விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 17, 2013

மெக்சிக்கோ அமெரிக்கப் போர் என்பது 1846-1848 ஆண்டுகளில் மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைக் குறிக்கும். 1845ம் ஆண்டு அமெரிக்கா டெக்சாசை தன்னுடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து மெக்சிக்கோ இப்போரை நடத்தியது. 1836 ல் டெக்சாசு மெக்சிக்கோவுக்கு எதிராகப் புரட்சி நடத்தி மெக்சிக்கோவில் இருந்து பிரிந்தாலும் மெக்சிக்கோ டெக்சாசைத் தன்னுடைய பகுதியாகக் கருதியது. 1846ன் வசந்த காலத்திலிருந்து 1847ன் இலையுதிர் காலம் வரை பெரும் போர் நடைபெற்றது. அமெரிக்கப் படைகள் விரைவாக நியு மெக்சிக்கோவையும் கலிபோர்னியாவையும் கைப்பற்றின. வடகிழக்கு, வடமேற்கு மெக்சிக்கோவின் சில பகுதிகளையும் அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. அமெரிக்கக் கப்பற் படையின் பசிபிக்குப் பகுதிப் படை பாகா கலிபோர்னியாவின் தென் பகுதியிலுள்ள பல படைத்தளங்களைக் கைப்பற்றியது. மற்றொரு அமெரிக்கப்படை மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றியது. இப்போரில் அமெரிக்கா வெற்றிபெற்றது. மேலும்...


மாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. மேலும்...