விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 13, 2009

திருடப்பட்ட தலைமுறைகள் (Stolen Generations) எனப்படுவது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் அப்போதைய அரசுகளின் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய கிட்டத்தட்ட 1869 முதல் (அதிகாரபூர்வமாக) 1969 வரையான காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் தலைமுறைகளை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயராகும். 2008இல் பிரதமர் கெவின் ரட் இந்நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.


எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் வேதிப்பொருள் வழிப்பட்ட தொடர்பாடலானது மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவற்றின் எண்ணிக்கை உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.