனப்பெருக்க காலத்தில் ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும். சராசரியாக ஒரு ஆணின் எல்லை 1 முதல் 17 ஹெக்டர் வரையிலும் இருக்கும்[8][9][10]. ஆண் தன்னுடைய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான புல்வாய்களை அதிக காலம் வைத்திருக்கும். ஆண் தன்னுடைய எல்லையை 2 வாரம் முதல் 8 மாதம் வரை பாதுகாக்கும். இவை தங்களுடைய எல்லைகளை சிறுநீர், மலம், ஒரு வகையான தூண்டுசுரப்பை மூலம் குறித்து வைத்துக்கொண்டு[11], அந்த எல்லையைச் சுற்றிச் சுற்றி வரும். அப்பொழுது வேறொரு ஆண் தன் எல்லையில் நுழைந்தாலோ வேறு வகையான எல்லைச் சிக்கல்கள் வரும்பொழுதோ, தன்னுடைய தோற்றத்தை வைத்தும் எச்சரிக்கை சைகைகள் எழுப்பியும் எல்லையைப் பாதுகாக்கும். மிகவும் அரிதாகக் கொம்புகளைக் கொண்டு முட்டி மோதி சண்டைகள் நடக்கும். இதன் சராசரி ஆயுட்காலம் சுமார் 10-12 ஆண்டுகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. புல்வாய்கள் ஒரு ஆணின் எல்லையில் நுழையும் முன்பு அங்கிருக்கும் சிறுநீர், மலத்தை தூண்டுசுரப்பை நுகர்ந்து அந்த எல்லைக்குள் செல்வது குறித்து முடிவு செய்யும்.

இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 5 மாதங்கள் ஆகும். தாய் பேறுகாலத்திற்கு பிறகு ஒரு குட்டியை ஈன்றெடுக்கும். குட்டி ஈன்ற இரண்டு வாரங்களில் தாய் அடுத்த சினைக்குத் தயாராகும். ஈன்ற குட்டியை தாய் புற்களால் ஆன படுக்கையில் படுக்கவைத்திருக்கும். மேலும் ஒரு மாதத்திற்கு மிக தொலைவான இடங்களுக்கு குட்டியை அழைத்துச் செல்லாது. ஆண் புல்வாய்கள் குட்டிகளின் பராமரிப்பில் ஈடுபடா.

காப்பு நிலை

தொகு

இவ்விலங்கின் வாழ்விடம், புல்வெளிகள் திருத்தப்பட்டு பயிர் சாகுபடி செய்யப்படுதல், கட்டிடம் கட்டுதல் போன்ற செயல்களால் மிகவும் பிளவு பட்டுள்ளது. தவிர, காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் புல்வாய்களின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் ஆகியிருக்கின்றன. மேலும், இவ்விலங்கின் வாழ்விடம் சீர் கெட்டமையால் இவை அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் உழவர்களாலும் கொல்லப்படுகின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் புல்வாய்களின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தல் ஆகும். முற்காலத்தில் புல்வாய்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. இன்று அங்கு 20,000 க்கும் அதிகமான புல்வாய்கள் காணப்படுகின்றன.

காணப்படும் இடங்கள்

தொகு

படக்கோவை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி; கருமான்; "இரலையுங் கலையும் புல்வாய்க்குரிய (தொல். பொருள் 600); "இரலை நன்மான் இனம் பரந்தவை போல்" (அகநா. 194)
  2. கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 1974
  3. மா. கிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன்), 2004. மழைக்காலமும் குயிலோசையும். காலச்சுவடு பதிப்பகம். சென்னை
  4. Ranjitsinh, M. K. 1989. The Indian Blackbuck. Natraj Publishers, Dehradun.
  5. Prater, S. H. 1971. The book of Indian animals. 3rd ed. Bombay Natural History Society, Bombay. Pp. 324.
  6. Manakadan, R. and Rahmani, A. R. 1998. Crop damage by blackbuck (Antilope cervicapra) at Rollapadu Wildlife Sanctuary, Andhra Pradesh Society. J. Bombay Nat. Hist. Soc. 95, 408-417.
  7. Schaller, G. B. 1967. The deer and the tiger. The University of Chicago Press, Chicago. Pp. 370.
  8. Isvaran, K. 2003. The evolution of lekking: Insights from a species with a flexible mating system. Ph.D. Dissertation, University of Florida, Gainesville.
  9. Mungall, E. C. 1978. The Indian Blackbuck Antelope: A Texas View. Kleberg Studies in Natural Resources, College Station, Texas, USA.
  10. Prasad, N. L. N. S. 1981. Home range, dispersal, and movement of blackbuck (Antilope cervicapra) population in relation to seasonal change in Mudmal and environs. Ph. D. dissertation, Dept. of Biosciences, Saurashtra University, Rajkot, India.
  11. Isvaran, K. and Jhala, Y. V. 2000. Variation in lekking costs in blackbuck (Antilope cervicapra): relationship to lek-territory location and female mating patterns. Behaviour 137, 547-563.
  12. "CITIZEN'S CHARTER – 2006" (PDF). Environment and Forests Department. p. 14. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
  13. http://sites.google.com/site/maidenahalli/intro

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்வாய்&oldid=3630513" இலிருந்து மீள்விக்கப்பட்டது