விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 24, 2013
தமிழ்ப் பிராமி அல்லது தமிழி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிப்புரலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டது) மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், அயலிலுள்ள இலங்கை மற்றும் எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்ப் பிராமி வழமையான பிராமியிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எழுத்துமுறை தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுடனும் அவர்களின் சங்க இலக்கியம் போன்ற இலக்கிய உருவாக்கத்திலும் பயன்பட்டது. தமிழ்ப் பிராமி தற்போதைய தமிழ் எழுத்து முறை, மலையாள எழுத்துமுறை என்பனவற்றின் முன்னைய முறையான வட்டெழுத்தின் முன்னோடியாகும். மேலும்...
வே. தில்லைநாயகம் தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி - அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார். தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார். மாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் ஆனார். 1962 ஆம் ஆண்டில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். மேலும்...