விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 28, 2010

மலாக்கா மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றும், அதன் மூன்றாவது சிறிய மாநிலமும் ஆகும். இது தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இதன் தலைநகரம் மலாக்கா பட்டினம். இந்நகரை 2008 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது. தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமாத்திரா தீவும் இருக்கின்றன. மலாக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம். 1400ம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கம் பெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா அரசு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாக விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதி, சுமத்திராவின் வட பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தன. 1511 இல் போர்த்துக்கீசர் மலாக்காவைக் கைப்பற்றினர். பின்னர் 1641 இல் டச்சு ஆளுகைக்கும், 1824 இல் பிரித்தானியரின் ஆளுகைக்கும் உள்ளானது. 1948 இல் விடுதலை பெற்று மலாயாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1400 ஆம் ஆண்டிலிருந்து தொடக்க கால குடியேற்றவாசிகளாக மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்தின் பெரிய சமூகமாகவும் விளங்குகின்றார்கள். மேலும்..


வை. அநவரத விநாயகமூர்த்தி (1923-2009) தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்த முதுபெரும் ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணுவிலில் பிறந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத் 'தமிழ் வித்துவான்' முதலாவது தேர்வில் சித்தியடைந்திருந்தார். கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1954 ஆம் ஆண்டில் 'உதயம்' மாத சஞ்சிகையை வெளியிட்டார். தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வெளிவந்த இச்சஞ்சிகை ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியது. 1939 ஆம் ஆண்டில் தொடங்கிய எழுத்துப் பணி அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கடைசிக் காலத்தில் தனது பதினோராவது நூலாக 'ஆனந்த நடனம்' என்னும் நூலை எழுதிக் கொண்டிருந்தார். 'திரிவேணித் தமிழ்ச் செல்வம்' என்ற தமிழ்நாட்டுப் பாடநூலில் இவரது கட்டுரை இடம்பெற்றுள்ளது. அநவரத விநாயகமூர்த்தி ஐநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இணுவை மூர்த்தி தனது இறுதிக்காலங்களில் சர்வதேச சமய சுதந்திரத்திற்கான நிறுவனத்தின் கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். மேலும்..